சொந்தக் குழந்தைகளையே புரட்சிகள் விழுங்கும்: மற்றுமொரு சாட்சியமாகும் ஈரான்
ஜி.பி.ராமச்சந்திரனின் அசல் மலையாளக் கட்டுரை. அலிடா ஷாஹித்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு. ராஜசங்கீதன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்
‘புரட்சி அதன் குழந்தைகளை விழுங்கும்’ என்ற பிரபலமான சொற்றொடர் நவீனத்தையும் அதன் விழுமியங்களையும் வரையறுத்த பிரஞ்சு புரட்சிக்கு பிறகு ஒரு வகை தத்துவத்தன்மையையும் பெற்றிருக்கிறது. பிரஞ்சு புரட்சிக்கு பிறகு உலகின் பல பகுதிகளில் நேர்ந்த புரட்சிகள் பல தன்மைகளில் இச்சொற்றொடரின் உண்மைத்தன்மையை நிரூபித்திருக்கின்றன. 1979ம் ஆண்டில் நடந்த ஈரான் நாட்டு இஸ்லாமியப் புரட்சியும் விதிவிலக்கல்ல. 40 வருடங்கள் கழித்து ஈரான் இன்று எதிர்கொண்டிருக்கும் சூழல், “புரட்சியின் குழந்தைகள்” புரட்சியினாலேயே விழுங்கப்படும் வெவ்வேறு வழிகளை கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
தற்போதைய நிகழ்வுகளுக்கான தொடக்கம் செப்டம்பர் 16, 2022 அன்று நடந்தது. காவலில் இருந்த மஹ்சா (ஜினா) அமினி என்கிற 22 வயது ஈரானிய-குர்து பெண் கொல்லப்பட்டார். கஷ்ட் இ எர்ஷாத் என அழைக்கப்படும் ஈரானின் ஒழுக்க நெறி காவல் படையால் கைது செய்யப்பட்டவர் அவர். மரணத்துக்குப் பின்னான மூன்று மாதங்களில் ஒருநாள் கூட ஈரான் அமைதியாக இருக்கவில்லை. மஹ்சா அமினி தன் மரணத்தால் மூட்டிய கோபம் அனுதினமும் வளர்ந்தது. ஒவ்வொரு நாளும் புரட்சிகரப் போராட்டங்களும் கலகங்களும் நாடு முழுக்கப் பரவிக் கொண்டே இருந்தன. நாட்டில் அமைதியைக் கொண்டு வந்து விட்டதாக காண்பித்துக் கொண்டிருந்த ஆட்சியின் பாசாங்குகள் எல்லாமும் மறையத் தொடங்கின.
அமைதி நிலவுவதாக ஈரானிய அரசாங்கம் கொடுத்தத் தோற்றத்தை தொடர்ச்சியான வெகுமக்கள் போராட்டங்கள் மூழ்கடித்ததன. நிலைமை கைமீறுவதை ஈரானிய அரசாங்கம் தெளிவாக புரிந்து கொண்டது. மஹ்சா (ஜினா) அமினியின் மரணத்துக்குக் காரணமான ஒழுக்க நெறி காவல்துறை கலைக்கப்படுவதாக வெளியான ஈரானிய அட்டர்னி ஜெனரல் முகம்மது ஜஃப்ஃபர் மொண்டெசரியின் அறிவிப்பு இப்புரிதலுக்கான ஓர் உதாரணம்.
ஒழுக்க நெறி காவல்துறை கலைக்கப்படுமென ஈரானிய அரசாங்கம் பின்வாங்குவதை சரியாக புரிந்து கொள்வதற்கு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து வரும் போராட்டங்களின் பரிமாணங்களை புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய எழுச்சி (மஹ்சா அமினி சார்ந்த) குர்து சமூகம் அதிகமாக இருக்கும் ஈரானின் மேற்குப் பகுதிகளில் மட்டுமின்றி தென்கிழக்கு மாகாணங்களான சிஸ்டன் மற்றும் பலோச்சிஸ்தான் பகுதிகளிலும் நேர்ந்தது. தலைநகரமான டெஹ்ரான் கூட நீதி கேட்கும் போராட்டக் குரல்களால் கொந்தளிப்பு கொண்டது. ஈரானிய ராணுவம் மற்றும் காவற்படைகள் கட்டவிழ்த்த ஒடுக்குமுறையில் 448 பேர் உயிரிழந்திருப்பதாக ஒஸ்லோ நகரத்தில் இயங்கும் மனித உரிமை மையம் ஒன்று குறிப்பிடுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வத் தரவுகளோ ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறது. இதில் துயர்மிகு செய்தி என்னவென்றால் கொல்லப்பட்டவர்களில் 64 பேர் குழந்தைகள்.
