A Unique Multilingual Media Platform

The AIDEM

Articles Culture Society Tamil Nadu

அன்புள்ள யோகேந்திரா…

  • March 7, 2025
  • 1 min read
அன்புள்ள யோகேந்திரா…

சில நாட்களுக்கு முன்பு மும்மொழிக் கொள்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஒரு ட்வீட் தொடர்பாக யோகேந்திர யாதவ் என்னும் அறிவு ஜீவியும் , பர்கா தத் என்னும் ஊடகரும்,   என்மோஜோ னும் தளத்தில் ஒரு  உரையாடலை நிகழ்த்தினார்கள்.

அந்த உரையாடல், ஸ்டாலினின் நிலைப்பாடு எவ்வளவு தவறானது என்றும், மும்மொழிக் கொள்கை எப்படி மாணவர்களின் வாழ்க்கைக்கு முக்கியமானது என்பதாகவும்  அமைந்திருந்தது. அந்த உரையாடல் என்னுள் பல சிந்தனைகளை உருவாக்கியது. அவற்றை எழுத்தில் வடிக்க  விரும்பியதன் விளைவே இக்கட்டுரை 

 

கதை மாந்தர்களின் பின்னணி!

இந்தக் கட்டுரையின் மையக் கருத்துகளுக்குச்  செல்வதற்கு முன்பு, யோகேந்திரா, பர்கா மற்றும் எனது பின்புலங்களை சொல்வது முக்கியம் எனக் கருதுகிறேன்.

யோகேந்திரா ஒரு கல்விசார்  பின்புலத்தில் இருந்து வருபவர். அவரது தாத்தா பள்ளி ஆசிரியர். தந்தை பொருளாதாரப்  பேராசிரியர். பள்ளியில் மூன்று மொழிகள் பயின்ற யோகேந்திரா, ஜவஹர்லால் மற்றும் பஞ்சாப் பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி பயின்றவர்.

பர்காவின் தந்தை ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்தவர். தாய் இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டில் பணிபுரிந்த பிரபலமான பத்திரிக்கையாளர். பள்ளியில் மூன்று மொழிகள் பயின்ற பர்கா, தில்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் மற்றும் ஜாமியா மிலியா கல்வி நிறுவனங்களில் பயின்றவர்.

நேர்காணலை இங்கே பாருங்கள்.

என் பெற்றோர் கையெழுத்து போடத் தெரிந்த அளவு மட்டுமே படித்தவர்கள் . உள்ளூர் அரசுப் பள்ளிகளில் பயின்றேன். பள்ளியில் இரண்டு மொழிகள் மட்டுமே கற்பிக்கப்பட்டன. இளமறிவியல் வேளாண்மையும் (இட ஒதுக்கீட்டில்) , முதுநிலை ஊரக மேலாண்மை (இட ஒதுக்கீடு இல்லாமல்) படித்தேன். பணிநிமித்தம் இந்தியும், கன்னடமும் பேசக் கற்றுக் கொண்டேன்.

இந்தப் பின்புலம் ஏன் முக்கியமென்றால், உலகத்தில் உள்ள பல விஷயங்களை பற்றிப் பேசுகையில், நமது கருத்துக்கள் இந்தப் பின்புலத்தில் இருந்துதான் வருகின்றன என்பதனால். இந்தக் கட்டுரையை படித்து முடிக்கையில், இது மேலும் தெளிவாகப் புலப்படும்.

 

புறக்கணிக்கப்பட்ட பள்ளிக் கல்வியின் வரலாறு!

இந்த நேர்காணலில் நான் எதிர்கொண்ட முதல் அதிர்ச்சி என்பது, யோகேந்திரா, பர்கா இருவருமே ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை மற்றும் பள்ளிகளில் மூன்று மொழி கற்பது என்பன எப்போதுமே இருந்து வரும் விஷயங்கள் என்பதான ஒரு அனுமானத்தில் இருந்து பேசியதுதான்.

