A Unique Multilingual Media Platform

The AIDEM

Articles Cinema

மூர் மார்க்கெட்டிலிருந்து பொன்னியின் செல்வன் வரை: ரவிவர்மனின் மீட்சிக் கதை!

  • December 5, 2022
  • 1 min read
மூர் மார்க்கெட்டிலிருந்து பொன்னியின் செல்வன் வரை:  ரவிவர்மனின் மீட்சிக் கதை!

மலையாளத்தில் வி.கே. ஜோபிஷ் எழுதிய கட்டுரை. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்கள் ரித்விக் பைஜூ மற்றும் ஆர். கோபிகா கோபன். தமிழில்: ராஜசங்கீதன்


தஞ்சாவூரின் பொய்யுண்டார்குடிக்காடுதான் அந்தச் சிறுவனின் ஊர். 12 வயது, 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அநாதை. படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்னைக்கு ஓடி வந்தான். திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான்.

ஓர் அற்பமான காரணம் கிடைத்தால் கூட குற்றவாளி என முத்திரை குத்திவிடும் இடம் அது. தொடர்ந்து 15 நாட்களுக்கு அவனுக்கு அடி விழுந்தது. குற்றமற்றவன் என்கிற உண்மையை அவன் சொல்லவில்லை. பல நாட்கள் கழித்து ஓர் உறவினர் வந்து அவனை அழைத்துச் சென்றார். ஆனால் ‘திருட்டுப்’ பட்டம் அவனுடன் ஒட்டிக் கொண்டது.

அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு முடிவுடன் சென்னைக்கு மீண்டும் திரும்பினான். ஒன்று, மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஊருக்கு திரும்ப வேண்டும், அல்லது சவப்பெட்டியில்தான் செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தான்.

ஒரு கனவு இருந்தது. அவனால் அடைய முடியாதக கனவு. துணையாக இருந்ததென்னவோ வறுமை மட்டும்தான். வழியில்லை. ஓடும் ரயிலிலின் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றான். இரு முறை. ஆனால் அதுவும் நடக்கவில்லை. இரவுகளை சென்னை நகர நடைபாதைகளில் கழித்தான். இறுதியில் எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டியது. தெரிந்தவர் ஒருவர், தன் தந்தையின் வழக்கறிஞர் நண்பருடைய வீட்டில் சுத்தப்படுத்தும் வேலையை அவனுக்கு வாங்கிக் கொடுத்தார். கழிவறை சுத்தம் செய்யும் வேலை அலுப்பைக் கொடுத்ததால் சில நாட்களில் அந்த வேலையையும் விட்டான் அவன். அண்ணா மேம்பாலத்துக்கடியில் தூக்கம். அவன் இருந்த உலகத்தில் திறக்க முடியாத ஜன்னல்களும் கதவுகளும் நிறைந்திருந்தன.  

எஸ். ரவி வர்மன்

பசி அவனை அடுத்த வேலைக்கு விரட்டியது. ஹோட்டல் அமராவதியில் பணியாளராக 150 ரூபாய் சம்பளத்துக்கு சேர்ந்தான். முதல் மாதச் சம்பளம் வந்ததும் இறக்குமதிப் பொருட்கள் விற்கும் மூர் மார்க்கெட்டுக்கு சென்றான். வண்ணமயமான சிங்கப்பூர் லுங்கி ஒன்றும் டிஷர்ட் ஒன்றும் வாங்கினான். ஆனால் அவனை அங்கு வேறொரு விஷயம் ஈர்த்தது. ரஷிய கேமராக்கள்! அதற்கொரு காரணம் இருந்தது. கிராமத்திலிருந்து கிளம்பியபோது அவனிடம் இருந்தது மூன்று பொருட்கள் மட்டும்தான். ஒரு லுங்கி, ஒரு சட்டை மற்றும் அம்மாவின் திருமணத்தன்று எடுக்கப்பட்ட அவுட் ஆஃப் ஃபோகஸ் புகைப்படம். அம்மாவுடனான தன் நினைவுகளை மீட்கவென அந்த புகைப்படத்தை பெரிதாக்க ஒருமுறை முயற்சிக்கையில், ஓர் உருப்படாத கேமரா வாழ்க்கைக்கும் வாழ்க்கையின் நினைவுகளுக்கும் என்ன செய்ய முடியுமென்பது அவனுக்குத் தெரிந்தது. ஃபோகஸ் செய்யப்படாத அம்மாவின் புகைப்படத்துடன்தான் அவன் மிச்ச வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தது. வாழ்க்கையளவு முக்கியத்துவம் ஒரு புகைப்படத்துக்கும் உண்டு என்பதை உணர்த்திய தருணங்கள் அவை. அப்புகைப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு முறையும் புகைப்படக் கலை மீதான ஆர்வம் அவனுக்குள் வளர்ந்தது. விளைவாக மூர் மார்க்கெட்டில் ஸெனித் 6 கேமராவை நோக்கி அவன் நடந்தான். 

