A Unique Multilingual Media Platform

The AIDEM

Articles Economy Law

பணமதிப்பு நீக்கமும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும், பதிலில்லாக் கேள்விகளும்

  • January 12, 2023
  • 1 min read
பணமதிப்பு நீக்கமும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும், பதிலில்லாக் கேள்விகளும்

(ஆங்கிலத்தில் வெளியான கட்டுரை. தமிழில்: ராஜசங்கீதன்)


2016ம் ஆண்டின் நவம்பர் 8ம் தேதி குடிமக்களுடன் பேசிய பிரதமர், “பல ஆண்டுகளாக இந்த நாட்டின் சீழ் பிடித்த புண்களாக ஊழலும் கறுப்பு பணமும் தீவிரவாதமும் இருந்து வருகிறது. வளர்ச்சியை நோக்கிய போட்டியில் நம்மை அவை தொடர்ந்து தடுத்து வருகின்றன,” என்றார். எல்லை தாண்டி இயங்கும் தீவிரவாதிகள் கள்ளப் பணத்தை கொண்டு அவர்களின் வேலைகளை சாதித்துக் கொள்வதாகவும் கூறினார்.

மேலும் அவர், “பணப்புழக்கத்தின் அளவைப் பொறுத்து ஊழலின் அளவு மாறுகிறது. சம்பாதிக்கப்படும் பணம், ஊழல் வழிகளில் பயன்படுத்தப்படுவதால் பணவீக்கம் மோசமடைகிறது. ஊழல், கறுப்பு பணம், கள்ள நோட்டு மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான சண்டைக்காகவும் நாட்டை சுத்தப்படுத்தும் இயக்கத்துக்காகவும் நம் மக்கள் சில நாட்களுக்கு சிரமங்களை சகித்துக் கொள்ள மாட்டார்களா?” என்றார்.

’தற்காலிக கஷ்டத்தை பொருட்படுத்தாமல் இருப்போம்

ஒற்றுமை மற்றும் நம்பகத்தன்மைக்கான விழாவில் பங்கேற்போம்

வரும் தலைமுறைகள் கண்ணியத்துடன் வாழ வழி செய்வோம்

ஊழலையும் கறுப்பு பணத்தையும் எதிர்த்து சண்டையிடுவோம்

தேசத்தின் வளம், ஏழைகளுக்கு பலனளிப்பதை உறுதி செய்வோம்

சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் அவர்களின் பங்கை பெறச் செய்வோம்,’ என்றார் பிரதமர்.

மக்களின் கோபத்தை பார்த்த பிறகு நவம்பர் 13ம் தேதி பிரதமர் மோடி கோவாவில் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்: “வெறும் 50 நாட்கள்தான் கேட்டேன். டிசம்பர் 30-க்கு பிறகு என்னுடைய பணி பலனளிக்கவில்லை என்றாலோ அதில் தவறுகள் இருந்தாலோ தப்பான நோக்கம் அதில் கண்டறியப்பட்டாலோ, இந்த நாடு கொடுக்கும் எந்த தண்டனையையும் ஏற்க நான் தயார்”. 

கூடவே, “70 வருடங்களாக நீடிக்கும் இந்த நோயை நான் 17 மாதங்களில் சரி செய்ய வேண்டும். 70 வருடங்களாக அவர்கள் சேர்த்து வைத்ததை நான் கொள்ளையடிக்க வேண்டியிருக்கிறது,” என்று கூறினார். ஊழலுக்கு எதிராக இன்னும் பல திட்டங்கள் வரவிருக்கின்றன என்றும் எச்சரித்தார் அவர். பார்த்தால் அமிதாப் பச்சன் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோரைக் காட்டிலும் மோடி சிறந்த நடிகர் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள். 

58 பேர் நீதிமன்றத்துக்கு சென்றனர். எல்லா மனுக்களும் இணைக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதி அமர்வுக்கு அனுப்பப்பட்டது. தீர்ப்பில் முன்னாள் நிதி அமைச்சரும் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறார்.

