A Unique Multilingual Media Platform

The AIDEM

Articles National Social Justice

பிரதமரின் தொகுதியில் வீடு தொலைத்த மக்கள்

  • January 17, 2023
  • 1 min read
பிரதமரின் தொகுதியில் வீடு தொலைத்த மக்கள்

மக்களின் குரல்

(AIDEM-ன் இந்த சிறப்பு பகுதி, மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்த களச்செய்திகளைக் கொண்டது)

பிரதமரின் தொகுதியில் வீடு தொலைத்த மக்கள்: தீன் தயாள் உபாத்யாயா சிலைக்காக வசிப்பிடங்கள் பறிக்கப்பட்ட துயரம்

AIDEM குழு, லக்நவ் | (ஆங்கிலத்தில் வெளியான கட்டுரை. தமிழில்: ராஜசங்கீதன்)


“நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை இவை உறுதிபடுத்தவில்லை எனில், வேறு எவை உறுதிப்படுத்தும்?” தன் வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 56 வயது மகேந்திராவின் கேள்வி இது. வாக்களர் அட்டை, ஆதார் அட்டை, நிரந்தர வங்கி எண் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் என ஆவணமாகத் தோன்றும் எல்லாவற்றையும் அதிகாரிகளிடம் அவர் கொடுத்துவிட்டார்.

2020ம் ஆண்டின் பிப்ரவரி மற்றும் நவம்பர் மாதங்களில் வசிப்பிடங்களை விட்டு இரு தருணங்களில் வெளியேற்றப்பட்ட 250 பேரில் அவரும் ஒருவர். இரண்டு வெளியேற்றங்களும் பிரதமர் மோடி அவரது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசிக்கு வருவதற்கு சில நாட்கள் முன் நேர்ந்தவை. 

முதல் தருணம் தீன் தயாள் உபாத்யாயாவின் சிலை திறக்கும்போது நேர்ந்தது.  பாரதீய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கின் (ஆர்எஸ்எஸ்) ஆரம்ப காலத் தலைவர்களின் சிந்தனைகளை வடிவமைத்தவர் அவர். பிப்ரவரி 16, 2020 அன்று சிலை திறப்பு நடக்கவிருந்தது.

உபாத்யாயாவின் தத்துவங்களில் முக்கியமானது ‘அந்த்யோதயா’தான். அதாவது மிகவும் விளிம்பு நிலையில் வாழும் கடைசி மனிதனின் மேம்பாடு! கடைசியாக இருக்கும் மனிதன் முன்னேற்றப்படாதவரை, வறுமையும் துயரமும் மனிதகுலத்தைப் பீடித்திருக்கும் என்றார் அவர்.  மகேந்திரா, தர்க்கர் என்கிற சமூகத்தை சேர்ந்தவர். 2011ம் ஆண்டின் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அச்சமூகம் பட்டியல் சாதியாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. வாழ்வாதாரத்துக்காக மூங்கில் கூடைகள், ஏணிகள், கம்பளங்கள் போன்றவற்றை அவர்கள் தயாரிப்பதுண்டு. நல்ல நாளில் 150 ரூபாய் வரை அவருக்கு வருமானம் கிடைக்கும்.  தன் தத்துவத்தை உதிர்க்கும்போது உபாத்யாயா இவரைப் போன்ற ஒரு மனிதரைதான் கற்பனை செய்திருப்பார்.

மோடி திறந்து வைத்த சிலை, நாட்டிலேயே உயரமான சிலைகளில் ஒன்று. 63 அடி உயரம்.  மதன் மோகன் மாவியா (ராஜ்காட் பாலம் எனப் பரவலாக அழைக்கப்படும்) பாலத்தின் சரிவிலுள்ள பதாவோ சந்திப்பில் 3.75 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருக்கும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவிடத்தில் அந்தச் சிலை அமைந்திருக்கிறது. கங்கையின் மீதிருக்கும் அந்த பாலம் வாரணாசியை முகல்சராய் ரயில் நிலையச் சந்திப்புடன் இணைக்கிறது. 1968ம் ஆண்டில் உபாத்யாயாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அந்த ரயில் நிலையச் சந்திப்பில்தான். 1887ம் ஆண்டு கட்டப்பட்ட அப்பாலத்திலிருந்து கங்கை நதியின் பிரம்மாண்டத்தைப் பார்க்க முடியும். 

