இந்தியாவின் முன்னணி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) அறிவியல் திட்டம் ஒன்றை விமர்சித்து முன்னணி அறிவியலாளர்களும், கல்வியாளர்களும், அக்கறைமிக்க குடிமக்களும் திறந்த மடல் எழுதியிருக்கின்றனர்.
2024ம் ஆண்டின் ராமநவமி தினத்தன்று அயோத்தி கோவில் ராமர் சிலையின்மீது சூரிய வெளிச்சம் விழ வைப்பதற்கான அறிவியல் கட்டமைப்பை உருவாக்கவே இத்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. மின்சாரத்தால் கட்டுப்படுத்தப்படும் கண்ணாடிகள் கொண்ட சாதனம் ஒன்றை வடிவமைப்பதே திட்டத்தின் நோக்கம்! CSIR-ன் அங்கமாக இருக்கும் மத்தியக் கட்டிட ஆய்வு நிறுவனப் (CBRI) பரிசோதனைக் கூடம் இத்திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது. CBRI-ன் விஞ்ஞானிகள் மட்டுமின்றி, இந்திய வானியல் வானியற்பியல் நிறுவனம் (IIA) மற்றும் வானியல் மற்றும் வானியற்பியல் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மையம் (IUCAA) ஆகியவற்றின் வல்லுநர்களும் இத்திட்டத்துக்காக ஆலோசிக்கப்படுகின்றனர்.
சிலை மீது சூரியவெளிச்சம் விழும் விதத்தை CBRI செய்து காட்டியதாக நவம்பர் 20ம் தேதி, CSIR ட்வீட் இட்ட பிறகு இத்திட்டம் குறித்தான விவாதம் சூடு பிடித்தது.
சூரிய நாட்காட்டியின் குறிப்பிட்ட ஒரு தேதியில் வழிபாட்டுத் தலங்களின் கருவறைக்குள் சூரிய வெளிச்சத்தை நுழையச் செய்வது ஒன்றும் புதிய விஷயம் அல்ல என திறந்த மடலில் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். ராமநவமி தினத்தன்று அதைச் செய்வதில் ஒரு சிக்கல் இருப்பதாகக் குறிப்பிடும் விஞ்ஞானிகள், ராமநவமி சூரியச்சந்திர நாட்காட்டியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதை சுட்டிக் காட்டியிருக்கின்றனர். சூரிய நாட்காட்டியின் தேதிகளுடன் சூரியச்சந்திர நாட்காட்டியின் தேதிகள் ஒத்துப் போவதில்லை. இந்தச் சிக்கலால் CBRI அதீத தொழில்நுட்பங்களுடனான நுணுக்கங்கள் நிறைந்த ஒரு மிகவும் சிக்கலான சாதன அமைப்பை உருவாக்க வேண்டியிருக்கும். நாட்டின் அறிவியல் ஆய்வு, நிதிப் பற்றாக்குறை முதலிய பல காரணங்களால் செயலிழந்திருக்கும் நிலையில் எடுக்கப்படும் இம்முயற்சி, வளங்களையும் பணத்தையும் வீணடிக்கும் பெருங்குற்றம் என மடல் வாதிடுகிறது.
இங்கு பிரச்சினையாக இருப்பது “ஓர் எறும்பைக் கொல்ல பீரங்கி கொண்டு வருவதைப்” போன்ற இந்த நடவடிக்கை மட்டுல்ல. அரசியல் சாசனம் விரும்பும் அறிவியல்தன்மையை பரப்ப வேண்டிய பல முன்னணி நிறுவனங்களும் இதில் ஈடுபடுவதே பெரும் பிரச்சினையாகவும் அதிர்ச்சியை அளிப்பதாகவும் இருப்பதாக மடல் குறிப்பிடுகிறது.
முழுமையான மடல் பின்வருமாறு:
அறிவியல் சமூகம் மற்றும் அறிவியல் தன்மை கொண்ட குடிமக்களின் திறந்த மடல்
நவம்பர் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம், அதன் உறுப்பு நிறுவனம் (மத்தியக் கட்டிட ஆய்வு நிறுவனம், ரூர்கீ) தொடங்கும் ஒரு புதிய திட்டத்தைக் குறித்து ஒரு ட்வீட் இட்டிருந்தது.
