A Unique Multilingual Media Platform

The AIDEM

Articles Memoir Politics

நினைவுகளுக்கு மரணமில்லை

  • September 13, 2024
  • 1 min read
நினைவுகளுக்கு மரணமில்லை

1984

டெல்லியிலிருக்கும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷனில் வகுப்புகள் முடிந்ததும் மாலையில் நாடாளுமன்றத்துக்கு அருகிலிருந்த வி பி ஹவுசிலிருந்த இந்திய மாணவர் சங்க அலுவலகத்துக்கு தோழர் தியாகுவுடன் செல்வது வழக்கம். அங்கு குழுமியிருக்கும் மாணவர்களிடையே அரசியல், தத்துவம், சினிமா, நாடகம் எனப் பல விஷயங்கள் குறித்து உற்சாகமான உரையாடல்கள் நடக்கும். சில நேரங்களில் பாடல்களும் பாடப்படும். சங்கத்தின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி அங்கு இருந்தால் உற்சாகத்தால் அலுவலகமே அதிரும். அவரும் பாடுவார்.

அக்டோபர் 31, 1984 அன்று நடந்த இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது. SFI அலுவலகத்திற்கு அன்று மாலையே வர வேண்டுமென சஃப்தர் ஹாஷ்மி கூறியதாக தியாகு என்னிடம் சொல்ல, நானும் அவரும் அன்று SFI மாநிலச் செயலாளராக இருந்த ராஜனும் அங்கு சென்றோம். தெருவெல்லாம் வன்முறைக் கும்பல்கள் ஆயுதங்களுடன் அலைந்து கொண்டிருந்தன. வீடுகள் பற்றியெரிந்து கொண்டிருந்தன.

அலுவலகத்தில் ஏற்கெனவே சுமார் 20 இளம் தோழர்கள் கூடியிருந்தனர். எங்களையெல்லாம் அங்கு அழைத்த காரணத்தை ஃசப்தர் சுருக்கமாகக் கூறினார். அலுவலகத்திற்கு அடுத்த வீட்டில் அருகிலிருந்த டாக்ஸி ஸ்டாண்ட் நடத்தி வந்த ஏழு சீக்கியர்கள் தங்க வைக்கப் பட்டிருந்தனர். கதவு வெளியே பூட்டப் பட்டிருந்தது. அவர்களை வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாப்பது எங்கள் பொறுப்பு.

அலுவலகத்திலேயே சமைத்து நாங்களும் உண்டு விட்டு, சுவரில் இடப்பட்ட ஒரு பெரிய துவாரத்தின் வழியே சீக்கியர்களுக்கு உணவைக் கொடுக்க வேண்டும். இரவில் இரண்டு மூன்று அணிகளாகப் பிரிந்து வி பி ஹவுஸ் வளாகத்தைச் சுற்றி வந்து சீக்கியர்களைக் காக்க வேண்டும்.

மூன்று நாட்கள் பதட்டத்திலும், குளிரிலும் கழிந்தது. அவ்வப்போது யெச்சூரியும், சஃப்தரும், அப்போது பிளிட்ஸ் பத்திரிகையின் நிருபராக இருந்த சாய்நாத்தும் வந்து நாங்கள் தளராமல் இருக்க உற்சாகமாப் பேசுவார்கள்.

மூன்று நாட்களுக்குப் பின் இந்திரா காந்தியின் உடல் அடக்கம் நடைபெற்றது. கூட்டம் கூட்டமாகப் பக்கத்து மாநிலங்களிலிருந்து மக்கள் வந்து கொண்டிருந்தனர்.

திடீரென்று ஒரு வன்முறைக் கும்பல் விபி ஹவுஸுக்கு வெளியே இருந்த சாலையில் கூடியது. நாங்கள் சீக்கியர்களைப் பாதுகாக்கும் ரகசியம் தெரிந்து அவர்களை வெளியே விடுமாறு கூச்சலிட்டது. நாங்கள் அனைவரும் அமைதியாகவும், உறுதியாகவும் வெளியே வந்து நிற்பதைக் கண்ட கும்பல் நகர்ந்து சென்று அந்த சீக்கிய டாக்ஸி ஓட்டுனர்கள் சாலையோர ஸ்டாண்டில் வைத்திருந்த கட்டில், படுக்கை,ஸ்டவ் போன்றவற்றைக் குவித்து வைத்து எரித்தது.

திகு திகுவென வளர்ந்து எரிந்த தீயின் வெளிச்சத்தில் நான் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்த போது அங்கே தோழர் யெச்சூரி நின்றிருந்தார்.

அடுத்த நாள் காலையில் தி டெலிகிராப் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி: வன்முறையாளர்கள் சீக்கியர்களைத் தாக்காமல் சென்ற ஒரே இடம் SFI அலுவலகம்தான். அதற்கு அங்கு நின்ற இளைஞர்களின் துணிச்சல்தான் காரணம்.

இறுக்கம் குறைந்து அங்கிருந்த புல்வெளியில் நாங்கள் அமர்ந்திருந்த போது தோழர்கள் ஒவ்வொருவரும் அவரவர் மொழிகளில் பாடினார்கள்.

சஃப்தர் ஹாஷ்மி என்னிடம் பாடச் சொன்ன பாடல்:

மனிதா, மனிதா இனியுன் விழிகள் சிவந்தால்…

அவரும் சீத்தாராம் யெச்சூரியும் அந்தப் பாடலின் ரசி

கர்கள்!

About Author

ஆர் விஜயசங்கர்

ஆர் விஜயசங்கர் The AIDEM குழும ஆசிரியராக உள்ளார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஃப்ரண்ட்லைனின் ஆசிரியர் குழுவில் இருந்தார். 2002ஆம் ஆண்டு பொறுப்பசிரியராக பதவி உயர்வு பெற்ற அவர், 2011இலிருந்து 2022 வரை 11 ஆண்டுகள் பத்திக்ரிகையின் ஆசிரியராக இருந்தார்.

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ravindran
Ravindran
4 months ago

ஒரு சிறந்த தலைவராக இருப்பவர் படையை வழி நடத்தி களத்தில் முன் நிற்க வேண்டும். கலவரக்காரர்கள் முன் சிங்கமென சிலிர்த்து நின்ற தோழர் சீத்தாராம் எச்சூரி ! அருமை !
தோழர் சீத்தாராம் எச்சூரி அவர்களின் தியாகங்களை, நினைவுகளைப் போற்றுவோம்.

Subash Chandra Bose
Subash Chandra Bose
4 months ago

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார் மூத்தோர்.துணிச்சல் மிக்க இந்த குணம் தான் பிற்காலத்தில் அவரை மிகச்சிறந்த அரசியலாளர் ஆக மாற்றியது.