மகேந்திரா வசித்த பகுதி, நினைவிடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்தது. பாலத்திலிருந்து பார்த்தால் சுலபமாக் கண்ணில் படும்.

மகேந்திரா மற்றும் பிறர் (அனைவரும் ஒற்றை பெயர்தான் பயன்படுத்துகின்றனர்) காசி வித்யாபீட் ஒன்றியத்திலுள்ள  சுஜாபாத்தைதான் வீட்டு முகவரியாக கொண்டிருக்கின்றனர். 

நவம்பர் 2019-ல் ஒரு நாள் மாபெரும் சிலை ஒன்றை நினைவிடத்துக்கு கொண்டு செல்லும் காட்சியை மகேந்திராவும் பிறரும் அவர்களது வசிப்பிடத்துக்கு வெளியே பார்த்தனர். ஒரு பெரிய விழா திட்டமிடப்பட்டிருப்பதாகவும் மோடிஜி வரவிருப்பதாகவும் அவர்களுக்கு சொல்லப்பட்டது. 

 

எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமர்

மோடி வருவதை அறிந்தபோது அப்பகுதியில் வசிக்கும் 50 வயது பத்ரு மிகவும் சந்தோஷமடைந்ததாக கூறுகிறார். அருகே இருந்த நினைவிடத்தில் அவரது தலைவரைக் காணச் செல்ல முடியுமென நம்பினார்.  அப்பகுதியில் இருக்கும் பிறரைப் போல அவரும் மோடிஜிக்குதான் வாக்களித்திருந்தார். காரணம், “எங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக பிரதமர் இருந்தால் எல்லா வசதிகளும் எங்களுக்குக் கிடைக்கும்” என்கிற நம்பிக்கைதான்.

வாரணாசியிலிருந்து மோடி நாடாளுமன்றத்துக்கு இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முதலில் அவர் 2014ம் ஆண்டில் வெற்றி பெற்றார். அப்போது அவரை எதிர்த்து, இன்று டெல்லியின் முதல்வராக இருக்கும் அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். முதல் தேர்தலில் 56.37% வாக்குகளை மோடி பெற்றார். 2019ம் ஆண்டில் 63.62% ஆக அவரின் வாக்கு சதவிகிதம் அதிகரித்தது. 

வாராணாசி நாடாளுமன்ற உறுப்பினரான மோடியின் பெரும் சாதனைகளாக ஆற்றினல் படகுப் போக்குவரத்து,  நீர் வழிகளின் வழியே சரக்கு போக்குவரத்து முனையங்கள், வீடுகளுக்கான எரிவாயுக் குழாய் இணைப்புகள், காசி விஸ்வநாதர் கோவிலிலிருந்து கங்கா நதியின் படித்துறை வரையிலான சாலை விரிவாக்கம் போன்றவை தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றன.  சுஜாபாத்தின் ஏழைகளுக்கான பலன்கள் கண்கவர் பலன்களாக இருந்தன. 2019ம் ஆண்டில் அவர்கள் சவுபாக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் இலவச மின்சார இணைப்புகள் பெற்றனர். சில குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் கிடைத்தன.

 

எதிர்பாராப் பலன்

சிலை திறப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஒரு நாள், 50 குடும்பங்கள் வசித்த அப்பகுதியில் காலை 11 மணிக்கு  ஒரு போலீஸ் பட்டாளம் குவிந்தது. “நான்கு மணி நேரத்தில் எடுக்க முடிந்தவற்றை எடுத்துக் கொண்டு இடத்தை காலி செய்யுங்கள். உங்கள் வீடுகள் இடிக்கப்படவிருக்கின்றன,” என உத்தரவிட்டனர். 

51 வயது ரேஷ்மா, “எங்கே நாங்கள் போவது?” என கத்திக் கொண்டே கீழே விழுந்து அழுது புரண்டார். அவர் வாழ்க்கை முழுவதும் மண் சுவர்களும் மூங்கில்கூரையும் கொண்ட அந்த அவருடைய வீட்டில்தான் கழிந்திருந்தது. சில அண்டைவீ ட்டார் செங்கல் சுவர்களில் வீடுகள் கட்டியிருந்தனர். ஆனால் இருப்பதை வைத்துக் கொண்டு வாழ்வதில் திருப்தி கொண்டிருந்தார். அவரது நீர்த் தேவையை இரண்டு குழாய்களும் மற்றும் வீடுகளுக்குப் பின் இருந்த ஒரு அடி குழாயும் பார்த்துக் கொண்டன.  மின்சார இணைப்பும் இருந்தது. இவற்றை தாண்டி என்ன கேட்டுவிடப் போகிறார் அவர்?