பணமதிப்புநீக்க நடவடிக்கையில் தலைகீழ் அணுகுமுறை கையாளப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் மனுவில் தெரிவித்தார். மேலும் அவர், பணமதிப்பு நீக்கத்துக்கான முன்மொழிவை தொடங்கியது ஒன்றிய அரசுதான் எனக் குறிப்பிடுகிறார். வங்கியின் மத்தியக் குழு கருத்தை 7 நவம்பர் 2016 அன்று ஒன்றிய அரசு கேட்டிருக்கிறது. அடுத்த நாளான 8 நவம்பர் 2016 அன்றே மத்தியக் குழு கூட்டம் மாலை 5 மணிக்கு நடந்ததாகவும் மனுவில் அவர் குறிப்பிடுகிறார். சில மணி நேரங்களிலேயே மத்தியக் குழுவின் பரிந்துரை ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு, பணமதிப்புநீக்கம் குறித்த அமைச்சரவையின் முடிவை தேசிய தொலைக்காட்சியில் அதே நாள் இரவு 8 மணிக்கு தோன்றி பிரதமர் அறிவித்தார் எனவும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.  வெளிவராத ஒரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கிறது.. நவம்பர் 8, 2016-க்கு பல நாட்களுக்கு முன்பே புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வங்கி கருவூலங்களுக்கு சென்று விட்டன. கருவூல ரசீதில் எழுதப்படாத வகையில், பெட்டிகளில் அவை வைக்கப்பட்டன. இதை யார் முடிவு செய்திருப்பார்?

 

தடை செய்யப்பட்ட நோட்டுகளை டெபாசிட் செய்ய வங்கிகளில் பொதுமக்கள் வரிசையில் நிற்கின்றனர்

மனுதாரர் மல்விந்தர் சிங்கின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் சில முக்கியமான விஷயங்களை முன்வைத்தார். ஒவ்வொரு வங்கி நோட்டும் இந்தியாவின் எப்பகுதியிலும் செல்லுவதற்கான உத்தரவாதத்தை ஒன்றிய அரசு வழங்கியிருக்கிறது. எனினும் புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளுக்கும் இந்திய அரசாங்கத்திடம் இருக்கும் மொத்த ரூபாய் நோட்டுகளுக்கும் ரிசர்வ் வங்கி சட்டத்தின் 34ம் பிரிவின்படி வெளியீட்டுத் துறையே பொறுப்பு என்பதை அவர் சுட்டிக் காட்டினார். 

மேலும் நவம்பர் 8, 2016 அன்று பிரதமர் பேசுகையில் நேர்மையுடன் உழைக்கும் மக்களின் உரிமைகளும் நலன்களும் முழுமையாக பாதுகாக்கப்படும் எனத் தெளிவாகக் கூறியதையும் மூத்த வழக்கறிஞர் குறிப்பிட்டார். 2016ம் ஆண்டின் டிசம்பர் 30ம் தேதிக்குள் ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாயை வங்கியில் கொடுக்க முடியாதவர்கள், ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட அலுவலகங்களுக்கு 31 மார்ச் 2017 வரை சென்று ஓர் உறுதிச்சான்று கொடுத்து நோட்டுகளை கொடுக்கலாம் என்றும் பிரதமர் உறுதியளித்திருந்தார். இந்தியாவின் அதிகாரமிக்க பொறுப்பில் இருக்கும் பிரதமர் போன்ற ஒருவரே, 31 மார்ச் 2017 வரை ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட அலுவலகங்களுக்கு சென்று நோட்டுகளை கொடுக்கலாம் என உறுதியளித்திருந்ததை வழக்கறிஞர் குறிப்பிட்டுக் காட்டினார். அதே நாளில் பின்வரும் ஊடகக் குறிப்பும் வெளியிடப்பட்டது: 

“உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை மாற்றவோ வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கவோ டிசம்பர் 30, 2016 வரை முடியாதோருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட அலுவலகங்களில் ஆர்பிஐ குறிப்பிடும் ஆவணங்களோடு அவர்கள் சென்று மாற்றிக் கொள்ளலாம்.”

