A Unique Multilingual Media Platform

The AIDEM

Articles Memoir

வாணி ஜெயராம்: பொங்கும் கடலோசை

  • February 5, 2023
  • 1 min read
வாணி ஜெயராம்: பொங்கும் கடலோசை

1979. மதுரை செல்லூரில் இருந்து இடதுபுறம் திரும்பி கோரிப்பாளையம் செல்லும் அந்த வளைவில் இருந்த டீக கடைக்கு மாலை 4 மணிக்கு நண்பர்களுடன் சென்றால் உடனடியாக கடைக்காரர் செய்வது இதுதான்: எச் எம் வி கிராமபோனில் எந்த பாட்டு ஓடிக்கொண்டிருந்தாலும் நிறுத்திவிட்டு அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தின் பளபளக்கும் கருப்பு எல்.பி. ரிகார்டை மிக ஸ்டைலாக எடுத்து கச்சிதமாக இசைதட்டு மேடையில் வைத்து தட்டின் விளிம்பில் ஊசி முனையை வைப்பார். மிகுந்த எதிர்பார்ப்புடன் இதை கவனிப்போம். அந்த ஸ்ஸ்ஸ்ஸ் சத்தத்தை தொடர்ந்து கிடார் ஒலிக்கத தொடங்கும். நாங்கள் பாட்டுக்குள் போக அவர் டக் டக் என பலகையில் வரிசையாக நான்கு டீ கிளாஸ்களை வைத்து டீ போடும் வேலைக்குள் நுழைவார். டிகாக்சன் வடிகட்டியில் இறங்கும் நேரம் ‘நானே நானா யாரோதானா’ என வாணி பாடத் தொடங்குவார். தேநீரும் வாணியும் சேர்ந்து கலந்து மெல்ல மெல்ல இறங்க இறங்க, கோரிப்பாளையம் சந்திப்பின் பரபரப்பான போக்குவரத்து எல்.பி. ரிகார்டின் மெல்லிய ஏற்ற இறக்கத்துக்குள் மறைந்து வேறு ஒரு உலகத்துக்குள் நாங்கள் இருப்போம்.

இது தினமும் நடக்கும் ஒரு சடங்காக பல நாட்கள் தொடர்ந்தது.

…..

அதற்கு முன் இலங்கை வானொலியில் தினமும் பலமுறை ஒலித்தது ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ ….தான். 1974இல் வெளியான தீர்க்க சுமங்கலி படத்தில் இடம் பெற்ற பாடல், எம்.எஸ். விஸ்வநாதன் வழங்கிய அந்த வாய்ப்பு தமிழில் அவருக்கான பெரும் கதவைத் திறந்துவிட்டது. ஒரு நாளில் பலமுறைகள் இலங்கை வானொலியில் ஒலித்த பாடல் அது. அதற்கு முன்பே வீட்டுக்குவந்த மருமகள் (1973) என்ற படத்தில் சங்கர் கணேஷ் இசையில் ஓர் இடம் உன்னிடம் என்ற பாடலைப் பாடியிருந்தார் அவர்.

30.11.1945 அன்று தமிழ்நாட்டில் வேலூரில் பிறந்தவர் கலைவாணி. துரைசாமி ஐயங்கார் பத்மாவதி தம்பதியரின் ஒன்பது பிள்ளைகளில் ஆறு பேர் பெண்கள்; அவர்களில்தான் ஒருவர் கலைவாணி. அவரது அம்மா முறையாக கர்நாடக சங்கீதம் கற்றவர். மூன்று வயது நிரம்பிய கலைவாணியால் ராகங்களை அடையாளம் கண்டு சொல்ல முடிந்ததால் அவர் மீது தனிப்பட்ட சிறப்பு கவனம் எடுத்துக் கொண்ட பெற்றோர் அவரை முறையாக சங்கீதம் கற்க அனுப்பினார்கள். ஐந்து வயதில் சரளி வரிசையைக் கற்காமலேயே நேரடியாக முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனைகளை பாடும் அளவுக்கு கலைவாணி திறமை பெற்று இருந்துள்ளார். அவை அபூர்வமான ராகங்களில் அமைந்த கீர்த்தனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் எட்டாவது வயதில் சென்னை ஆல் இந்தியா ரேடியோவில் பாடினார். சென்னையில் க்வின் மேரீஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பின் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணியில் சேர்ந்தார். ஜெயராமுடன் திருமணம் ஆன பின் பம்பாய் சென்றார். அவரது கணவர் இரண்டு எம்.ஏ. பட்டங்கள் பெற்றவர். London Institute of Management இல் படித்தவர். உயர் பதவியில் இருந்த அவர் வாணியின் இசைத்திறனை மேலும் ஒளிரச்செய்யும் வண்ணம் அதற்கான அடுத்த கட்ட பயிற்சிகள், வாய்ப்புகளுக்காக தன் வேலையை உதறிவிட்டு வாணியின் நலனில் முழுமையாக கவனம் எடுத்துக்கொண்டார். வாணியும் தன் வங்கிப்பணியில் இருந்து விலகினார்.