சொற்பத் தேவைகளை கொண்டிருந்த அந்த சிறு உலகம் நான்கு மணி நேரங்களுக்குள் புல்டோசர்களால் இடித்துத் தள்ளப்பட்டத்த. அச்சத்தில் இருந்த அப்பகுதி மக்கள், கித்கியா படித்துறையுடன் பதாவோவை இணைத்த சாலையில் நின்றனர்.  கித்கியா படித்துறையும் காட்சிப்படுத்தப்படவிருந்த ஒரு பெரிய வளர்ச்சி திட்டத்தின் பகுதிதான். பண்பாட்டு நிகழ்வுகள் மற்றும் நீர் விளையாட்டு மையம் அமைப்பதற்கான மாபெரும் பல்நோக்குத் தளமாக அப்பகுதி மாற்றப்படவிருக்கிறது.

முக்கியமான தலைவர்கள் (உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கவர்னர் ஆனந்திபென் படேல் ஆகியோரும்)  வரும் நிகழ்வு நடந்து முடிந்ததும் மீண்டும் குடிசைகளை அந்த 5,400 சதுர அடி நிலத்தில் போட்டுக் கொள்ளலாம் என வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அது வெற்று உறுதிதான் என்பதை அந்த  மக்கள் பிறகு புரிந்து கொண்டனர்.

 

மனித உரிமைகள் மீறல்

இத்தகைய கட்டாய வெளியேற்றத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கான உரிமைகளை பல சர்வதேச அமைப்புகள் அங்கீகரித்திருக்கின்றன

ஐநா சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தின் 2004/28 தீர்மானம் ‘…வற்புறுத்தி கட்டாயப்படுத்தி வீடுகளிலிருந்து நிலங்களிலிருந்து சமூகக்குழுக்களிலிருந்தும் சட்டப்பூர்வமாகவே நபர்களும் குடும்பங்களும் வெளியேற்றப்பட்டாலும் பெரிய ளவிலான எண்ணிக்கையில் மக்கள் வீடுகள் இன்றியும் போதுமான வீட்டு வசதி மற்றும் வாழும் நிலைகள் இன்றியும் இருக்க வேண்டிய நிலை நேரும்,” என விளக்கியிருக்கிறது.

மேலும் அந்த தீர்மானம், ‘… கட்டாய வெளியேற்ற முறை பெரிய ளவிலான மனித உரிமைகளின் மீறலாகும். குறிப்பாக, போதுமான அளவிலான வசிப்பிடம் இருப்பதற்கான உரிமை மீறப்படுகிறது,’ எனக் குறிப்பிடுகிறது.

சுஜாபாத்திலிருந்து வெளியேற்றப்பட்டோர் வேறெங்கும் செல்ல விரும்பவில்லை. பல தலைமுறைகளாக அவர்கள் அந்த நிலத்தில்தான் வாழ்ந்திருந்தார்கள். வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் இடம் தெரியும். அவர்கள் தயாரிக்கும் மூங்கில் பொருட்களை வாங்குவதெனில் எங்கு செல்ல வேண்டுமென்றும் அவர்களுக்குத் தெரியும். 

உச்ச நீதிமன்றம் ஜூலை 1985-ல் நடந்த வழக்கில் (Olga Tellis  Ors vs Bombay Municipal Corporation & others) பின்வருமாறு குறிப்பிட்டது:

“வாழ்வதற்கான உரிமையும் பணிபுரிவதற்கான உரிமையும் ஒன்றையொன்று சார்ந்தவை. ஒருங்கிணைந்தவை. எனவே குப்பம் அல்லது நடைபாதையிலிருந்து வெளியேற்றப்பட்டதால் ஒரு நபர் வேலையை இழந்தால், அவர் வாழ்வதற்கான உரிமை நெருக்கடிக்குள்ளாகும். குப்பங்களிலும் நடைபாதைகளிலும் அவர்களை இருத்தி வைக்கும் பொருளாதாரக் கட்டாயங்கள் அவர்களின் வேலைக்கு அடிப்படை உரிமைக்கான தகுதியை வழங்குகிறது என்பதை வலியுறுத்துகிறோம்.” (https://indiankanoon.org/doc/709776/)

 கஜாபாத்திலிருந்து குடும்பங்கள் வெளியேற்றப்பட்டபிறகு, மிச்ச நிலத்தைச் சுற்றிக் கம்பிகள் கட்டப்பட்டன. குடிநீர் எடுப்பதாக சொல்லிக் கூட யாரும் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்காக குழாய்களும் கூட உடைத்தெடுக்கப்பட்டன. 

