தொகுப்பு: AIDEM குழு
[தமிழில்: ராஜசங்கீதன்]
2022ம் ஆண்டில் நீதித்துறையின் பல ’அறிவார்ந்த நீதிபதிகள்’ முன் வைத்த விசித்திரமான பல கூற்றுகளை அரசியல் மற்றும் சட்ட ஆர்வலர்கள் காண நேர்ந்தது. அடிப்படையான சமூக உணர்வு மற்றும் உணர்திறன் ஆகியவற்றிலிருந்து மட்டுமின்றி அதிகாரப்பூர்வ நடத்தை விதி, சட்டம் மற்றும் பகுத்தறிவு போன்றவற்றிலிருந்தும் எப்படி இந்த நீதிபதிகள் விலகிச் சென்றிருக்கின்றனர் என்பதை இக்கூற்றுகள் தெளிவாக்குகின்றன. சட்டங்களை விளக்கும்போது தங்களின் எண்ணங்களையும் தனிப்பட்ட கருத்துகளையும் அவர்கள் வெளிப்படுத்தி சர்ச்சைகளை உருவாக்கினர். அத்தகைய ஏழு சம்பவங்களை AIDEM ஆசிரியர் குழு தொகுத்திருக்கிறது இங்கே:
நவம்பர் 23, 2022: பாட்னா உயர்நீதிமன்றத்தின் நேரடி ஒளிபரப்பு ஒன்று, நீதித்துறையில் இருக்கும் சாதியத்தை அம்பலப்படுத்தியது. நிலம் கையகப்படுத்தும் துறையின் மாவட்ட அதிகாரியான அர்விந்த் குமார் பார்தியை கேள்வி கேட்கும்போது ஒரு நீதிபதி இடஒதுக்கீடுகளை கிண்டலடிப்பதை காணொளி வெளிக்காட்டியது. வழக்கின் வாதிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதற்கான நேரத்தை வழங்கி வழக்கை ஒத்தி வைக்கும்போது நீதிபதி சந்தீப்குமார், “பார்தி, உங்கள் வேலையை நீங்கள் இட ஒதுக்கீட்டிலா வாங்கினீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு பார்தி ஆம் என பதிலுரைக்க, நீதிமன்ற அறையில் இருந்த ஒரு வழக்கறிஞர், “கனம் நீதிபதி இனி பிரச்சினையை புரிந்து கொள்ள முடியும்,” எனக் கூறினார். இன்னொரு வழக்கறிஞரும் நீதிபதியும் சிரிப்பொலிக்கு நடுவே பார்தியையும் அவரின் சாதியையும் கிண்டல் செய்யும் கருத்துகளையும் அக்காணொளியில் கேட்க முடிந்தது.
ஆகஸ்ட் 12, 2022: கோழிக்கோடின் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி எஸ்.கிருஷ்ண குமார், இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 354 A (பாலியல் துன்புறுத்தல்) வழக்கு ஒன்றின் ஜாமீன் மனு குறித்த வாதத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பினார். பாலியல் அச்சுறுத்தல் வழக்கில் சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான சிவிக் சந்திரனுக்கு முன் ஜாமின் வழங்கும்போது நீதிபதி, ”உடல் தொடப்பட்டிருந்தாலும், அல்லது விரும்பத்தகாத, வெளிப்படையான சமிக்ஞைகளைக ஒருவர் கொடுத்திருந்தாலும் மட்டுமே 354 A சட்டப் பிரிவின் கீழ் அதை வழக்காகப் பதிவு செய்யமுடியும்,” என்றார். மேலும், அதை வழக்காக எடுத்துக் கொள்ள, “பாலியல் ரீதியாக இணங்கினால்தான் உதவி எனச் சொல்லப்பட்டிருக்கவோ கேட்கப்பட்டிருக்கவோ வேண்டும். பாலியல் இச்சையை உணர்த்தும் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். முன் ஜாமீன் மனுவுடன் இணைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களில் புகார் கொடுத்தவர் பாலுணர்வை தூண்டும் வகையில் உடை உடுத்தியிருப்பது தெரிகிறது. ஆகவே, முதல் நோக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக 354 A பிரிவின் கீழ் வழக்கு தொடுக்க முடியாது,” என்று கூறியிருக்கிறார்.