அத்திட்டத்தைக் குறித்து பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட விரிவான செய்தி அறிக்கைகளை இங்குக் காணலாம்:
https://www.telegraphindia.com/india/ayodhya-sun-to-shine-on-ram-with-science/cid/1899477
IIA மற்றும் IUCAA ஆகிய நிறுவனங்களும் இத்திட்டத்தில் பங்குபெற்றிருப்பதை CBRI ஆய்வாளர்கள் கூறியிருப்பதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
செய்தியறிக்கையில் விவரிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு எங்களின் அவதானிப்பு:
1. சூரிய வெளிச்சம், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் கோவிலின் கருவறையில் விழ வைக்கவென குறிப்பிட்ட ஓர் இடத்தில் ஜன்னலையோ கதவையோ இந்திய வழிபாட்டுத் தலங்களில் நிறுவுதலென்பது புதிய விஷயம் அல்ல. பல கோவில்களையும் பவுத்தக் குகைகளையும் இத்தகைய கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஆகியவற்றுடன் நாம் காணலாம். இத்தகைய ஏற்பாட்டில், தீர்மானிக்கப்பட்ட ஓர் இடத்தில், சூரிய (சூரியன் இருக்கும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும்) நாட்காட்டியின் அடிப்படையிலான ஒரு தேதியில் ஒவ்வொரு வருடமும் சூரிய வெளிச்சம் விழும். ஆனால் ராமநவமிக்கான தேதி, சூரியச்சந்திர (சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டின் இடங்களையும் அடிப்படையாக வைத்து கணிக்கப்படும்) நாட்காட்டியின்படி தீர்மானிக்கப்படுகிறது. சூரிய நாட்காட்டியில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட தேதியுடன் எல்லா வருடங்களின் ராமநவமி தேதிகளும் ஒத்துப் போகாது. எனவே சூரியவெளிச்சத்துக்கென உருவாக்கப்படும் திறப்பு அசையாமல் இருந்தால், விரும்பும் விளைவை அது கொடுக்க முடியாது.
2. மத்தியக் கட்டிட ஆய்வு நிறுவன ஆய்வாளர்கள் இப்பிரச்சனையை சரியாக புரிந்திருக்கிறார்கள்.. 19 வருட மெட்டானிக் காலவட்டத்துக்கு ஏற்ப, தானாக இயங்கக் கூடிய ஒரு நுட்பமான சாதனத்தை அவர்கள் தீர்வாக முன்வைக்கின்றனர். தொழில்நுட்ப ரீதியாக இது சாத்தியம் என்றாலும் இந்த அணுகுமுறை அறிவியல்தன்மைக்கு எதிரானது. காரணங்கள் இரண்டு:
3. முதலாவதாக இந்த அணுகுமுறையில் எட்டப்படும் தீர்வு அதிக சிக்கல் கொண்டதாக மாறும். இதைவிட இன்னும் சுலபமான பல வழிகள் இருக்கின்றன. ராமநவமி அன்று சரியாக சூரிய வெளிச்சம் சிலை மீது விழ, ஒரு கோவில் பணியாளர் கண்ணாடி திருப்பினாலே கூடப் போதும். ஆனால் அதே விளைவை எட்ட மின்சாரத்தில் கட்டுப்படுத்தப்படும் பற்சக்கரத் தொகுப்பில் ஏற்றப்பட்ட கண்ணாடிகளை வடிவமைக்க மத்தியக் கட்டிட ஆய்வு நிறுவனம் தீர்மானித்திருக்கிறது.இது பள்ளிகளில் மோசமாக நடத்தப்படும் அறிவியல் கண்காட்சிகளுக்கு ஒப்பானது. அத்தகைய அறிவியல் கண்காட்சிகளில் ஒரு சிக்கலுக்கான எளிய தீர்வை கண்டறியாமல், மக்களை/நடுவர்களை ஈர்க்கவென சிக்கலான, முடிந்தமட்டிலும் அதிக நுட்பங்களும் நுணுக்கங்களும் கூடிய ஒரு தீர்வை வடிவமைப்பார்கள். கிட்டத்தட்ட “ஒரு எறும்பைக் கொல்ல பீரங்கி கொண்டு வரப்படும்” கதை போல.
இரண்டாவதாக, இத்தகைய அணுகுமுறை நமது அறிவியல் அல்லது தொழில்நுட்ப ரீதியிலான புரிதலை எந்த வகையிலும் முன்னேற்றாது. மேற்படி சாதனம் தயாரிப்பது ஓர் இளங்கலை மாணவருக்கு வேண்டுமானால் நல்ல கற்றல் பாடமாக இருக்கலாம். ஆனால் ஆய்வாளர்கள், மனித அறிவை முன்னேற்றுவதற்கான தேடல்களில் கவனம் செலுத்தவே எதிர்பார்க்கப்படுகிறார்கள். அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்ற பரிசோதனைக் கூடத்தில், எந்த விஞ்ஞான/தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்காத, புதிய நுண்ணறிவு தராத, இத்தகைய அற்பமான முயற்சியில் நேரத்தை வீணடிப்பது, திறமை நிறைந்த மனித வளத்தையும் பொதுமக்கள் பணத்தையும் வீணடிக்கும் குற்றமாகும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியங்களையும் நிதியையும் இளம் அறிவியல் ஆய்வாளர்கள் பெறுவதில் மன உளைச்சல் ஏற்படும் அளவிலான தாமதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இச்சூழலில் இந்த விரயம் பெருங்குற்றம்.