 

தனியாருக்கு விற்கப்பட்டது

கஷ்டகாலத்தில் உதவுவாரென அவர்கள் நம்பிய ஒரு நபர், அப்பகுதியின் ஊர்த் தலைவரான பெனார்சி லால் ஆவார்.

 லால் (பதவிக்காலம் டிசம்பர் 2020-ல் முடிந்தது) சொல்கையில், “குடிசைகளுக்கு பின் இருந்த நிலம் மோசடியாக ஒரு தனியாருக்கு சில வருடங்களுக்கு முன் விற்கப்பட்டுவிட்டது. அது அரசாங்க நிலம். ஆனால் முன்பே விற்கப்பட்டு விட்டது போன்ற ஓர் ஒப்பந்தத்தை தயார் செய்துவிட்டனர்,” என்றார்.  மேலும் அவர், வெளியேற்றப்பட்டோரில் பலர் சுஜாபாத்தில் வசித்தவர்கள் என்றாலும் பலர் அருகாமை மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் என்றார்.  “இது நகரத்துக்கு அருகே இருக்கும் ரியல் எஸ்டேட் மதிப்பு வாய்ந்த நிலம்,” என்கிறார். “இங்கிருந்து வெளியேறி வேறிடம் சென்று வாழ ஒருவர் ஏன் விரும்புவார்?”

 பத்ரு சொல்கையில், ”நாங்கள் சுஜாபாத்தை சேர்ந்தவர்கள் இல்லையென ஊர்த்தலைவர் கூறினார். பிறகு ஏன் ஓட்டு கேட்க எங்களிடம் வருகிறார் எனக் கேட்டேன். நாங்கள் இங்கு வசிப்பவர்கள் இல்லையெனில் எப்படி நாங்கள் ஓட்டு போட முடிந்தது?,” எனக் கேட்கிறார்.

வெளியேற்றத்துக்குப் பிறகு அக்குடும்பங்கள் சில இரவுகளை பாலத்தின் சரிவில் கழித்தனர். முன்பு வசித்த பகுதிக்கு எதிரில் பாலத்தின் சரிவு இருந்தது. கொஞ்ச காலத்திலேயே பிளாஸ்டிக் பைகள், பழைய தார்ப்பாய்கள், சாக்குகள், புடவைகள் மற்றும் துப்பட்டாக்கள் போன்றவற்றை சேகரித்து தங்களுக்கென வீடுகளை அமைத்துக் கொண்டனர். முந்தைய வீடுகளில் அவர் கொண்டிருந்த சிறு அளவு தனிமை நேரம் கூட இப்போது இல்லை. புதிதாக அவர்கள் வசிக்கும் இடத்தின் ஒரு பக்கத்தில் பதாவோவிலிருந்து படித்துறைக்கு செல்லும் சாலையும் மறுபக்கத்தில் ராஜ்காட் பாலத்தின் சரிவுப்பகுதியும் இருக்கிறது. நீருக்கு பிரச்சினை இருந்தது. முந்தைய வீடுகளின் பக்கத்து வீட்டார் தயவை அவர்கள் சார்ந்திருந்தனர். வீட்டு குழாய்களுடன் குழாய் இணைத்து வாளிகளில் நீர் பிடித்துக் கொண்டனர். 

 “சமைப்பதற்கு மட்டும்தான் நீர் இருக்கிறது. நான்கைந்து நாட்களுக்கு ஒருமுறைதான் நாங்கள் குளிக்கிறோம். வாரமொரு முறைதான் துணிகள் துவைக்கிறோம்,” என்கிறார் 37 வயது ஜிரா.