பள்ளிக் கல்விக் கொள்கையின் வரலாறு தெரிந்தவர்கள், 1976 ஆம் ஆண்டு வரை பள்ளிக் கல்வித்துறை என்பது மாநில அரசுகளின் கீழ் வரும் ஒரு துறையாக இருந்தது என்பதையும்  நெருக்கடி நிலை காலத்தில் 1976 ஆம் ஆண்டுதான், இது ஒன்றிய-மத்திய பட்டியலுக்கு  மாற்றப்பட்டது என்பதையும் அறிவர். தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே கற்பிப்பது மாநில அரசின் கொள்கையாக இருந்து வருகிறது என்பதையும்.

 ஒரு துறை, ஒன்றிய-மாநில பட்டியலில் இருந்தால், ஒன்றிய அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளே இறுதியானது என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால், சட்டம் பயின்ற என் நண்பர்கள், அது உண்மையல்ல என்கிறார்கள். ஒரு துறை, ஒன்றிய-மாநில பட்டியலில் இருந்தால்,  ஒன்றிய அரசின் சட்டங்களுக்குத்தான் அது பொருந்துமே  தவிர, கொள்கை முடிவுகளுக்கு அது பொருந்தாது என்கிறார்கள். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் மூன்று வழக்குகளில் சொன்ன தீர்ப்புகள் இதை உறுதி செய்திருக்கின்றன என்கிறார்கள்.  இது தொடர்பான மேலதிக விவரங்கள் என்னிடம்  இல்லை. இது உறுதி செய்யப்பட வேண்டிய ஒன்று.

National Education Policy 2020 (Source: PARI)

ஆனால், ஒன்றை உறுதியாக சொல்ல முடியும். பள்ளிக் கல்வியை நேரடியாக பெரும்பாலான மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய பொறுப்பு என்பது மாநில அரசுகளிடம்தான் உள்ளது. அங்கே ஒன்றிய அரசின் பங்களிப்பு என்பது தனித்துவமான திட்டங்கள் வழியே மாநிலங்களுக்கு  நிதியளிப்பது மட்டுமே. நேரடியாக பள்ளிக் கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் அளிப்பது என்பது ஒன்றிய அரசால் இயலாத  காரியம்.

 

கல்வியில் தமிழ்நாட்டின் தனித்துவமான அணுகுமுறை

தமிழ்நாட்டுக்  கல்விமுறை சமூக நீதிக் கோட்பாட்டுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டது. இந்தப் பயணம் 1920 களில்  நீதிக்கட்சி ஆட்சியுடன் தொடங்குகிறது.  முதன்முதலாக சென்னையில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கான பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. ஆனால், அதீத வறுமை, பட்டினியின் காரணமாக, பள்ளிக்கு மாணவர் வருகை குறைவாக இருக்கிறது. இதைச் சரி செய்ய மாநகர  நிர்வாகம் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இதனால் மாணவர் வருகை அதிகரிக்கிறது. இத்திட்டம் அதிக நாட்கள் நீடிக்க வில்லையெனினும், மிக முக்கியமான தொடக்கம்.

காலம் உருண்டோட, 1950 களில் காமராசர் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் காலத்திலும், பள்ளிக்கு மாணவர் வருகை குறைவாக இருக்கும் பிரச்சினை இருக்கிறது. இதைச் சரி செய்ய, ஊரக ஏழை மாணவர்களுக்கு இலவச  மத்திய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்கிறார். மாணவர் வருகை அதிகரிக்கிறது.  ஆனாலும், அனைத்து மக்களும் கல்வித்திட்டத்திற்குள் உள்ளே வந்தார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்கள் எண்ணிக்கை போதுமான அளவு உயரவில்லை.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டாக்டர் மன்மோகன் சிங் (ஆர்), மார்ச் 7, 1983 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனை சந்தித்தார்.

1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த எம்.ஜி.ஆர், 1982 ஆம் ஆண்டு மிக முக்கியமான கொள்கை முடிவை எடுக்கிறார். அது, தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்குமான இலவச சத்துணவு என்னும் கொள்கை முடிவு. அன்றைய காலகட்டத்தில் அது  தமிழ்நாட்டின் மிகப் பெரும் திட்டம். கிட்டத்தட்ட பட்ஜெட்டில் 10% க்கும் அதிகமான நிதியைக் கோரும் திட்டம். அது தொடர்பான பேச்சுவார்த்தைகளில், ஒன்றிய அரசின் திட்டக் கமிஷனின் துணைத் தலைவரான டாகடர்.மன்மோகன் சிங் ஒரு மாநிலம் எப்படி தன்  வருவாயில் 10% க்கும் அதிகமான நிதியை இலவசங்களுக்காக செலவிட முடியும் எனக்  கேள்வி எழுப்புகிறார். ஆனால், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, எம்.ஜி.ஆர் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிறார். தமிழ்நாட்டில், பள்ளி மாணவர் வருகை வெகுவாக உயர்கிறது. வெற்றிகரமான திட்டம் என தேச அளவில் அது பாராட்டப்படுகிறது.