4. IUCAA மற்றும் IAA போன்ற முதன்மை அறிவியல் நிறுவனங்கள் தங்களின் பிரதான நோக்கமான அறிவியல் தன்மை கொண்டு, அறிவியல் சிந்தனையை பரப்பி, அரசியல் சாசனத்தை முன்னிறுத்த இயங்குபவை. அவற்றின் பெயர்களை இந்த மூடத்தனமான முயற்சியுடன் இணைந்து பார்ப்பது அதிர்ச்சியைத் தருகிறது. இந்த நிறுவனங்களுக்கு இருக்கும் நற்பெயரின் காரணமாகவேனும் இத்திட்டத்தில் அவை கொண்டிருக்கக் கூடிய பங்கை பற்றிய விளக்கத்தைக் கொடுக்க வேண்டும். அறிவியல் தன்மையில் அவை வகிக்கும் நிலைப்பாடு என்னவென்பதை அவற்றின் சக நிறுவனங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
இம்மடலில் பேராசிரியர் அனிகெத் சுலே, மும்பை, பேராசிரியர் ப்ரஜ்வால் ஷாஸ்திரி, பெங்களுரு, பேராசிரியர் சவுமித்ரோ பேனர்ஜீ, கொல்கத்தா, பேராசிரியர் நரேஷ் தாதிச், புனே, பேராசிரியர் சப்யெசாச்சி சேட்டர்ஜீ, பெங்களுரு, பேராசிரியர் நிஸ்ஸிம் கனெகர், புனே, பேராசிரியர் ரவிந்தெர் குமார் பன்யால், பெங்களுரு, பேராசிரியர் எஸ்.பி.ராஜகுரு, பெங்களுரு, பேராசிரியர் மனோஜ் புரவங்கரா, மும்பை, டாக்டர் ஷிரிஷர்ஷ் டெண்டுல்கர், மும்பை, டாக்டர் ருடா கலே, புனே, பேராசிரியர் அனந்த்மாயி தெஜ், திருவனந்தபுரம், டாக்டர் ஷதாப் ஆலம், மும்பை, பேராசிரியர் ப்ரீத்தி கார்ப், புனே, பேராசிரியர் ப்ரவபதி சி., பெங்களுரு, பேராசிரியர் பி.அஜித், பெங்களுரு, பேராசிரியர் அர்னாப் பட்டாச்சார்யா மும்பை, பேராசிரியர் பி.சுரி, பெங்களுரு, பேராசிரியர் கவுதம் மேனன் சோனிபட், பேராசிரியர் ஷரத்சந்திரா லீலா, பெங்களுரு, பேராசிரியர் நந்திதா நரெய்ன், தில்லி, பேராசிரியர் ராகுல் நிகாம், ஹைதராபாத், பேராசிரியர் அயன் பேனர்ஜி, கொல்கத்தா, பேராசிரியர் அவுர்னாப் கோசே, புனே, பேராசிரியர் பிட்டு கே ஆர், சோனிப்பட், பேராசிரியர் எஸ்.கிருஷ்ணஸ்வாமி, மதுரை, பேராசிரியர் சுரேஷ் கோவிந்தராஜன், சென்னை, பேராசிரியர் ஜ்யோத்ஸ்னா விஜபுர்கார், நவி மும்பை, பேராசிரியர் முஜ்தபா லோகண்ட்வாலா, புனே, பேராசிரியர் மேதா ராஜாத்யாக்ஷா, மும்பை, டாக்டர்.தீப்ஷிகா ந்கர், திருவனந்தபுரம், பேராசிரியர் பிரதீப் குமார் தட்டா, கொல்கத்தா, பேராசிரியர் அனிந்திதா பத்ரா, கொல்கத்தா, திரு.கொல்லெகல ஷர்மா, மைசுரு, பேராசிரியர் அர்ச்சனா கங்குலி, பெங்களுரு, பேராசிரியர் ஷாந்தா லைஷ்ராம், தில்லி ஆகியோரும் இன்னும் 300 பேரும் கையெழுத்திட்டிருக்கின்றனர்.