ஆகஸ்டு 11, 2022: அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த ஒரு நிகழ்வில், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம்.சிங் பேசுகையில், மநுஸ்மிருதி போன்ற சாத்திர நூல்கள் கொடுக்கும் ”உயரிய இடத்தால் இந்தியப் பெண்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கின்றனர்” எனக் கூறினார். பெண்ணுரிமை குழுக்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வெளியிட்ட அறிக்கை, “பெண்களின் நிலை இந்தியாவிலும் உலகளவிலும் குறிப்பாக விளிம்புநிலை சமூகங்களிலும் துயரநிலையில் இருப்பது குறித்து நீதிபதி சிங் அறியாமலிருப்பது பரிதாபம்,” எனக் குறிப்பிட்டது.
ஜூன் 17, 2022: கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு ஜாமீன் மனு மீதான உத்தரவில், “வன்புணர்வுக்கு பின் உறங்குவது பெண்ணின் சரியான நடத்தையல்ல,” எனக் குறிப்பிட்டார். 42 வயதான மனித வளத் துறை மேலாளர் ஒருவர் தான் வன்புணர்வுக்குள்ளானாதாகத் தொடர்ந்த வழக்கு அது. விசாரணையில் வன்புணர்வுக்கு பிறகு அப்பெண் உறங்கி விட்டதாக சொல்லப்பட்டது. “புகார் கொடுத்தவர் கொடுத்த விளக்கத்திலுள்ளது போல, வன்புணர்வுக்குப் பிறகு சோர்வாகித் தூங்கி விட்டார் என்பது இந்தியப் பெண்ணுக்கான நடத்தை கிடையாது. வன்புணர்வுக்குள்ளான பிறகு பிறகு நம்மூர் பெண்கள் அது போல் நடந்து கொள்வதில்லை,” என நீதிபதி கூறினார். கடும் சீற்றம் கிளம்பியபிறகு நீதிபதி தன் கருத்துகளை திரும்பப் பெற்றார்.
மே 25, 2022: காதலிக்கும் இளைஞர்கள் தம் இணையைத் தேர்ந்தெடுக்கையில் அவர்களது பெற்றோரையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்களுக்கு கர்மவினைகள் நேரும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. “வாழ்க்கையில் எதிர்வினை, எதிரொலி, பிரதிபலிப்பு போன்றவை இருக்கும் என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோருக்கு அவர்கள் இன்று என்ன செய்கிறார்களோ அதுவே நாளை அவர்களுக்குத் திரும்ப நேரும்,” என நீதிமன்றம் ஒரு உத்தரவில் குறிப்பிட்டது. ஒரு பெண் ஓர் இளைஞனை காதலித்து வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டதையடுத்து, அப்பெண்ணின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவில்தான் நீதிமன்றம் இப்படி குறிப்பிட்டது. மேலும் அந்த உத்தரவு மநுஸ்மிருதியையும் குறிப்பிட்டு, “பெற்று வளர்த்து குழந்தைகளை ஆளாக்க பெற்றோர் படும் பாட்டை 100 வருடங்கள் உழைத்தாலும் எவராலும் ஈடு செய்ய முடியாது என மநுஸ்மிருதி கூட சொல்லியிருக்கிறது. எனவே எப்போதும் உங்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கு ஏதுவான விஷயங்களையே செய்யுங்கள். அப்போதுதான் நீங்கள் செய்யும் இறை வழிபாட்டுக்குப் பலனிருக்கும்” என்றது.