இந்துஸ்தானி

அதன் அடுத்த கட்டமாக உஸ்தாத் அப்துல் ரஹ்மான்கான் அவர்களிடம் இந்துஸ்தானி சங்கீதம் கற்றார். வாய்ப்பாட்டிசையின் பலவேறு வடிவங்கள் ஆன தும்ரி, கஜல், பஜன் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். அவரது முதல் இசை அரங்கேற்றம் 1969இல் நடந்தது. புகழ்பெற்ற இந்தி திரைப்பட இசையமைப்பாளர் வசந்த் தேசாய் அவர்களிடம் வாணியை உஸ்தாத் அறிமுகப்படுத்தி வைக்க, மறுநாளே ஒரு மராட்டிய நாடகம் ஒன்றுக்கு பாடும் வாய்ப்பை வாணிக்கு தேசாய் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து திரைப்பட வாய்ப்பு வந்ததுதான் வாணிக்கான கலையுலக வாழ்வின் பெரும் திருப்பமாக அமைந்தது. ஆம், 1971இல் வசந்த் தேசாய் தான் இசையமைத்த Guddi படத்தில் மூன்று பாடல்களை பாடும் வாய்ப்பை வாணிக்கு வழங்கினார். அவற்றுள் Bole re papihara (போல்ரே பப்பிஹரா) என்ற பாடல் அழியாப் புகழ் பெற்றது.

இதன் பின் இந்தி திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன. அன்றைய மெட்ராசில் வாணி பாடிய இந்தி பாடல்களின் இசை நிகழ்ச்சி மியூசிக் அகாடெமியில் நடைபெற்றது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு அங்கே வந்திருக்கிறார். வாணியின் திறனை அறிந்து தாயும் சேயும் என்ற படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். ஆனால் படம் வெளியாகவில்லை.

Vani Jairam with Ilayaraaja

அதேபோல் இரண்டாம் நாள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது புகழ்பெற்ற இசையமைப்பாளர் சலீல் சவுத்ரி அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. 1973இல் ஸ்வப்னம் என்ற படத்தில் ‘சவுரயுதத்தில் விடர்ந்நொரு கல்யாண சவுகந்திகமானீ பூமி’ என்ற கற்பனைக்கு அப்பாற்பட்ட இசைக் கோர்வையுடன் ஆன சலீலின் பாடலை பாடினார். யுத்த பூமி (1976) என்ற படத்தில் ‘ஆஷாட மாசம் ஆத்மாவில் மோகம்’ என்ற பாடல் ஆர்.கே. சேகரின் இசையில் அவருக்கு வாய்த்தது. ஏ.ஆர். ரஹ்மானின் தந்தைதான் சேகர்.