ஒழுக்கநெறி காவல்துறை கலைக்கப்படுவது தங்களை அமைதிபடுத்தாது என்றும் போராட்டங்கள் தொடரும் என்றும் போராட்டக்காரர்கள் உறுதியாகக் கூறியிருக்கின்றனர். அவர்களது பிரதான முழக்கமான ஜின் ஜியான் ஆசாதி (பெண்கள், வாழ்க்கை மற்றும் விடுதலை) எல்லா போராட்டத் தளங்களிலும் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த முழக்கம் குர்து சமூகத்துக்குள்ளிருந்து தொடங்கியதென்றாலும் ஈரான் முழுவதும் ஏற்கப்பட்டு பிற நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. ஈரானிய அரசாங்கமோ, போராட்டங்கள் யாவும் எதிரி நாடுகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆதரவில் இயங்கும் சமூகவிரோதிகளால் நடத்தப்படுவதாக தொடர்ந்து கூறி வருகிறது. இந்தக் “கட்டமைக்கப்பட்ட குழப்ப நிலை” அலி காமெனியின் ஆட்சிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அது சாதித்து வருகிறது.
ஹிஜாப் சட்டத்தில் மாற்றமா?
சமீபத்தில் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) தலைமைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஹொசேன் சலாமி இது குறித்த தகவலை மீண்டும் கூறியிருந்தார். சகேதனில் IRGC-ன் ஐந்து பிரிவுகளில் ஒன்றான பசிஜ் படைப்பிரிவின் 10,000 சிப்பாய்களிடம் உரையாற்றும்போது இத்தகவலை அவர் குறிப்பிட்டார். அவரது உரைக்கு முன், பலோச்சிஸ்தான் மாகாணத்தில் மட்டும் 9 வயது சிறுமி உள்ளிட்ட 100 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அந்த இறப்புகளை முக்கியத்துவமற்ற விஷயமாக சலாமி உதறி விட்டு, போராட்டங்கள் உலகப் போருக்கு இட்டுச் சென்றாலும் கவலை இல்லை எனக் கூறி, அப்போரில் எதிரிகளை ஈரான் ஒழித்துக் கட்டுமென உறுதியாகச் சொன்னார். அவருடையக் கருத்துப்படி, இஸ்லாம் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் காஃபிர்களுக்கும் (மத நம்பிக்கை அற்றவர்கள்) இடையிலான நேரடி மோதல் இது. நம்பிக்கை அற்றவர் எவரும் இஸ்லாம் மதத்தை முன்னிறுத்தும் போராட்டத்தில் தப்பிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இத்தகைய வீரம் செறிந்த, தைரியம் நிறைந்த, உறுதிப்பாடு கொண்ட பேச்சுகள் மற்றும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து கொல்லப்படுதல் ஆகியவற்றை தாண்டி, ஈரானிய அரசாங்கமும் அதை இயக்கும் ஷியா மதவாதமும் போராட்டங்கள் கொடுக்கும் அழுத்தத்தில் ஆடிப் போயிருக்கின்றன என்பதே உண்மை. AFP என்கிற பிரான்சு நாட்டு நிறுவனத்தின் செய்தியறிக்கையின்படி, அரசாங்கம் ஒழுக்க நெறி காவல்துறையைக் கலைத்தது மட்டுமின்றி தலை முக்காடை (ஹிஜாப்) பெண்களுக்குக் கட்டாயமாக்கும் சட்டத்தையும் மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறதாம்.
முகம்மது ஜஃப்ஃபர் மொண்டெசரியின் கூற்றுப்படி, தேவையான சட்டத்திருத்தங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்கின்றன. எனினும் அரசாங்கமும் நாடாளுமன்றமும் பழமைவாதிகளின் உறுதியான பிடியில் இன்னும் இருப்பதால், இத்தகைய நடவடிக்கைகள் எந்தளவுக்கு பலன் கொடுப்பதாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஈரானியக் குடியரசுக்கும் இஸ்லாம் மதத்துக்கும் உள்ள உறவு, வார்க்கப்பட்ட இரும்பைப் போல் உறுதியாக இருக்குமென ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அறிவித்திருக்கிறார். தொலைக்காட்சியில் இப்படி குறிப்பிட்ட அவர், அரசாங்கம் வடிவமைத்துக் கொண்டிருக்கும் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வர நெகிழ்வுதன்மையும் காட்டப்படும் எனக் கூறியிருக்கிறார்.