பிரதமர் அளித்த உறுதியை 2016 நவம்பர் 8 அன்று வெளியான ஆர்பிஐ அறிவிப்பும் கொண்டிருந்ததை வழக்கறிஞர் தெரிவிக்கிறார். 2017ம் ஆண்டின் எண்.149 கொண்ட வழக்கு இப்படியான நூதனமான உண்மைகளை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்றார் வழக்கறிஞர்.திவான் சமர்ப்பித்த மனுவின்படி, பஞ்சாபிலுள்ள சங்க்ரூரின் மத்திய கூட்டுறவு வங்கியிலிருக்கும் (கெலான் கிளை) தன் கணக்கிலிருந்து 1,20,000 ரூபாயை 2015 டிசம்பர் 3 அன்று எடுத்திருக்கிறார். ரொக்க சேமிப்பாக அவர் வைத்திருந்த 42,000 ரூபாயுடன் சேர்த்து அதை கைவசம் வைத்திருந்தார். மொத்தமாக 1,62,000 ரூபாய் (500 ரூபாய் நோட்டுகள் 60ம் 1000 ரூபாய் நோட்டுகள் 132ம்) அவர் வைத்திருந்தார். 2016 ஏப்ரல் 11 அன்று அமெரிக்காவில் வசிக்கும் மகனைப் பார்க்க அவர் சென்றார். மேற்குறிப்பிட்ட பணத்தை எதிர்காலத்தில் செய்யவிருந்த மூட்டு அறுவை சிகிச்சையை கருதி வீட்டிலேயே வைத்து விட்டு சென்றிருந்தார்.

மனுதாரர் மனைவியையும் அழைத்துச் சென்றிருந்தார். இருவரும் இல்லாததால் வீடு பூட்டப்பட்டிருந்தது. பணத்தை வங்கிக்கு சென்று வங்கிக் கணக்கில் செலுத்தும் வாய்ப்பே கிடையாது. 3, பிப்ரவரி 2017 அன்று இருவரும் இந்தியாவுக்கு திரும்பினார்கள். பிரதமர் மோடி கொடுத்த உறுதிமொழியை நம்பி ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கிக்கு சென்றார் மனுதாரர். ஆனால் அங்கு மாற்றப்படவில்லை. எனவே அவர் ரிட்- –  வழக்கு ( ரிட் மனு (சிவில்) எண்.149 of 2017)) தொடுத்தார். நவம்பர் 3 2017 அன்று அம்மனுவை எண்.906 of 2016 கொண்ட ரிட் மனுவுடன் (விவேக் நாராயண் ஷர்மா vs இந்திய அரசு) இணைத்துக் கொள்ளும்படி மனுதாரரை நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதற்கேற்ப அம்மனுவும் 2018 ம் ஆண்டின்  I.A. எண்.26757 வழியாக 2016ம் ஆண்டின் ரிட் மனு (சிவில்) எண்.906 விசாரணையுடன் இணைக்கப்பட்டது.

2016 டிசம்பர் 30 அன்று இந்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சகமும் பொருளாதார விவகாரங்கள் துறையும் வெளியிட்ட அறிவிப்பு , மனுதாரரைப் போன்றோரை முற்றிலும் தவிர்த்து விட்டது என திவான் மனுவில் குறிப்பிட்டிருந்தார். வெளிநாட்டிலிருந்த  நாட்களின் எண்ணிக்கையைக் கொண்டு மனுதாரர் வெளிநாட்டு வாழ் இந்தியர் என வகைப்படுத்தப்பட்டதால், பரிவர்த்தனைக்கான பணத்தை மாற்ற மட்டுமே மனுதாரரால் முடியும். அந்த பரிவர்த்தனை பணத்துக்கான அளவும் 2016ம் ஆண்டின் டிசம்பர் 30ம் தேதி வெளியான அறிவிப்பு முன் வைத்த வரையறையை தாண்ட முடியாது. மேலும் மனுதாரர் வெளிநாட்டுக்கு சென்றபோது கைவசம் பணம் எடுத்து செல்லவும் இல்லை. எனவே 2016ம் ஆண்டின் அறிவிப்பிலிருந்த 4ம் பிரிவின் துணைப்பிரிவின் முதல் ஷரத்துபடி உறுதிச்சான்றும் அளிக்க முடியாது.