மே 11, 2022: திருமண உறவில் வன்புணர்வு குறித்த தில்லி உயர்நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பில் இருவேறு நிலைப்பாடுகளை நீதிபதிகள் கொண்டிருந்தனர். ஒருவர், “கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான கலவி புனிதம்,” என்றார். “கலவிக்கான நியாயமான எதிர்பார்ப்பை” திருமணத்தில் “தடுக்க முடியாது” என அவர் குறிப்பிட்டார். இன்னொரு நீதிபதி, “எந்தத் தருணத்திலும் ஒப்புதலை விலக்கிக் கொள்ளும் உரிமைதான் பெண்ணின் வாழ்க்கை மற்றும் விடுதலை ஆகியவற்றின் உரிமைகளுக்கான அடிப்படை,” எனக் கூறினார். ஆயினும் இந்த வழக்கு ஒரு “சாரமான சட்டப் பிரச்சினையை எழுப்பியிருப்பதாகவும்”, அதற்கு உச்ச நீதிமன்றமே தீர்வு காண முடியும் என்று அந்த நீதிபதிகள் கூறினர். இந்தியத தண்டனைச் சட்டப்பிரிவு 375-ன்படி, மைனரல்லாத மனைவியுடன் கணவன் கலவி கொள்வதை வன்புணர்வு எனக் கொள்ள முடியாது.
மார்ச் 26, 2022: 2020ம் ஆண்டில் நடந்த தில்லி கலவரங்களில், ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வெர்மா ஆகியோர் பேசிய வெறுப்புப் பேச்சுகள் மீதான குற்ற விசாரணை வேண்டுமென தில்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்து. விசாரணையின் போது நீதி மன்றம் இப்படி குறிப்பிட்டது: “புன்னகையுடன் எந்த விஷயத்தை சொன்னாலும் அதில் குற்றத் தன்மை இருக்காது. காயப்படுத்துவது போல் எதாவது சொன்னால், அப்பேச்சு நிச்சயமாக குற்றத் தன்மை கொண்டிருக்கும். இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் பேசும் பேச்சுகளைக் கொண்டு ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்ய முடியும்.”
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான இயக்கம் நடந்த போதும், தில்லி கலவரங்களின்போதும் அந்த இரண்டு பாஜக தலைவர்கள் பேசியதற்கு எதிராகத்தான வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. “துரோகிகளைக் கொல்லுங்கள்,” எனப் பேசினார் தாகூர். பர்வேஷ் வெர்மா ஒரு பேரணியில் பேசுகையில், தில்லி ஷாஹின் பாகில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கூடியிருக்கும் ”லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள், உங்களது வீடுகளில் புகுந்து சகோதரிகளையும் மகள்களையும் வன்புணர்வு செய்து கொன்றுவிடுவார்கள்” எனக் கூறியிருந்தார்.
பிப்ரவரி 2022: பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனெடிவாலா ஒரு சர்ச்சையில் சிக்கி பதவி விலகினார். பாலியல் அச்சுறுத்தல்களிலிருந்து குழந்தைகளை காக்கும் சட்டத்தின்படி (போக்சோ) ‘பாலியல் ரீதியிலான தாக்குதல்’ என்பது என்ன என்று விளக்கி அவர் தொடர்ச்சியாக அளித்த தீர்ப்புகளையொட்டிதான் சர்ச்சை ஏற்பட்டது. ஜனவரி மற்றும் பிப்ரவரி 2021-ல் அவர் அளித்த தீர்ப்புகளில், பாலியல் இச்சையுடன் தோலுடன் தோல் உரசினால்தான் அது பாலியல் தாக்குதல் என விளக்கினார். இச்சட்டத்தின் படி, ஒருவர் ஒரு “மைனர் பெண்ணின் கைகளைப் பிடித்து பேண்ட் ஜிப்பை திறப்பது” பாலியல் தாக்குதல் ஆகாது என்றும் கூறியிருந்தார். இத்தகைய கருத்துகளுக்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து கூடுதல் நீதிபதியாக பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு நிராகரிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதி நியமன வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை.
Read this article in Malayalam, English or Hindi
Our judges share the same notions as the ordinary mortals in our society. These judgments only go to prove that the judges need special training to interpret law and render justice in consonance with our constitutional values, let alone feminist ideologies bereft of misogyny etc.