அமெரிக்க ஆதரவு ஷா ஆட்சியை தூக்கியெறிந்த புரட்சிக்கு நான்கு வருடங்களுக்குப் பிறகு ஹிஜாப் சட்டத்துக்கான பணிகளை 1983ம் ஆண்டில் ஈரான் தொடங்கியது. சட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிற விவாதம் அப்போதே ஆரம்பித்து விட்டது. ஹிஜாப் கட்டாயமாக்கப்பட வேண்டுமென்றனர் பழமைவாதிகள். ஆனால் இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் இயங்கும் அரசாங்கத்தை ஏற்றுக் கொண்ட சீர்திருத்தவாதிகள், ஹிஜாப் அணிவதை தனிநபர் விருப்பத்துக்கு விட வேண்டும் என வாதிட்டனர். இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்டுகள், அணிகலன்கள் மற்றும் தொளதொளப்பான நவீன உடைகள் போன்றவற்றை அணியும் பெண்களின் விருப்பத்தைக் கட்டுப்படுத்தின பழமைவாதிகளின் கட்டளைகள். எனினும் சமீபத்திய மாற்றங்களுக்குப் பிறகு, இஸ்லாமிய ஈரான் ஒன்றிய மக்கள் கட்சி போன்ற சீர்திருத்த கட்சியும் ஹிஜாப் சட்டம் கட்டாயப்படுத்தப்படுவதை எதிர்த்து பொதுவெளியில் குரல் எழுப்பியிருக்கிறது. ஒழுக்க நெறி காவல்துறையை கலைக்கவும் அழைப்பு விடுத்திருந்தது. அமைதியான அறவழிப் போராட்டங்கள் நாட்டில் அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் அக்கட்சி கூறியிருக்கிறது.
கால்பந்து விளையாட்டில் அமைதிப் போராட்டம்
கத்தாரின் உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டும் போராட்டங்களின் பக்கம் உலகின் கவனத்தைக் குவிப்பதில் முக்கியப் பங்காற்றியது. தோஹா விளையாட்டு அரங்கில் ஈரான் அணி பங்கேற்ற முதல் பந்தயத்தில், தேசிய கீதத்தை பாடாமல் அமைதி காத்து ஈரானிய விளையாட்டு வீரர்கள் போராட்டத்துக்கான தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர். ஈரானில் அவர்களது நண்பர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள் மற்றும் சிரமங்கள் பற்றிய செய்தியை பலவழிகளில் அவர்களின் அமைதிப் போராட்டம் உலகுக்குக் கொண்டு சென்றது. அந்தப் பந்தயத்தில் 6-2 என்கிற கோல் கணக்கில் ஈரானை இங்கிலாந்து தோற்கடித்தது. விளையாட்டிலிருந்து ஈரான் அணி வெளியேறியது. ஈரான் நாட்டு மக்களின் பெரும்பகுதியினரால் அத்தோல்வி, அரசாங்கத்தின் தோல்வியாகக் கருதப்பட்டு பொதுவெளியில் கொண்டாடப்பட்டது. ஈரான் அணி அதிகாரப்பூர்வமாக ஈரான் நாட்டு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்கிற வாதம் முன் வைக்கப்பட்டது. கொண்டாட்ட ஊர்வலங்களை ஒடுக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சனந்தஜின் குர்து பகுதியில் 27 வயது மெஹ்ரான் சமக் என்பவர் கொல்லப்பட்டார்.
தேசிய அடையாளப் பிரச்சினைகள்
பெண் விடுதலை, மனித உரிமை, நவீனத்துவம், மதத்தின் தாக்கம், மதவாதம், ஏகாதிபத்தியம் ஆகிய சிக்கல்களைத் தாண்டி, ஈரானியர்கள் மற்றும் குர்துக்கள் ஆகியோருக்கான தேசம் மற்றும் தேசிய அடையாளம் குறித்து போராட்டங்களில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகள் ஈரான் நாட்டின் அடித்தளத்துக்கு ஆட்டம் காட்டியிருக்கிறது. ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு பிறகுதான் தேசிய அடையாளம் குறித்த கேள்வி மேற்காசியாவில் எழுந்தது. அரபு, குர்திய, துருக்கிய தேசிய அடையாளங்கள் முக்கியத்துவம் பெற்றன. இந்த அடையாளங்களுக்கான பூகோளரீதியிலான தேசங்கள் வேண்டுமென்ற கோரிக்கை அச்சமயத்தில் வலுப்பெற்றது.
அனடோலியப் பகுதியின் துருக்கிய நாகரிகத்திலிருந்து துருக்கி உருவானது. மெசப்பட்டோமியா, ஈராக் தேசியவாதிகளின் நாடாக ஈராக் என்று உருப் பெற்றது. இந்த நாடுகளின் உருவாக்கத்துக்குப் பிறகு பல சமூகங்களும் தேசிய இனங்களும் பிளவுண்டன. அழிவைச் சந்தித்தன. அஸ்ஸிரியர்கள் இத்தகைய ஒரு தேசிய இனத்தை உருவாக்கினர். ஆனால் பூகோளரீதியிலான பகுதி ஏதும் இல்லாததால் அஸ்ஸிரியா வெறும் பெயராக மட்டும் இருக்கிறது. தற்போதைய நிலையில் அஸ்ஸிரிய சமூகங்களை ஈராக், சிரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் காண முடியும். சோவியத் யூனியனில் இருந்த அர்மீனியர்கள் தற்போது தனி நாடாக இருக்கின்றனர்.