தமிழ்நாட்டை மயக்கிய மல்லிகை

நிகழ்ச்சி ஒன்றில் வாணியின் திறன் கண்டு மகிழ்ந்த எம் எஸ் விஸ்வநாதன் 1973இல் அவருக்கு சிறப்பான இடத்தை வழங்கினார். தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ என்ற பாடலே அது. பத்தினிப்பெண் என்றொரு திரைப்படம். எம் எஸ் விஸ்வநாதன் இசை. பாடல் பதிவு முடிந்தபின் கேட்டுப் பார்க்க பாடல் பதிவறைக்கு வந்த வாணியை எம்.எஸ்.வி. அழைத்தார். ஆஹா, நாம் சரியாக பாடவில்லை, இன்னொரு டேக்கா என்று சந்தேகப்பட்ட வாணிக்கு எம்.எஸ்.வி. கொடுத்த அதிர்ச்சி இன்பம் இதுதான்: “நான் பதினைந்து நாட்கள் மண்டையை உடைத்து போட்ட ட்யூன் இது. ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கிற மாதிரி பாடிட்டு போய்ட்டீங்களே!”

வாணி பத்தொன்பது மொழிகளில் பாடியுள்ளார். அவரது சிறுவயதில் விவித்பாரதியில் Binaca Geetmala ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு ஒலிபரப்பாகும். “இந்தியில் வெளியான புகழ்பெற்ற 16 திரைப்பட பாடல்களை ஒலிபரப்புவார்கள். இதே நிகழ்ச்சியில் என் பாடலும் வரும் என்று நான் சொல்வேன், கிண்டல் செய்வார்கள். ஆனால் ஒருநாள் ‘bole re papihare’ (போல்ரே பப்பிஹரா) அதே நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது, கேட்டு அழுதுவிட்டேன்” என்று சொன்னார் வாணி.

Vani Jairam with KJ Yesudas and MSV

… … …

“ஒவ்வொரு வார்த்தையை மட்டும் அல்ல, ஒவ்வொரு எழுத்தையும் கூட தேவையான அளவுக்கு அழுத்தம் கொடுத்து, தேவைக்கு அதிகம் இல்லாத அழுத்தம் கொடுக்காமல் பாட வேண்டும். அது கிராமியப் பாடல், காதல் பாடல், கர்நாடக சங்கீதம், கஜல், காதல், டிஸ்க்கோ என்று எந்த வடிவில் இருந்தாலும் இதுதான் வரையறை. இப்படி அனுபவித்து உணர்ந்து பாடுவதால் எனக்கு எந்த ஒரு பாடலும் கஷ்டமாக இருந்தது இல்லை” என்பார் அவர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி, மார்வாரி, ஹரியான்வி, வங்காளம், ஒரியா, ஆங்கிலம், போஜ்புரி, ராஜஸ்தானி, படகா, உர்து, பஞ்சாபி, துலு, சம்ஸ்கிருதம்என 19 மொழிகளில் பாடியுள்ள அவர் குஜராத், தமிழ், ஒரிசா ஆகிய மொழிகளில் மிகச்சிறந்த பாடகர்கள் இருக்கின்றார்கள் என்று சொல்கின்றார்.

அவர் தமிழில் பாடியவற்றுள் ‘பொங்கும் கடலோசை’, ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’, ‘நாதமெனும் கோவிலிலே’, ‘என்னுள்ளில் எங்கோ’, ‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது’, ‘கண்டேன் எங்கும் பூமகள் ஊர்வலம்’, ‘என் கல்யாண வைபோகம்’, ‘நானே நானா யாரோதானா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘நினைவாலே சிலை செய்து’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

பாலைவனச்சோலை படத்தில் வந்த ‘மேகமே மேகமே’ பாடல் கஜல் வடிவிலான பாடல். இறப்பது உறுதி என்று தெரிந்துகொண்ட இளம்பெண் ஒருத்தி பாடும் கழிவிரக்கம் மிகும் பாடல் அது. ‘என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்’ பாடலின் இரண்டாவது சரணத்தில் ‘சுகங்கொண்ட சிறுவீணை’ என்ற சொல்லை அவர் உச்சரிக்கும் விதம் பாடலின் உச்சம். புனித அந்தோணியார் படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் ‘ தோன்றும் தாரகை எல்லாம் தேவதை ஆகும்’ என்று தொடங்கும் கிறித்துவ நம்பிக்கை சார்ந்த பாடல் எல்லோருக்கும் எப்போதும் பிடித்த பாடல். நெஞ்சமெல்லாம் நீயே படத்தில் இடம்பெற்ற ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது’ என்ற பாடலை வேறு யாராவது பாடியிருந்தால் இத்தனை அழகாக இருந்திருக்குமா என்பது ஐயமே. ‘மார்கழிப் பூக்கள் என்னைத் தீண்டும் நேரமே வா… தாமரை ஓடை…இன்ப வாடை…’ ஆகிய இடங்களின் நெளிவுசுழிவுகளை எத்தனை முறை கேட்டாலும் செவிகள் அலுப்படையா. சங்கர் கணேஷின் இசையில் மிக குறிப்பிடத்தக்க பாடல். பாடல் காட்சியை அவர் பாடிய அழகுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் படு மோசம்.