சுஜாபாத்தில் வசித்தோர், ஓரளவுக்கு இயல்பான நிலையை வாழ்க்கையில் எட்டியதும் கோவிட் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 

 

உதவும் கரம்

வெளியேற்றப்பட்ட குடும்பங்களின் துயரம் முதலில் இன்னர்வாய்ஸ் அறக்கட்டளையின் தன்னார்வலர்களின்  பார்வையில்தான் பட்டது. தொண்டு நிறுவனமான அந்த அமைப்பு, ஊரடங்கு காலத்தில் அப்பகுதியில் (மற்றும் வாரணாசி, சந்தாளி மற்றும் அலகாபாத் பகுதிகளிலும்) உணவுப் பொருட்களை விநியோகிக்கும்போது அம்மக்களின் நிலையைத் தெரிந்து கொண்டனர். 

 அமைப்பின் தலைமை செயற்பாட்டாளரான சவுரப் சிங், மீள்குடியேற்றம் குறித்து அரசாங்கத்திடமும் நிர்வாகத்திடமும் கேட்பதற்கு எண்ணற்ற முயற்சிகள் செய்யப்பட்டு விட்டன என்கிறார்.

 முதல் மின்னஞ்சல் வாரணாசியின் மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு அக்டோபர் 2, 2020 அன்று அனுப்பப்பட்டது. தொடர்ந்து ஒரு புகார் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. பிறகு இன்னொரு மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு டிசம்பர் 12 அன்று புகார் அனுப்பப்பட்டது.

 பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட (பதிவு எண் PMOPG/E/2020/0896792) புகாரில், ’உள்ளூர் நிர்வாகம்  குரலற்ற இம்மக்களின் பிரச்சினைக்கு கவனத்தை திருப்பும்படி அதீத அவசரத்துடன் செயல்படக் கோருகிறோம். இக்குடும்பங்களுக்கு மேல் ஒரு கூரையை அமைக்க பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்திலோ அல்லது வேறு சரியான திட்டத்திலோ வழிவகை செய்து உதவ வேண்டுகிறோம்,’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. புகார் அனுப்பப்பட்ட ஆறு நாட்களுக்கு பிறகு அக்டோபர் 13 அன்று ‘முடிக்கப்பட்டது’ என பிரதமரின் அலுலக இணையதளத்தில் அப்புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. (நகைமுரண் என்னவென்றால் நகரத்து ஏழைகளுக்கு பிரதமர் ஆவாஸ் யோஜனா 2019 – ன் கீழ் அதிக வீடுகள் கொடுத்ததற்கான முதல் பரிசைப் பெற்றதுதான் உத்தரப் பிரதேசம்)

நவம்பர் 3ம் தேதி அக்குழு மீண்டு ஒரு மின்னஞ்சலை உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலக அதிகாரிக்கு அனுப்பியது. குளிர்காலம் தீவிரமடைவதற்கு முன் அம்மக்களின் தலைகளுக்கு மேல் ஒரு கூரை போட்டுக் கொடுக்க அந்த மின்னஞ்சல் வேண்டியது. “அவர்களிடம் ஆதார் அட்டை இருக்கிறது. வாக்காளர் அட்டை இருக்கிறது. ஆனாலும் அவர்களுக்கென முகவரி இல்லை…’ என்றது மின்னஞ்சல்.

 நவம்பர் 11ம் தேதி சுஜாபாதில் வசிப்பவர்களுடன் இன்னர்வாய்ஸ் அறக்கட்டளை தன்னார்வலர்களும் இணைந்து துணைப்பிரிவு மாஜிஸ்திரேட்டுக்கு ஒரு கடிதம் அளித்தனர். அக்கடிதத்தில் ‘….சாலையோரங்களில் வாழ்வதில் கழிவு வசதி, குடிநீர் வசதி, பிற அடிப்படை வசதிகள் போன்றவை இல்லாததால் பெண்களும் சிறுமிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்… பாதுகாப்பும் இன்னொரு முக்கியப் பிரச்சினை.  வீடு இல்லாமலும் வாழ்வாதாரம் இழந்தும் அவர்கள் நெருக்கடியை சந்திக்கின்றனர்,’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

 துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் தன்னார்வலர் குழுவை சந்திக்க காலை 9.45 மணிக்கு நேரம் கொடுத்திருந்தார். குழு அவரின் அலுவலகத்தை காலை 9.30 மணிக்கே அடைந்துவிட்டது. ஆனால் அவர் பகல் 12.30 மணி வரை வரவில்லை.  அவர்களது அழைப்புகளையும் அதற்குப் பிறகு ஏற்கவில்லை.

 

மோடியின் இரண்டாம் வருகையும் இரண்டாம் வெளியேற்றமும்

பிரதமர் மீண்டும் அவரின் தொகுதிக்கு நவம்பர் 30, 2020 அன்று வருகை தந்தார்.