 

ரூ. தானேயில் 8 கோடி மதிப்புள்ள 2000 போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன

மேலும் 2017ம் ஆண்டு சட்டத்தின் 4ம் பிரிவின் 1ம் துணைப்பிரிவு கொண்ட 2ம் ஷரத்துபடி, இத்தகைய வர்க்கத்தை சார்ந்த மக்களுக்கும்  இத்தகைய காரணங்களுக்கும் சலுகைக் காலம் ஒன்றை அளிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரமிருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார் வழக்கறிஞர். அந்த அதிகாரம் கடமையாகவும் இந்த நடவடிக்கையில் பரிமாணம் கொள்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இது போன்ற சூழல்கள் ஏற்படுகையில் ஒன்றிய அரசு 2017ம் ஆண்டு சட்டத்தின் 4ம் பிரிவின் 1ம் துணைப்பிரிவு கொண்ட 2ம் ஷரத்தின் கீழான தன் அதிகாரத்தை பயன்படுத்தி மனுதாரர் போன்றோருக்கு சலுகை காலம் அளித்திருக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

31 டிசம்பர் 2016 தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையும் பாரபட்சமாகதான் இருந்ததாக திவான் கூறியிருந்தார். இந்தியாவில் வசிப்போருக்கு நோட்டுகளை மாற்ற வரையறை இருக்கவில்லை. அதுவே வெளிநாட்டு வாழ் இந்தியர் எனில் 25,000 ரூபாய்தான் ஒருவர் மாற்ற முடியுமென்ற வரையறை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த வரையறையும் FEMA விதிகளின்படி குறிப்பிட்ட அந்த தனிநபர் எந்த காலத்தில் இந்தியாவிலிருந்து வெளியே கொண்டு சென்றார் என்பதை பொறுத்த விஷயம்.  மேலும் 30 டிசம்பர் 2016-க்கு பிறகு சரக்கு வரி உள்ளிட்ட வரிகள் செலுத்தி இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்திய சுங்கத்துறை அளிக்கும் சான்றிதழையும் அளிக்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனை இருந்தது.  SBN-கள் எனப்படும் குறிப்பிட்ட வங்கி நோட்டுகளின் இறக்குமதியும் அவற்றின் மதிப்பு உள்ளிட்ட விவரங்களும் கொண்ட சான்றிதழை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தை சேர்ந்த மகேஷ் வியாஸ் எழுதிய  “Using Fast Frequency Household Survey Data to Estimate the Impact of Demonetization on employment” என்ற தலைப்பிலான கட்டுரையையும் தன் மனுவுக்கு ஆதரவாக திவான் மேற்கோள் காட்டினார். பணமதிப்புநீக்க நடவடிக்கைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்த வேலைகளிலிருந்து 1 கோடியே 20 லட்சம் வேலைகள் குறைந்திருப்பதாக கட்டுரை சுட்டிக்காட்டியது. 4 மாத கால அளவில் எடுத்த கணக்கெடுப்பில், பணமதிப்புநீக்கத்தின் தாக்கத்தில் வேலையிழந்தோரின் எண்ணிக்கை 30 லட்சம் என குறைக்கப்பட்டது.  17 ஜனவரி 2017 அன்று வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையையும் அவர் சமர்ப்பித்தார். அனைத்திந்திய உற்பத்தியாளர் சங்கம் (AIMO) நடத்திய ஆய்வை அக்கட்டுரை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பணமதிப்புநீக்க நடவடிக்கைக்குப் பிறகு உற்பத்தித்துறை கணிசமான அளவில் வேலையிழப்பை சந்தித்ததாக அந்த ஆய்வு சுட்டிக் காட்டியது. 

2017ம் ஆண்டு சட்டத்தின் 4ம் பிரிவின் 2ம் துணைப்பிரிவின்படி வெளியிடப்படும் அறிவிப்புகளில் குறிப்பிடப்படும் காலவரையறையை நீட்டிக்கவோ குறைக்கவோ முடிகிற சுயாதீனமான அதிகாரம் அச்சட்டத்தின் பிரிவுகள் 3 மற்றும் 4(1)-ன்படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு இல்லை என 4 நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு குறிப்பிட்டது.

10,719 கோடி SBN-கள் புழக்கத்தில் இருப்பதாக இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அந்த நோட்டுகள் நல்லவை என்றால் ஏன் ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் அவற்றை மாற்ற ஏற்கவில்லை? அந்த நோட்டுகளின் பெரும்பான்மை, அறியாமை நிறைந்த ஏழை மக்களிடம்தான் இருக்கின்றன. நாட்டில் என்ன நடக்கிறது என தெரியாமல் வாழ்க்கையின் ஆதாரமாக அவற்றை அவர்கள் சேர்த்து வைத்திருந்தார்கள்.