அதன் பின்னர்  11 ஆண்டுகள் கழித்து, தமிழ்நாட்டின் இலவச சத்துணவுத் திட்டத்தை, இந்தியாவெங்கும் நடைமுறைப்படுத்த முடிவெடுக்கிறார் அன்றைய நிதியமைச்சரான முன்னாள் திட்டக் கமிஷனின் துணைத்தலைவர் டாக்டர் மன்மோகன் சிங். இதன் படிப்பினை என்னவென்றால், நாட்டின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு 2500 கிலோமீட்டர் தொலைவிலுள்ள  தில்லியில் இருக்கும் அறிவுஜீவிகளுக்கு மட்டுமே தெரிய வேண்டியதில்லை. உள்ளூர் பிரச்சினைகளை, தேவைகளை,  உள்ளூர் அரசு நிர்வாகங்களே  பார்த்துக் கொள்ள முடியும் என்பதே.

 

பள்ளிக்கல்வியில் தனியார் வரவு!

80 களில்,  பள்ளிக் கல்வியில் தனியார் முதலீட்டை அனுமதித்தார் எம்,ஜிஆர். இதனால், தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் புதிதாக வரத்  தொடங்கின. 90  களில் தமிழ்நாட்டின் பொருளாதாரமும் வளரத்  தொடங்கியது. புதிதாக வளரத் தொடங்கியிருந்த மென்பொருள் தொழிலுக்கு பொறியியல் பட்டதாரிகள் தேவைப்பட, பொறியியல் கல்லூரிகள் தனியார் துறையில் உருவாகி  எழுந்தன. அவற்றுக்குத் தேவையான மாணவர்கள், படித்தவுடன் வேலை என்னும் நேர்நிலை சூழல் உருவாகி வர, தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை பெருகியது.

திருப்பூரில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி

வசதி படைத்த இடைநிலை மற்றும்  உயர் சாதியினர் அரசுப் பள்ளிகளை  விட்டு, தனியார் பள்ளிகளை நோக்கி நகர்ந்தனர். இதனால் அரசுப் பள்ளிகளுக்கான சமூக ஆதரவும், அங்கீகாரமும் குறைந்து போயின.

இன்று அரசுப் பள்ளிகள் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான  ஒரே சரணாலயமாக உள்ளன என்பது கசப்பான உண்மை.  இந்த காலகட்டத்தில்தான் இந்த மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் முன்வந்தது. இலவச புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், மிதி வண்டி, இலவச பஸ்பாஸ், மதிய உணவு போன்றவை அரசினால் வழங்கப்பட்டன. பொருளாதாரத்தில் கீழ் நிலையில் இருக்கும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இவை பெருமளவுக்கு ஆசுவாசமளித்தன. 

ஆனாலும் ஒரு முக்கியமான பிரச்சினை இருந்தது. அது பள்ளியில் பெண் குழந்தைகள் தொடர்ந்து படிக்காதது. தேர்வுகளில் தோல்வியடைதல், பருவமடைதல்  போன்ற பிரச்சினைகளின் விளைவாக பெண்கள் பள்ளியிறுதி வகுப்பை முடிப்பது மிகக் கடினமாக இருந்தது. இந்தப் பிரச்சினையை தீர்க்க, தமிழ்நாடு அரசு, 9 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ், இலவச சானிடரி நாப்கின் வழங்குதல், 8 ஆம் வகுப்பு முடித்த ஏழை பெண்களுக்கு தாலிக்கு இலவச தங்கம் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

இதன் விளைவாக பள்ளியிறுதி முடிக்கும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை சதம் உயர்ந்தது.  இன்று தமிழ்நாட்டில், பள்ளிக் கல்வி முடிந்து கல்லூரி செல்லும்  மாணவர்களின் சதவீதம் 50% த்தை தொடுகிறது. இது தேசிய  சராசரியை விட இரு மடங்கு அதிகமானதாகும்.

கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு, மேலும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அரசுப்பள்ளிகளில் படித்து கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை, தொடக்கப்பள்ளிகளில் இலவச காலை சிற்றுண்டி போன்றவை அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மேலும் உதவிகரமாக இருக்கின்றன.    

பள்ளி குழந்தைகளுக்கான மாநில அரசின் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் போது, ​​மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உணவருந்தினார்.

இது போன்ற பல நேர்நிலை விஷயங்கள் இருந்தாலும், கற்றல் வெளிப்பாடுகளில், அரசுப் பள்ளிகள் பின் தங்கியுள்ளன என்னும் ஒரு விமரிசனமும் உள்ளது. தொடர்ந்து  Aser  என்னும் தனியார் நிறுவனம் நடத்தும் ஆய்வுகளை முன்வைத்து வாதிப்பவர்கள் உள்ளார்கள்.

 

அரசுப்  பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை என்னும் தேவையில்லாத ஆணி!

அரசுப் பள்ளிகளில் நிலவும் உண்மையான சூழலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அங்கே மூன்றாவது மொழி பயிற்றுவிப்பது தொடர்பான விவாதங்கள் முழுமையடையாது. அரசு தரும் இலவசங்களைத் தாண்டி, உணவு, உடை போன்ற அடிப்படை வசதிகளைக் கூடப்  பெற இயலாத மாணவர்களே அங்கே பெருமளவில் பயில்கிறார்கள். +2 பள்ளியிறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் (1176/1200) பெற்றும், நீட் தேர்வில் வெல்ல முடியாமல் போன அரியலூர் அனிதா இதன் முக்கியமான உதாரணம்.

என் குடும்பம் சென்னையில் வசிக்கிறது. நாங்கள் எங்கள் பிள்ளைகளை இந்தியாவின் மிகச் சிறந்த பள்ளி ஒன்றில் சேர்த்திருந்தோம். என் மகள் ஐஐடியில் கல்வி கற்க விரும்பினார். சென்னையில் உள்ள மிகச் சிறந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி பெற்று, ஐஐடி நுழைவுத் தேர்வில் வென்று ஐஐடியில் கல்வி பயின்றார். என் மகளுக்கு கல்வி தர, பயிற்சி பெற எங்களிடம் எல்லா வசதியும் இருந்தது.

இத்துடன் அரியலூர் அனிதாவை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அனிதாவின் வீடு என்பது ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த ஒரு அறை மட்டுமே. வீட்டில் கழிவறை  கிடையாது. சிறு வயதிலேயே தாயை இழந்தவர் அனிதா. நீட் என்னும் மருத்துவத் தேர்வுக்கு படிக்க அவர்கள் ஊரில் சிறந்த பயிற்சி நிறுவனங்கள் எதுவும் இல்லை. பயிற்சி நிறுவனத்தில் பயில அவர் தந்தையிடம் பணமும் இல்லை. தனக்கான உரிமையைக் கோரி அவர் உச்ச நீதி மன்றம் வரை சென்றார். ஆனால், நீதிமன்றம் அவரது பின்புலத்தை கருணையுடன் காண மறுத்து விட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டார்.

நமது கல்வித்தளத்தில் உள்ள ஆழமான பிளவுகளை மேற்சொன்ன எடுத்துக்காட்டுகள் தெளிவாக விளக்குகின்றன. நம் நாட்டில் கல்வியின் தரம் என்பது வசதி, வாய்ப்புகள் சார்ந்த ஒன்றாக இருக்கிறது.  இந்தச் சூழலில், ஏழ்மை நிலையில் இருந்து வரும் குழந்தைகள் முதலில் தரமான, குறைந்த பட்ச அடிப்படைக் கல்வி பெறுவது மிக முக்கியம். அதுவே கடினம் என்னும்  போது, கூடுதல் மொழிகளைப் பயில வேண்டும் என்பதெல்லாம் தேவையற்ற சுமை. இங்கே அரசின் கவனம், அரசுப் பள்ளிகளில், முதலில் தரமான அடிப்படை கல்வியை எப்படி வழங்குவது, ஏழை மாணவர்கள் பள்ளியை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்வது என்பது போன்ற விஷயங்களில் இருக்க வேண்டுமே தவிர, அவர்கள் மீது தேவையற்ற சுமைகளைச்  சுமத்தி, அவர்களை பள்ளியில் இருந்து விரட்டி விடுவதாக இருக்கக் கூடாது.