விலையாகக் கடைக்காரர் 1000 ரூபாய் சொன்னார். நெடுநேர பேரத்துக்குப் பிறகு 150 ரூபாய்க்கு விலை படிந்தது. கேமராவை வாங்கினான். படமெடுக்கத் தேவையான ஃபிலிம் சுருளை வாங்க அடுத்த மாத சம்பளத்துக்காகக் காத்திருந்தான். கேமரா மீதான ஆசை வேட்கையாக வளர்ந்தது. விளைவு, இன்று அவன் இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக வளர்ந்து நிற்கிறான். அவனது பெயர் எஸ்.ரவிவர்மன். எந்த திரைப்பள்ளியிலும் பயிற்சியோ கல்வியோ பெறவில்லை. புகைப்படங்கள் எடுத்தார். புத்தகங்கள் வாசித்தார். கடினமான அலுப்பு தரும் பயணத்துக்குப் பிறகு உச்சத்தை அடைந்திருக்கிறார். ஆபீஸ் பாயாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்து, இந்திய சினிமாவின் கொண்டாடப்படும் இயக்குநரான மணிரத்னம் இயக்கி வெளியாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரியுமளவுக்கு உயர்ந்திருக்கிறார். ரவிவர்மனை ஒளிப்பதிவாளராகப் பெற பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களின் கால்ஷீட்டை விட்டுக் கொடுக்கக்கூடத் தயாராக இருக்கிறார்கள். ஷாருக்கான் போன்ற பாலிவுட் சூப்பர்ஸ்டார் கூட தன் மகன் ஆர்யனை சினிமா கற்றுக் கொள்ள திரைப்பள்ளிக்கு அனுப்பாமல், ரவிவர்மனிடம் உதவியாளராக சில நாட்கள் பணிபுரிய அனுப்பியிருக்கிறார். வெறிச்சோடிய இரவுகளின் பயங்கரம் கொடுத்தத தழும்புகள் ரவிவர்மனின் கேமராக் கண்களில் இன்று பிரதிபலிக்கின்றன. எந்த கவனச் சிதறலும் இல்லாமல் உங்களின் இலக்கை நோக்கிப் பயணித்தால் அதிசயங்கள் நிகழவே செய்கின்றன. ரவிவர்மனின் வாழ்க்கை தரும் செய்தி அதுதான்.

1999ம் ஆண்டில் மலையாளப்பட இயக்குநர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கிய ஜலமர்மரம் படத்தில்தான் ரவிவர்மன் தன் பயணத்தை துவக்கினார். பிறகு அவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களில் தொடர்ந்து பணியாற்றினார். ஷாந்தம், அந்நியன், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், பர்ஃபி போன்றவை ரவிவர்மனின் மாயம் நிகழ்த்தப்பட்ட படங்களில் சில.