 அவரின் நிகழ்ச்சி நிரலில் நினைவிடம் இல்லையென்றபோதும் உள்ளூர் காவலர்கள் ஆறு நாட்களுக்கு முன்பே சுஜாபாத்துக்கு வந்துவிட்டனர்.  மீண்டும் கட்டப் பட்டிருந்த எளிய வசிப்பிடங்களை இழுத்துப் போட்டுக் கலைத்தனர்.

 “இங்கிருந்து ஓடுங்கள். இல்லையெனில் லத்திகள் கொண்டு அடிப்போம்,” என்றது போலீஸ். ஜிரா சொல்கையில், “மோடிஜி இதை சொல்லவில்லை என எனக்கு நிச்சயமாக தெரியும். ஆனால் காவல்துறை வந்து எங்களை தாக்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்,” என்கிறார். முதல் வெளியேற்றத்துக்குப் பிறகு 18 வயதை எட்டிய மகள் சுந்தரியை அவசர அவசரமாக மணம் முடித்துக் கொடுத்தார். மகளின் பாதுகாப்புக்காக அவசரத்தில் அம்முடிவை எடுத்ததாக ஜிரா கூறுகிறார். மணம் முடித்தவன் திருமணத்துக்கு முன் சொந்தமாக தனக்கு வீடு இருப்பதாக பொய் சொல்லியிருந்தான். அப்போது அது தெரியவில்லை.  பிப்ரவரி 26ம் தேதி திருமணம் நடந்தது. உபாத்யாயாவின் பிறந்த தினம்! 

 சுஜாபாத்தில் வசிப்பவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் உள்ளூர் மற்றும் தேசிய ஊடகங்களில் செய்திகளாக்கப்பட்டன. விளைவாக உள்ளூர் அதிகாரிகள் 12 பேருக்கான கம்பளங்களுடன் வந்தனர். ஆனால் அங்கு இருந்தவர்கள் 250 பேர். இரண்டு நாட்களில் நிலவுரிமைக்கான கடிதங்கள் அவர்களுக்கு கிடைக்குமென அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் புதிய நிலம் எங்கிருக்கும் என்பதை அவர்கள் சொல்லவில்லை.

 சவுரப் சிங் சொல்கையில், “நவம்பர் 29ம் தேதி இரவு 10 மணி சுமாருக்கு காவலர்கள், துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் மற்றும் தாசில்தார் கொண்ட குழு குடிசைகள் உடைக்கப்பட்ட பகுதிக்கு வந்து சேர்ந்தது. இம்மக்களை அவர்கள் ராஜ்காட் பாலத்துக்கு அடியில் கொண்டு சென்று, உணவும் நீரும் கொடுக்காமல் அடுத்த 24 நாட்களுக்கு , பிரதமர் பயணம் முடியும் வரை தடுத்து வைத்திருந்தனர். நவம்பர் 30ம் தேதி அதிகாலை 5 மணிக்கு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்,” என்கிறார்.

 இன்னர்வாய்ஸ் அறக்கட்டளை கூட ஒரு மூன்று நாட்களுக்கு (நவம்பர் 28-30)  உணவுப் பொட்டலங்கள் இந்த கொடும் காலத்தில் கொடுக்க முயன்றது. ராஜ்காட் பாலத்தருகே இருந்த அவர்களைச் சென்றடைய முடியவில்லை. பிரதமர் தரையிறங்கிய ஹெலிகாப்டர் தளம் அப்பகுதிக்கு அருகே இருந்ததால், வேறு எவரும் அங்கே அனுமதிக்கப்படவில்லை.

 டிசம்பர் 24 அன்று சுஜாபாத்வாசிகளும் இன்னர்வாய்ஸ் அமைப்பினரும் கொண்ட ஒரு குழு மீண்டும் டிவிஷனல் கமிஷனர் அலுவலகத்துக்கு ஒரு விண்ணப்பத்துடன் சென்றது. வசிப்பிடத்துக்கான மாற்று குறித்த உறுதிமொழியை நிர்வாகம் அளித்து 23 நாட்கள் ஆகியும் முன்னேற்றம் இல்லை என விண்ணப்பம் குறிப்பிட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் குளிரால் ஒருவர் (மகேந்திராவின் தந்தை, ஷியாம்லால்) உயிரிழந்து விட்டார் என்பதையும் விண்ணப்பம் குறிப்பிட்டது.