 

தேவையற்ற நிதிச் சுமை!

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 37000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதற்கான அரசின் பட்ஜெட் கிட்டத்தட்ட 42 ஆயிரம் கோடி ரூபாய். இதில் 90% ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்கே செலவாகி விடுகிறது. இலவச பாடநூல்கள், உணவு, சீருடை போன்றவற்றுக்கான நிதி, கூடுதல் செலவினம். ஆனால், முக்கியமான செலவினம்.  இங்கே, ஒரு மொழி கூடுதலாக சொல்லிக் கொடுக்க, பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் என்றாலே, 74 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக தேவைப்படுவார்கள். இதில் பல மொழிகளை சொல்லிக் கொடுக்க வேண்டுமெனில், கூடுதலாக லட்சக்கணக்கில் ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். இது மாநில அரசுக்கு தேவையற்ற நிதிச்சுமை. 

2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் முக்கிய துறை ஒதுக்கீடுகள்

இந்தக் கட்டுரையை எழுத தூண்டிய பர்காவின் நேர்காணலில், அவர்  இந்தியாவில் 87% மக்கள், தாம்  வசிக்கும் மாவட்டத்தை தாண்டி பணிக்காக  வெளியே செல்வதில்லை என்னும் ஒரு புள்ளி விவரத்தை சொல்கிறார். 13% மக்கள் மட்டுமே பணிநிமித்தம் தங்கள் மாவட்டத்தைத் தாண்டி பயணிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு கூடுதல் மொழி உதவும்தான். ஆனால், அது எந்தக் கூடுதல் மொழி என்பது பள்ளியில் படிக்கையில் எப்படித் தெரியும்? அப்படியே தெரிந்தாலும், 13% மாணவர்களுக்காக, மீதியுள்ள 87% மாணவர்களும் படிக்க வேண்டும் என்பது பொருளற்ற ஒன்று.

 

முடிவாக.. 

தமிழ்நாட்டில், தாய்மொழியும், ஆங்கிலமும் பயிற்றுவிக்கும் மக்கள் நலன் சார்ந்த கல்வி, கடந்த 70 ஆண்டுகளில், மற்ற மாநிலங்களை குறிப்பாக இந்தி மாநிலங்களை ஒப்பிடுகையில், மேம்பட்ட விளைவுகளை உருவாக்கியுள்ளது. இந்தி மாநிலங்களில் 90% க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு மொழி மட்டுமே தெரியும் என்பதுதான் சோகமான உண்மை. 

தமிழ்நாடு தனக்கான கல்விக் கொள்கையை உருவாக்க, பாடநூல்களை வடிவமைக்கத் தேவையான கல்வியாளர்கள் மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டிருக்கிறது. பொருளாதார அடித்தட்டில் மிகக்  கீழ் நிலையில்  இருக்கும் மாணவர்களும் சிரமமில்லாமல் கல்வி பயில, இலவச காலை உணவு, மதிய உணவு, சீருடை, புத்தகங்கள், பஸ்பாஸ் முதலியவற்றை வழங்கி வருகிறது. ஒரு குழந்தை கூட பள்ளிக்கு வராமல் இருந்துவிடக் கூடாது என்பதே அரசின் அணுகுமுறையாக இருக்கிறது.

இந்த வெற்றிகரமான கல்வி அணுகுமுறையை போற்றாமல் விட்டாலும் பரவாயில்லை. ஒரே நாடு, ஒரே கல்வி முறை என்னும் முரட்டுத்தனமான தவறான அணுகுமுறையால் அதைச் சிதைத்து விட வேண்டாம் என்பதுதான்  சமூக அக்கறை கொண்ட அனைவருடைய எண்ணமும் வேண்டுகோளுமாக இருக்க முடியும்.

About Author

பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x