Vani Jairam with Vasanth Desai at the recording of the song Bolre Pappihara

மீனவ நண்பன் படத்தின் ‘பொங்கும் கடலோசை’ என்ற பாடல் கடலலையின் ஏற்ற இறக்கங்களை பாட்டில் கொண்டு வருவதாகும். அப்பாவியான கணவனை ஏமாற்றி வேறு ஒருவனது நெருக்கத்தில் மலையில் பயணிக்கும் ஒருத்தியின் உள்ளக்கிடக்கையை காம வேட்கையை வெளிப்படுத்தும் ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்’.

வெளிவராத படமான நிஜங்கள் எம் பி சீனிவாசன் இசையில் அமைந்த பாடல். பாரதிதாசன் எழுதிய அம்மா உந்தன் கை வளையாய் ஆக மாட்டேனா என்ற பாடல் அரிதான ஒன்று.

இவை தமிழில் என்றால் கே. விஸ்வநாத் இயக்கத்தில் கே வி மகாதேவன் இசையில் வெளியான சங்கராபரணம் வாணியின் இசைத்திறனின் இன்னொரு பக்கத்தை காட்டியது.

சொல்வதற்கு நிறையவே இருந்தாலும் அதிகம் கேட்கப்படாத ஆனால் துயரின் அடியாழத்தில் பெண்களின் வாழ்க்கை பற்றி சொல்லும் ஒரு பாடலை இங்கே பகிர விரும்புகிறேன். எம்.பி. சீனிவாசன் இசையில் ஜெயகாந்தன் எழுதிய பாடல் இது. வெளிவராமல் போன புதுச்செருப்பு கடிக்கும் படத்தில் அவர் பாடியது. இசைக்கருவிகளின் ஆதிக்கம் குறைந்து பாடலின் ஆழத்துக்கும் வாணியின் குரலுக்கும் இங்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. துயரின் நிழல் படிந்த வீணையும் தபேலாவும் டைமிங்கும். ,உடல் என்பார் எனதுயிர் என்பார் கடல் என்பார் உன் கண் என்பார், என்று தொடங்கும் அப்பாடல்.

‘துயிலினிலே நல்ல கனவு வரும்

துயில் நீங்கி அந்த நினைவு வரும்

துயரம்… அது துயரம்

இது அதே பாடலின் ஒரு சரணம்.

… …

“ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் பூமியில் பிறந்திட வேண்டுகின்றேன்!

அத்தனை பிறப்பிலும் இத்தனை உறவும் அருகினில் இருந்திட வேண்டுகின்றேன்!”

இது அவர் பாடியவற்றுள் அவருக்கு மிகவும் விருப்பமான பாடல் என்று சொல்வார்.

துயரிலும் மகிழ்விலும் எப்போதும் நினைவில் இருப்பார் வாணி!


 

 

 

 

About Author

மு இக்பால் அகமது

மு இக்பால் அகமது இசை ரசிகர், பயணங்களை விரும்புபவர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். வேலிகளுக்கு அப்பால் என்பது இவரது வலைப்பூ

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Cinema Virumbi
Cinema Virumbi
1 year ago

Beautiful article! Sankarabharanam was directed by K Vishwanath.

Iqbal ahamed
Iqbal ahamed
1 year ago
Reply to  Cinema Virumbi

Yes, i agree. requested for correction. Thanks for pointing it out