 

தட்டாம்பூச்சிகளும் மரணமும்

ரவிவர்மனின் காட்சியமைப்புகள் கதை சொல்லலை மெருகேற்றுவதால்தான் இயக்குநர்கள் அவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2001ம் ஆண்டில் இயக்குநர் ஜெயராஜின் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது வென்ற ஷாந்தம் படத்தின் இறுதி ஷாட், ரவிவர்மனின் கலைத்திறமைக்குச் சான்று. அக்காட்சியைக் குறித்து ரவிவர்மன் சொல்கிறார்: “கதையில் இரண்டு கதாபாத்திரங்கள். கொலைகாரன் ஒருவன், அவனைத் தேடுபவன் இன்னொருவன். ஆற்றின் இரு கரைகளில் அவர்கள் இருக்கின்றனர். கடைசிக் காட்சியில்தான் அவர்கள் ஆற்றில் சந்திக்கின்றனர். காட்சியை எடுப்பதற்காக அந்த இடத்துக்கு சென்றபோது நிறைய தட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டோம். எங்களின் ஊரில், ஒருவர் இறந்துவிட்டால் தட்டாம்பூச்சியாக மாறிவிடுவார் என்றொரு நம்பிக்கை உண்டு. எனக்கு அது நினைவுக்கு வந்தது. படப்பதிவு தொடங்கும்போது, தட்டாம்பூச்சி ஒன்றேனும் நிச்சயமாக ஃப்ரேமில் வந்து உட்காருமென்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஃப்ரேமில் இருந்த ஒரு வாளை ஃபோகஸ் செய்து  பதிவைத் தொடங்கிவிட்டு பொறுமையாகக் காத்திருந்தேன். இறுதியில் ஒரு தட்டாம்பூச்சி பறந்து வந்து வாளின் முனையில் அமர்ந்தது. அதைப் பார்த்ததும் இயக்குநருக்கு ஆச்சரியம். அப்படித்தான் அது படத்தின் இறுதி ஷாட்டாக மாறியது.”

இயக்குநர் கூட யோசித்திராத கேமராப் பதிவு அது. பிறகு ஷாந்தம் படத்தின் அற்புதமான காட்சிகளை ஒரு திரைவிழாவில் பார்த்து ரவிவர்மனை தொடர்பு கொண்டார் இயக்குநர் மணிரத்னம். கனவு நனவான தருணம் அது ரவிவர்மனுக்கு. சென்னையின்  நடைபாதைகளில் மணிரத்னத்தின் பெயர் தாங்கிய போஸ்டர்களில் கண்விழித்த காலம் அவரது நினைவுக்கு வந்தது.

 

மணிரத்னத் தருணம்

சஞ்சய் லீலா பன்சாலி, அனுராக் பாசு, கவுதம் மேனன் போன்ற பல முன்னணி இயக்குநர்களுடன் ரவிவர்மன் பணியாற்றியிருக்கிறார். அவரின் எல்லைகளை விரிவுபடுத்த அந்த இயக்குநர்கள் உதவியிருக்கின்றனர். என்றாலும் வசீகரம் நிறைந்த காட்சிகள் சினிமாவின் கதை சொல்லலை எந்தளவுக்கு உயர்த்தும் என்பதை காண்பித்தவர் மணிரத்னம் என்பதால் ரவிவர்மனுக்கு பிடித்த இயக்குநராக அவர் இருக்கிறார்.

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனிலும் கூட, இந்திய சினிமா பார்த்திராத பல முத்திரை பதிக்கும் காட்சிகளை ரவிவர்மன் உருவாக்கியிருக்கிறார். அவரின் கேமரா, காமுறும் பார்வையில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோரைக் பார்க்கவில்லை. நிறங்கள் கொண்டு அவ்வுலகை படத்தில் அவர் படைத்திருக்கிறார். அவரது படங்கள் கொண்டிருக்கும் இத்தகைய செழுமைமிகு காட்சி அதிசயங்களை பற்றிக் கேட்கும்போது இளம் வயதில் இறந்து போன தாயைக் குறிப்பிடுகிறார் ரவிவர்மன். “தாய் புன்னகைத்து நான் பார்த்ததில்லை. எனவே ஒவ்வொருமுறை கேமராவின் வழியாக பார்க்க கண்களை நான் மூடும்போதும் அவரின் அலுப்படைந்த முகத்தைதான் பார்ப்பேன். என்னைப் பற்றியக் கவலையுடன் அந்தப் பக்கத்தில் அவர் இருப்பதைப் பார்க்க முடியும். அதனால்தான் என் ஃப்ரேம்களில் வண்ணங்களும் பிரகாசமான வெளிச்சமும் இருக்க நான் விரும்புகிறேன்.” 