 

வேறுபாடு கொண்ட தீர்ப்பு

வேறுபடும் தன் தீர்ப்பில் நீதிபதி நாகரத்னா ஜெ, 4 நீதிபதிகளின் சொல்லாடலையும் குறிப்பிட்டு காட்டி, தன் அற்புதமான பார்வையை அளித்திருக்கிறார்.

கேள்வி: 

8 நவம்பர் 2016 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் விளைவால், சட்டப்பூர்வமாக முடிவு எடுக்கும் முறையில் தவறு இருப்பதாக புறக்கணித்து விடலாமா?

’குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் அறிவிப்பு, முடிவெடுக்கும் செயல்முறை கொண்டிருக்கும் குறைபாடுகளால் பாதிப்புக்குள்ளாகவில்லை’ என 4 நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியது.

ஆனால் நீதிபதி நாகரத்னா முரண்பட்டு பின்வரும் காரணங்களை கொண்ட தீர்ப்பை அளித்தார். ஒன்றிய அரசாங்கம் பணமதிப்புநீக்க நடவடிக்கையை ஒரு சட்டம் இயற்றி செய்திருக்க வேண்டும். பணமதிப்பு நீக்கத்துக்கான முன்மொழிவை வைத்ததே ஒன்றிய அரசுதான். எனவே சட்டத்தின் 26ம் பிரிவின் 2ம் துணைப்பிரிவில் வெளியிடப்பட்டதை போன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்க வேண்டியதில்லை. மேலும் அந்த சட்டப்பிரிவு, பணமதிப்பு நீக்கம் போல ஒன்றிய அரசிடமிருந்து முன்மொழியப்படும் நடவடிக்கைகளுக்கு பொருந்தாது. எனவே முடிவெடுக்கும் செயல்முறை களங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. பணமதிப்புநீக்க நடவடிக்கை குறித்த அறிவுரையை ‘உளத்தேர்வின்படியான அதிகாரம்’ கொண்டு வங்கியின் மத்தியக்குழு வழங்கவில்லை. ஒன்றிய அரசின் கட்டளையில்தான் வங்கி செயல்பட்டிருக்கிறதே தவிர, சுதந்திரமான கருத்தை ஒன்றிய அரசுக்கு அது வழங்கவில்லை. எனவே சட்டத்தின் 26ம் பிரிவின் 2ம் துணைப்பிரிவின் கீழ் 8 நவம்பர் 2016 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு சட்டவிரோதமானது. மேலும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் அறிவிப்பின் சாரத்திலிருந்து உருவாக்கப்பட்ட 2016ம் ஆண்டின் அவசர சட்டமும் 2017ம் ஆண்டின் சட்டமும் சட்டவிரோதமானவை. 

மொத்த தீர்ப்பையும் சரியான கண்ணோட்டத்தில் இது தொகுக்கிறது. 

 

நோக்கங்கள் நிறைவேறியதா?

கறுப்பு பண ஒழிப்பு, கள்ள நோட்டு ஒழிப்பு, ஊழல் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றுக்கு முடிவு கட்டுதல் ஆகியவையே நவம்பர் 8ம் தேதி மோடி முன் வைத்த நோக்கங்கள்.

3-4 லட்சம் கோடி ரூபாய் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வராது என்கிற உண்மை (செல்லாததாக ஆக்கப்பட்ட 15.41 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளில் ரூ.15.31 லட்சம் கோடி ரூபாய்தான் ரிசர்வ் வங்கிக்கு வந்து சேர்ந்தது) தெரிந்த பிறகு, பணமற்ற பொருளாதாரம் உருவாக்குவதை நோக்கங்களில் ஒன்றாக சேர்த்துக் கொண்டனர். இந்த நோக்கங்கள் எதுவும் நிறைவேறவில்லை என்பதே உண்மை.