குர்திய துயரம்
குர்துக்கள் பலவகை தாக்குதல்களை எதிர்கொண்டு பிழைத்திருக்கின்றனர். பல பத்தாண்டுகளுக்கு நீடித்த இனப்படுகொலையையும் தாண்டி வந்தனர். விளைவாக அவர்கள் சிதறி துருக்கி, ஈரான், ஈராக் மற்றும் சிரியா போன்ற பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அசெர்பைஜானின் கெர்மான்ஷாவில் இருக்கும் எல்லா மாகாணங்களிலும் அவர்கள் இருக்கின்றனர். சிலர் மசந்தரன் மற்றும் கோரசன் பகுதிகளில் இருக்கின்றனர். தங்களின் மொழி, மதம், பண்பாடு, இலக்கியம் மற்றும் சினிமா ஆகியவற்றிலிருந்து குர்துக்கள் அந்நியப்படுத்தப்பட்டிருக்கின்றனர். சமூக அளவில் அவர்களது நம்பிக்கையும் உரிமைகளும் கூட தொடர்ந்து ஒடுக்கப்பட்டிருக்கிறது. குர்துக்களின் பெரும்பான்மை, சுன்னி மற்றும் ஷியா பிரிவு இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள். குர்துக்களின் பல குழுக்கள் இஸ்லாமியத்துக்கும் முந்தைய மதக் கோட்பாடுகளை நம்புபவையாகவும் இருக்கின்றன.
ஒழுக்க நெறி காவல்துறைக்கு எதிரான ஈரானிய அரசாங்கத்தின் பெயரளவிலான நடவடிக்கையை ஈரானிய செயற்பாட்டாளர்களும் மேற்குலகில் இருக்கும் அவர்களின் ஆதரவாளர்களும் ஏற்கத் தயாராக இல்லை. பெண் உரிமை மற்றும் பெண் விடுதலை சார்ந்து உண்மையான மாற்றங்கள் வருமென்ற நம்பிக்கை ஏற்படுவதற்கான காலம் இன்னும் கனியவில்லை என அவர்கள் கருதுகின்றனர்.
அப்துர்ரஹ்மான் போரவ்மாண்ட் செண்டர் ரைட்ஸ் க்ரூப்பின் நிறுவனர்களில் ஒருவரான ரோயா போரவ்மாண்ட் மற்றும் க்ரூப் டெமாக்ரசி ஃபார் தெ அரேப் வோர்ல்ட் நவ் குழுவைச் சேர்ந்த ஒமித் மெமேரியன் ஆகியாரின் வார்த்தைகள் இந்த உணர்வுகளின் சாரத்தை சுருக்கமாக சொல்கின்றன. பெண்களின் உடை மற்றும் குடிமக்களின் தனி வாழ்க்கைகள் சார்ந்த சட்டங்கள் கொண்டிருக்கும் பிரச்சினைகள் விரிவாகப் பேசப்படாதவரை, அவை கொண்டிருக்கும் கட்டுப்பாடுகள் முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படாத வரை ஒழுக்க நெறி காவல்துறையை கலைக்கப்போவதாக சொல்வதை வெறும் கண் துடைப்பு நடவடிக்கையாகவே கருத முடியும் என்ற பார்வையை கொண்டிருக்கிறார் அவர். மேலும் அவர், ஒழுக்க நெறி காவல்துறை கலைக்கப்படுவது நாட்டுக்கு எந்தவித மாற்றத்தையும் கொண்டு வராது என்றும் இத்தகைய நாடகங்கள் நாடு முழுக்க பரவியிருக்கும் பெண்களின் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்த உதவாது என்றும் எண்ணுகிறார்.
இவற்றுக்கு நடுவே, க்ரூப் ஜஸ்டிஸ் ஃபார் ஈரான் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஷாதி சத்தின் வார்த்தைகள் பிரபலமாகி பரவி வருகிறது. ஈரான் நாட்டு குடிமக்களும் தற்போதைய போராட்ட இயக்கமும் ஆட்சிமாற்றம் நேராமல் ஓயாது எனக் கூறியிருக்கிறார் அவர்.
Subscribe to our channels on YouTube & WhatsApp
Well written article
Thank you very much
Ramaswamy Virudhunagar
மிகவும் சிறப்பாக உள்ளது தோழர்
நன்றி