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் மணிரத்னத்துடன்

அந்தக் கோணத்திலிருந்து அவரது படங்களை அவதானித்தால், அவர் பதிவு செய்த மனதைக் கொள்ளையடிக்கும் அற்புதமான காட்சிகள் எல்லாமும் வண்ணங்களும் அலங்காரமும் அற்ற வாழ்க்கையை வாழ்ந்த அவரின் தாயை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சிதான் எனப் புரிந்து கொள்ள முடியும். வாளின் முனையில் அமர்ந்த தட்டாம்பூச்சி, ரவிவர்மனின் கண்களில், அவரது தாயாக இருக்கலாம். அவருக்கு மட்டுமே தெரியும் தாய்! கற்பனையில் அவர் மீட்டுருவாக்க முயலும் தாயின் பிம்பம் நமக்கு அலாதியான விஷயமாக இருந்தாலும் அவருக்கு அது வலி மிகுந்த அனுபவம். எனினும் அவர் அதை நிறுத்துவதாக இல்லை. தாய் இறந்த இரவு அவருள் இன்னும் உறைந்திருக்கும் நினைவு. அதை இப்படி விவரிக்கிறார் அவர்: 

“அந்த இரவை என்னால் மறக்க முடியாது. சீக்கிரமே தூங்கச் சென்றுவிட்டேன். நடு இரவில் குளிர் அதிகமாக இருந்ததால் என் போர்வையை அம்மா எடுத்துக் கொண்டார். நான் அழுதபடி மீண்டும் என் போர்வையை இழுத்துக் கொண்டேன். அடுத்த நாள் நான் குளிக்கும்போது, தூங்கும்போதே குளிரில் விறைத்து தாய் இறந்துவிட்டதாக என் சகோதரன் சொன்னார். கடவுளை நம்புவதை அப்போதிலிருந்து நிறுத்தினேன். இன்று வரை நான் குற்றவுணர்வில் வாழ்கிறேன். போர்வைக்காக அந்த இரவில் நான் அழுதிராவிட்டால், என் தாய் இன்று என்னோடு இருந்திருப்பார்.” 

ரவிவர்மனின் அழகு நிறைந்த ஃப்ரேம்கள், வலியின் அலைகள் கொண்டு உருவாக்கப்பட்டவை. பல திரை நிகழ்வுகளில் அவர் கடந்த காலத்தை பற்றி பகிர்ந்திருக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தின் முன்னோட்ட காட்சியின்போதும் இது நடந்தது. பிரபலமான பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் படத்தைப் பார்த்துவிட்டு ரவியைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தபோது, சட்டையின்றி அவர் சென்னையின் அண்ணா மேம்பாலத்துக்கு அடியில் உறங்கிக் கொண்டிருந்தார். வறுமையினால் பல தூக்கமற்ற இரவுகளை பால்ய காலத்தில் அவர் கழித்த இடம் அது. எதிர்பாராமல் அவரால் அம்மாவுக்கு நேர்ந்தக் கொடூரத்துக்கு மன்னிப்பு கேட்கும் விதமாக முழு இரவின் குளிருக்கும் அன்று அவர் தன்னை ஒப்புக் கொடுத்திருக்கலாம்.

ஐஷ்வர்யா ராயுடன்

நவீனகால வர்மன்

ரவிவர்மன் என்றப் பெயரை அவரது அம்மா சூட்டவில்லை. சோழ அரசர்களான அருள்மொழி வர்மன் மற்றும் குலோத்துங்க வர்மன் ஆகியோர் மீது கொண்ட ஈர்ப்பால், அவரே தனக்கு சூட்டிக் கொண்ட பெயர் அது. அவர்களின் புகழும் செயல்களும் கேள்விப்பட்ட ரவி, வர்மன் என்ற பெயரை தன் பெயருடன் சேர்த்துக் கொண்டார். பல தடவை ராஜா ரவி வர்மாவை பார்த்து அவர் பெயர் சூட்டிக் கொண்டதாக பலர் கிண்டல் செய்திருக்கின்றனர். ஆனால் உலகப் புகழ் பெற்ற ஓவியர்களான ரெம்ப்ராண்ட் மற்றும் பிகாஸோ ஆகியோரின் படைப்புகள் முன் தியான நிலையில் ரவி அமர்ந்திருக்கும் காட்சியை அவர்கள் கண்டிருக்க மாட்டார்கள். 