 

உண்மை நிலை

இப்போது பிரதமர், “கறுப்பு பணத்தை குறைக்கவும் வரி கட்டுதலை அதிகரிக்கவும் வரிமுறையை முறைப்படுத்தவும் வெளிப்படைத்தன்மைக்கு உத்வேகம் அளிக்கவும் பணமதிப்புநீக்கம் உதவியது. இந்த விளைவுகள் தேசத்தின் முன்னேற்றத்துக்கு பெரிதும் பலனளிக்க வல்லவை,” என்கிறார். 

எத்தனை காலத்துக்குதான் அவர் இந்நாட்டு மக்களை முட்டாள்களாக்க முடியும்? தன் தவறுகளை ஒப்புக் கொள்வது ஒரு தலைவருக்கு அவசியமான குணம் இல்லையா? மேற்குறிப்பிட்டவற்றை செய்ய பணமதிப்பு நீக்க நடவடிக்கை தேவையில்லை. 12 வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 104 பேரை பலி கொண்டிருக்க தேவையில்லை. லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களையும் வேலைகளையும் பறித்திருக்கவும் வேண்டியதில்லை.

உண்மை நிலையை பார்ப்போம். தேர்தல்களில் பெருமளவுக்கு பணம் பயன்படுத்தப்பட்டதை கண்டோம். அது கறுப்பு பணம் இல்லையா? சட்டசபை உறுப்பினர்களை விலைக்கு வாங்க பல கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டதை பார்த்தோம். அது கறுப்பு பணம் இல்லையா? அது ஊழல் இல்லையா? 2000 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் கூட கிடைப்பதில்லை. வேறு எங்கே அவை யாவும் போகின்றன?

ரிசர்வ் வங்கியும் தன் 2022ம் ஆண்டு அறிக்கையில் 1.6% 2000 ரூபாய் நோட்டுகள்தான் வங்கிகளில் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. மிச்ச நோட்டுகளை பணக்காரர்கள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதே இதற்கு அர்த்தம். அவை யாவும் கறுப்பு பணமா, வெள்ளை பணமா?

பணமதிப்புநீக்க காலத்தில் இருந்த 18 லட்சம் கோடி நோட்டுகளுக்கு பதிலாக 31 லட்சம் கோடி நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இருக்கும் உண்மையை 2022ம் ஆண்டின் ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. டிசம்பர் 2022-ல் இது 32.41 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 99% குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் (SBNs) திரும்ப வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி முன்பு தெரிவித்திருந்தது.

கறுப்பு பணம் எங்கு போனது? அதிக அளவில் வருமான வரி கணக்கு காட்டப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் சொன்னார்கள். ஆனால் வருமான வரி சேகரிக்கப்பட்டதில் இயல்பான அளவு உயர்வுதான் நேர்ந்திருக்கிறது. எதிர்பார்த்த அளவுக்கு பெரியளவில் உயர்வு இல்லை. பணமதிப்புநீக்கம் எந்த மாறுதலையும் கொடுக்கவில்லை.

 

கள்ளநோட்டு, ஊழல் மற்றும் தீவிரவாதம்

கடந்த நான்கு வருடங்கள் பற்றிய ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, 18.87 லட்சம் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. புழக்கத்தில் இன்னும் எவ்வளவு இருக்கிறதென தெரியவில்லை. 2000 ரூபாய் கள்ளநோட்டை அச்சடிப்பது சுலபமாகிவிட்டது. தரம் வாய்ந்த அச்சுகளால் அச்சடிக்கப்படும் கள்ளநோட்டுகளை கண்டறிவது கடினமாக இருக்கிறது. வங்கிகளில் கண்டறியப்படும் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை இரு மடங்காகி இருப்பதாக 2022ம் ஆண்டின் ரிசர்வ் வங்கி அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. 500 ரூபாய் நோட்டுகளை பொறுத்தவரை 39453-லிருந்து 79699 ஆக ஒரு வருடத்தில் உயர்ந்திருக்கிறது. 200 ரூபாய் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை 8798-லிருந்து 13604 ஆக உயர்ந்திருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டது போல் 2000 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இல்லை. ஆனாலும் அதிக அளவில் அதற்கான கள்ளநோட்டுகள் இருக்கின்றன. அதில் சிறு அளவுதான் வங்கிகளில் கண்டறியப்பட்டு புகார் செய்யப்படுகிறது. காவல்துறை மற்றும் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்தும் கள்ள நோட்டுகள் பற்றிய தரவுகளை ரிசர்வ் வங்கி அறிக்கை கொண்டிராது.