 மாவட்டத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட புகார் மையத்தில் முறையான ஒரு புகாரை பதிவு செய்ய இக்கடிதம் காரணமாக அமைந்தது.  பிறகு அப்புகார் மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டது. சில நாட்களிலேயே அப்புகாரின் நிலை ‘முடிக்கப்பட்டது’ என குறிப்பிடப்பட்டது. அதற்குப் பிறகு பிரதமர், தலைமை செயலாளர் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட பல கடிதங்களுக்கும் எந்த எதிர்வினையும் வரவில்லை.

 சுஜாபாத்துக்கு பொறுப்பில் இருக்கும் நில வருவாய் அதிகாரியான பாரத் குமார் சொல்கையில், “இம்மக்களுக்கு வீடுகளோ நிலமோ கிடைக்குமா இல்லையா என்பதை நான் சொல்ல முடியாது.  ஒன்றும் கிடைக்காமல் போகலாம். ஏனெனில் அவர்களை போல் வீடு இல்லாமல் இருக்கும் மக்கள் லட்சக்கணக்கானோர் வாரணாசியில் இருக்கின்றனர்,” என்றார்.

 சவுரப் சிங் சொல்கையில், “நிர்வாகம் முற்றிலும் சுரணையற்றதாகி விட்டது. இப்பிரச்சினையில் இன்று வரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரதமர் அலுவலகம், உத்தரப்பி ரதேச தலைமைச் செயலாளர், வாரணாசி மாவட்ட ஆணையர், டிவிஷனல் கமிஷனர் மற்றும் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் என எல்லாரையும் நாங்கள் தொடர்பு கொண்டுவிட்டோம். நேரம் கொடுத்திருந்தும் அவர்கள் எங்களை சந்திக்கவில்லை. குறைந்த கால இடைவெளியில் நாங்கள் வர முடியாது என்பதை தெரிந்து கொண்டு அதிகாரிகள் அழைப்பார்கள். இப்பிரச்சினை ஒரு அலுவலகத்திலிருந்து இன்னொரு அலுவலகத்துக்கு எந்த விளைவுமின்றி வெறுமனே அனுப்பப்பட்டது. ஒவ்வொரு மட்டத்திலும் அவர்கள் ‘தீர்க்கப்பட்டது’ அல்லது ‘முடிக்கப்பட்டது’ என குறிப்பிட்டு விடுவார்கள்.

 இவற்றுக்கிடையில் இன்னர்வாய்ஸ் அமைப்பு இங்கு வசிப்பவர்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கிறது. மாவட்ட நிர்வாகமும் அவ்வபோது விநியோகிக்கிறது. முகக்கவசங்கள் எங்கும் தென்படவில்லை. நீர் பற்றாக்குறை காரணமாக கை கழுவுதல் கூட மிக அரிதுதான் இங்கு.

 வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் ஜனவரி 2021-ல் கிராமப்பகுதி சுஜாபாத் நகரப்பகுதியாக மாற்றப்பட்டது. பிரச்சினைகள் தீவிரமடைந்தன.

 சவுரப் குமார், “கோப்புகள் எப்பக்கம் நகருமென எவருக்கும் தெரியவில்லை,” என்கிறார்.

 முன்னோர்கள் வாழ்ந்த நிலத்தில் தங்களுக்குதான் உரிமை இருக்கிறதென மகேந்திராவும் பிறரும் உறுதியாக சொல்கின்றனர். “இந்த நிலம்தான் எங்களின் தலையில் எழுதப்பட்டிருக்கிறது. இங்கு வாழ முடியவில்லை எனில், இங்கேயே நாங்கள் சாவோம்,” என்கிறார் மகேந்திரா. 

நினைவிடத்துக்கு செல்ல டிக்கெட் விலை ரூ.10. ஒரு டிக்கெட் எடுத்தால் மூன்று மணி நேரம் வரை நினைவிடத்துக்குள் செலவழிக்கலாம்.  வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவர் கூட இதுவரை அங்கு செல்லவில்லை.

51 வயது தாரா சொல்கிறர், “சிலைக்கு உயிரில்லை. அச்சிலையால் நாங்கள் இறந்து கொண்டிருக்கிறோம்.”


Click to read this article in English or Hindi


Subscribe to our channels on YouTube & WhatsApp

About Author

The AIDEM