பொன்னியின் செல்வனின் பல்வேறு பாத்திரங்களை பல வகை வண்ணங்களில் ரவி காண்பித்ததற்கு அந்த தியானமும் ஒரு காரணமாக இருக்கலாம். முரட்டு சுபாவம் கொண்ட ஆதித்ய கரிகாலனுக்கான ஒளியமைப்பு, அமைதியான இனிமை நிறைந்த அருள்மொழி வர்மனுக்கான ஒளியமைப்பிலிருந்து வேறுபட்டிருக்கும். பாத்திரங்களின் உணர்வுநிலைகளுக்கு ஏற்ப ஒளியமைப்பை அவர் வடிவமைக்கிறார்.

வசனங்களில் இடம்பெறும் வார்த்தைகளின் ஆழத்துக்குள் அவரது கேமரா புகுந்து நிகரற்ற அழகு நிறைந்த காட்சிகளாக மலரும் தருணங்கள் பொன்னியின் செல்வன் படம் முழுக்க நிரம்பியிருக்கும். “செல்லும் வழியில் கருவூலம் இருக்கிறது. அங்குள்ள செல்வங்களைப் பார்த்து மயங்க வேண்டாம்,” என நந்தினி சொல்கிறாள். அரண்மனைக்கு வெளியே செல்லும் வழியை நந்தினி திறந்து விடும்போது வந்தியத்தேவன்,“நான் வைரச்சுரங்கத்தையே இதோ இங்கு பார்க்கிறேனே!” என பதிலுரைக்கிறான். அதற்கு அவள், “மயங்கி விட்டீர்களா?” எனக் கேட்கிறாள். திரைக்கதையில் இத்தகைய ஈர்ப்புமிக்க வரிகளை எழுதுவது சுலபம். காட்சியாகும்போது பல சமயங்களில் அந்த ஈர்ப்பு இல்லாமல் போகும். அந்த வரிகள் காட்சிப்பூர்வமாக பரிணமிக்கும்போதுதான் இயக்குநருக்கும் பார்வையாளர்களுக்கும் ஒளிப்பதிவாளரின் மாயம் புரியும். ‘வைரச்சுரங்கம்’ என்ற வார்த்தைகள் உதிர்க்கப்பட்டதும் ஐஸ்வர்யா ராயின் எழில் பொங்கும் க்ளோசப் காட்சி ஒன்றை நாம் காணுவோம். அழகான ஒரு வரி, அழகான ஒரு காட்சியால் மேன்மையுறும் தருணம்! ஐஸ்வர்யா ராயின் வார்த்தைகளில் (”மயங்கினீர்களா?”) நம்பிக்கைக்கான குறிப்பு தென்படும். அதற்கு ஒரே காரணம் அந்த வசனத்தை ரவிவர்மன் காட்சிப்படுத்திய விதம்தான்.      

ரவிவர்மனின் கேமராக் கண்கள்தான் அங்கு அந்தக் கேள்விக்கு பதிலளிக்கின்றன. படம் பார்க்கும் நம் அனுபவம் இப்போது சினிமாவின் நவீன காலத்தில் இருக்கிறது. அதனால்தான் 49 வயது பெண்ணின் திமிர் கலந்த அக்கேள்வி கிண்டலாக மாற்றப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. அந்த காலச்சூழலையும் வெல்லும் வலிமை கொண்டவராக ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இருக்கிறார்.