ஆகவே கள்ளநோட்டுகள் ஒழிக்கப்படவில்லை. தீவிரவாதமும் முடிவுக்கு வரவில்லை. ஏகப்பட்ட கள்ளநோட்டுகள் வங்கிகளுக்கு வந்தும், அவை அச்சிடப்படும் இடத்தை ஏன் அரசாங்கம் கண்டுபிடிக்க முயலவில்லை? 

ஊழல் முடிவுக்கு வந்துவிட்டதா? பதிவுத்துறை அலுவலகம் தொடங்கி அரசாங்கத்தின் உயர் பொறுப்புகள் வகிப்பவர் வரை, எந்த விஷயமும் ஊழலின்றி நகராது என்பது மக்களுக்கு தெரியும். 

நாட்டின் பல இடங்களில் தீவிரவாதம் தொடர்கிறது. சொல்லப்போனால் முன்பிருந்ததை விட அதிகரிக்கவே செய்திருக்கிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்திருந்தாலும் ரொக்கமே பிரதான பயன்பாடாக எங்கும் இருக்கும் உண்மையை ரிசர்வ் வங்கித் தரவுகள் காட்டுகின்றன.

 

முன்னாள் நிதி அமைச்சரின் சந்தேகங்கள்

புதிய ரூபாய் நோட்டுகள் நேரடியாக ரிசர்வ் வங்கியின் அச்சகத்திலிருந்தே சிலரின் கைகளை சென்றடைந்ததோ என்கிற சந்தேகத்தை 2016ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் ப.சிதம்பரம் வெளிப்படுத்தியிருந்தார். 2000 ரூபாய் நோட்டுகள் பெருமளவில் பதுக்கல்வாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் பெரும் ஊழலை வெளிப்படுத்துவதாக கூறினார் அவர். “பாதுகாப்பான அச்சகங்களிடமிருந்து நேரடியாக அவை திருடப்பட்டனவா” என்ற கேள்வியை எழுப்பினார். 

“வருமானவரித்துறை அப்பிரச்சினையை துப்பறிவதாக அரசாங்கம் சொல்லியிருக்கிறது. ஆனாலும் இவை அப்பட்டமான குற்ற வழக்குகள்,” என்றார் சிதம்பரம். தமிழ்நாட்டில் 34 கோடி ரூபாய் புதிய நோட்டுகள் ஓர் அரசியல் ஊழியரிடமிருந்து கைப்பற்றப்பட்டதை உதாரணமாக சுட்டிக் காட்டினார். பதுக்கியவர்களிடமிருந்து வருமான வரி நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகளின் பெரும்பகுதி புதிய நோட்டுகள்தாம். மறுபக்கத்தில் ஏழைகளோ வங்கிகளுக்கு வெளியே நீண்ட வரிசைகளில் நின்று கொண்டிருக்கின்றனர்,” எனக் கூறினார். (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 14 நவம்பர் 2016)

  1. பெரும் அளவிலான ரொக்கப் பணம் தனி நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்து தொடர்பான 155 ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கும் தண்டனை வரை கொண்டு செல்லப்படவில்லை. தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர் மற்றும் ஒரு ஒப்பந்ததாரர் ஆகியோரின் வழக்குகள் இதற்கு உதாரணம். அதிகாரி மீண்டும் பணிக்கு திரும்பினார். இப்போது முதுமை காரணமாக ஓய்வு பெற்றுவிட்டார். ஒப்பந்ததாரர், திருப்பதி தேவசம் போர்டில் உறுப்பினராக இருக்கிறார்.
  2. ஆளுங்கட்சியால் தேர்தலின்போது நாடு முழுக்க பயன்படுத்தப்பட்ட 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை மிக அதிகம்.
  3. ரிசர்வ் வங்கியும் பிற வங்கிகளும் புது ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் பற்றிய தகவல் எல்லாவற்றையும் கொண்டிருந்தன. அரசியல் தொடர்புகள் கொண்ட நபர்களுக்கு எப்படி கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுகள் கிடைத்தன என மத்திய புலனாய்வு நிறுவனமோ பிற அரசு நிறுவனங்களோ விசாரித்திருந்தால் சுலபமாக உண்மையைக் கண்டறிந்திருக்க முடியும். ஏன் இது நடக்கவில்லை? முன்னாள் நிதி அமைச்சரின் கூற்றை ஏன் யாரும் இதுவரை நிராகரிக்கவில்லை? உச்சநீதிமன்றத்தில் இது ஏன் விவாதிக்கப்படவில்லை? இப்போது கூட ரிசர்வ் வங்கி வெள்ளை அறிக்கை கொண்டு வர மறுக்கிறது. வெளிப்படைத்தன்மை என்பதே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக பணமதிப்புநீக்க அறிவிப்பை ரிசர்வ் வங்கிதான் பரிந்துரைத்தது. ரிசர்வ் வங்கி கவர்னர்தான் அந்த ரூபாய் நோட்டுகளில் பணமளிப்பதாக உறுதியளித்து கையெழுத்திடுகிறார்.

 பணமதிப்புநீக்கம் பற்றிய அறிவிப்பு, நிதி அமைச்சகத்தால் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் பிரிவு 26(2)-ன்  கீழ் பின்வருமாறு வெளியிடப்பட்டது:

ஐநூறு ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர்கள் குழுவால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அதிக அளவில் புழங்கும் கள்ள நோட்டுகள், பொருளாதாரத்துக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. கணக்கில் காட்டப்படாத செல்வம் அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளைக் கொண்டுதான் பதுக்கப்படுகிறது என்பதும் கண்டறியப்ப்பட்டிருக்கிறது. மேலும் போதை மருந்து கடத்தல் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் போன்ற நாசவேலைகளை செயல்படுத்த கள்ளநோட்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. போதுமான ஆய்வுக்கு பின், இக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது. 

எனவே ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகமும்தான் பதிலளிக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றன.

நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர்.ஜெ.யும் டாக்டர் டி.ஒய்.சந்திரசூடும் 2016 டிசம்பர் 16ம் தேதி வழக்கு எண் 906/2016 கொண்ட ரிட் மனுவை பெரிய அமர்வு விசாரிக்க பரிந்துரைத்தனர். நீதிமன்றம் முடிவெடுக்க ஆறு வருடங்கள் ஆகின. அமர்வுக்கு தலைமை வகித்த நீதிபதி மூன்று நாட்களில் ஓய்வு பெற்றார். 

4 நீதிபதிகள் கண்டறிந்தவற்றை நீதிபதி நாகரத்னா பட்டியலிட்டிருக்கிறார். கூடவே தீர்ப்பின் 262ம் பக்கம் முதல் 267ம் பக்கம் வரை அவர் அளித்திருக்கும் அவதானிப்பும் வாசிக்கப்பட வேண்டியவை.

4 நீதிபதிகளின் தீர்ப்பு முழுமையடையாததால், குறிப்பிட்ட இம்மனுவை மீண்டும் பதிவு இலாகாவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. “நீதிமன்றத்தின் பதிவு இலாகா இந்த வழக்கை சரியான அமர்வுக்கு அனுப்பும் வகையில் இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு அனுப்ப உத்தரவிடுகிறோம். எந்த அமர்வு, வழக்கை விசாரிக்க தேர்ந்தெடுக்கப்படுகிறதோ அந்த அமர்வு இதுவரையிலான எல்லா வாதங்களையும் ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளலாம்,” என்றும் அத்தீர்ப்பு குறிப்பிட்டது.

எப்போது இது நடக்குமென தெரியாது. ஒருவேளை நடந்தாலும், ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் சரி செய்ய முடியாத கட்டத்தை எட்டிவிட்டதால், அது வெறும் மரபுரீதியான நடவடிக்கையாக மட்டுமே இருக்கும். 

எல்லாவற்றைக் காட்டிலும் பிரதானம், மக்களின் மன்றம்தான். எவரையும் விட அதிகாரம் படைத்த “மக்கள்” எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மை தெரியும்.


Related Story: The AIDEM Special Focus: What has Demonetization Achieved?


Subscribe to our channels on YouTube & WhatsApp

About Author

தாமஸ் ஃப்ரான்கோ ராஜேந்திர தேவ்

அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர். தற்போது பீப்பிள் ஃபர்ஸ்ட் (People First) அமைப்பின் இணை அமைப்பாளர்