ரவிவர்மனை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யும் இயக்குநர்கள் அனைவரும் திரைக்கதைகளை பல மாதங்களுக்கு முன்னமே அவரிடம் கொடுத்து விடுவார்களென சொல்லப்படுகிறது. எழுத்தாளரும் இயக்குநரும் செய்த கற்பனை பத்து மடங்காக அவரின் காட்சிகளில் பெருகுவது காரணமாக இருக்கலாம். உதாரணமாக, ஐஸ்வர்யா லஷ்மி நடித்த பூங்குழலி பாத்திரம்! சமுத்திரக்குமாரி என பொன்னியின் செல்வன் படத்தில் அப்பாத்திரம் அழைக்கப்படுகிறது. படத்தில் சமுத்திரகுமாரி காட்டப்படும்போது அந்தப் பெண்ணின் அழகும் கடலின் அழகும் ஒன்றாகித் தெரிய வேண்டுமென இயக்குநருடன் சேர்ந்து ஒளிப்பதிவாளரும் கற்பனை செய்திருக்கலாம். நிலா ஒளிரும் மழை மேகங்கள் மூண்ட இரவில் கடலிலிருந்து படகுக்கு பூங்குழலி ஏறும் காட்சி, பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள சிறந்த காட்சிகளில் ஒன்றாகும். கடலின் மெய்யான மகள் என எழுதப்பட்ட வார்த்தைகளுக்கான காட்சிப்பூர்வ விளக்கம் அது. வலிமை முக்கியக் கூறாக கருதப்படும் காலத்தில் பொன்னியின் செல்வன் வெளியாகியிருக்கிறது. பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும் சமீபத்திய படங்களில் ஆணின் வலிமையைக் காட்ட மார்பு, தசைகள் ஆகியவற்றுக்கு ஒளிப்பதிவாளர்கள் க்ளோசப் காட்சிகள் வைக்கின்றனர். ஆனால் ரவிவர்மன், பொன்னியின் செல்வனின் நாயகர்களையும் வில்லன்களையும் அந்த பாணியில் காண்பிக்கவில்லை. இந்தக் கோணத்தில் பார்த்தால் பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னத்தின் ஆளுமை மட்டும் வெளிப்படவில்லை என நாம் உணர்ந்து கொள்ள முடியும். அதனால்தான் படப்பதிவு முடிந்த பின்னான பணிகளிலும் ஒளிப்பதிவாளர் இருந்திருக்க வேண்டுமென கருதுகிறோம்.

 

ஆயிரம் ரூபாய் மதிப்பு மிக்க கேமராவை, அலங்கோல உடை தரித்திருந்த ஒரு ஹோட்டல் பணியாளருக்கு, வெறும் நூற்றைம்பது ரூபாய்க்கு விற்ற மூர்மார்க்கெட்டின் கடைக்காரருக்கு பின்னாளில் அந்த நபர் இந்தியச் சினிமாவின் பொக்கிஷமாக மாறுவார் என தெரிந்திருக்குமா? 

ஊரை விட்டு ஓடி வந்த பிறகு தஞ்சையின் வரலாற்றை மீண்டும் கற்பனை செய்ய வேண்டியிருக்கும் என ரவிவர்மன் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார். மீட்சிகளுக்கான மனித வரலாற்றில் இப்படித்தான் ரவிவர்மன் சிறந்தவொரு அத்தியாயம் ஆகிறார்.

இனி பொன்னியின் செல்வன் படத்தைப் பார்க்கும்போது ரவிவர்மனையும் நினைத்துக் கொள்ளுங்கள். காவிரி ஆற்றில் விழுந்த அருள்மொழிவர்மன் மூழ்கி விடுவான் என நினைக்கும்போது பொன்னி என்ற பெண் அவனைக் காப்பாற்றினாளென்ற கற்பனை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வனை வரலாற்று நாயகனாக மாற்றியதெனில், பொன்னியின் செல்வன் படம் அதே மாயத்தை நிகழ்காலத்தில் செய்து காட்டியிருக்கிறது. தந்தையையும் தாயையும் இழந்து அநாதையாக தூக்கியெறியப்பட்ட ஒருவன், வளர்ந்து பொன்னியின் செல்வனை காட்சிப்படுத்தும் உயரத்தை எட்டியிருக்கிறான். எனவே என்னைப் பொறுத்தவரை உண்மையான பொன்னியின் செல்வன் ஒளிப்பதிவாளர்தான்.

 


Subscribe to our channels on YouTube & WhatsApp

About Author

வி. கே. ஜோபிஷ்

ஆசிரியர், எழுத்தாளர்