A Unique Multilingual Media Platform

The AIDEM

Articles Cinema

நண்பகல் நேரத்து மயக்கம்: ஒரு இனிமையான விசித்திரக் கதை

  • January 27, 2023
  • 1 min read
நண்பகல் நேரத்து மயக்கம்: ஒரு இனிமையான விசித்திரக் கதை

(நிர்மல் மதுகுமாரின் ஆங்கில விமர்சனம்; தமிழில்: ராஜசங்கீதன்)

மலையாள சினிமாவின் பெருங்கலைஞர்களான லிஜோ ஜோஸ் பெல்லிசேரியும் மம்முட்டியும் இணையும் இந்தப் படத்துக்கான நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. நண்பகல் நேரத்து மயக்கம் தனித்துவமான நகைச்சுவை நிறைந்த ஒரு விசித்திர அனுபவத்தை வழங்குகிறது. வித்தியாசமான படங்கள் எடுப்பது லிஜோ ஜோஸ் பெல்லிசேரிக்கு புதிதில்லை. ஆனால் மம்முட்டி போன்ற ஒரு பெருங்கலைஞனை கேமரா முன் நிறுத்தி தனது பிரத்யேகக் கலைத்தன்மையை அவர் பின்னியிருக்கும் விதம், கனவு போல விரியும் இப்படத்தை புது உயரங்களுக்குக் கொண்டு சென்றிருக்கிறது. 

 

தெருக்களிலும் மார்க்கெட்டுகளிலும் வழிபாட்டுத்தலங்களிலும் நடமாடும் சாமானிய மக்களைக் காட்டும் காட்சிகளுடன் தொடங்கும் நண்பகல் நேரத்து மயக்கம், சாதாரண வாழ்க்கையின் அழகை காட்சிப் படுத்துகிறது. படத்தின் எளிமையான ஆக்கம் ஈர்ப்பைத் தருகிறது. உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது. ஓர் எளிய கதையில் சாமானியர்களை நடிக்க வைத்ததால் இப்படம் மேலும் அழகு பெற்று சிறப்பானதாகி இருக்கிறது. எளிய ஆக்கம் மற்றும் இயல்பான நடிப்பு படத்தை ஒரு மாய நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. எளிமையுடன் மாயத்தன்மையும் கலக்கப்படுவதால் இது சுலபமாக ஒரு மாய யதார்த்தவாத படமாகி விடுகிறது. கதைப்படி புனித யாத்திரை சென்று பேருந்தில் திரும்பும் மக்கள் திடுமென வேறு வழியில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது கதையின் நாயகனான ஜான் முற்றிலும் வேறு மனிதனாக மாறுகிறான். “அவன் என்ன செய்கிறான்? எங்கு செல்கிறான்? புத்தி சுவாதீனத்தை இழந்து விட்டானா?” என பேருந்து பயணிகளுடன் சேர்ந்து ஆச்சரியத்துடன் நாமும் கதையோடு பயணிக்கிறோம். அபத்தமான நிகழ்வுகள் அழகாகவும் இலகுவாகவும் தொடர்ந்து, மெல்ல ஒரு சஸ்பென்ஸை கட்டமைக்கிறது. 

கட்டமைக்கப்படும் எதிர்பார்ப்புடன் கதைச்சூழல் கொண்டிருக்கும் நகைச்சுவையும் சேர்கிறது. மெகா ஸ்டார் மம்மூட்டியை எளிய நேர்மையான சாமானியனாக பார்ப்பது பெரும் நிறைவை அளிக்கிறது. படத்தின் நகைச்சுவைக்கும் எளிய ஆக்கத்துக்கும் மம்முட்டியின் இருப்பு அதிக வலுச் சேர்க்கிறது. அவர் நடித்திருக்கும் ஜேம்ஸ் மற்றும் சுந்தரம் ஆகிய இரண்டு பாத்திரங்களின் ஒத்த தன்மை சினிமாக்கலையின் அற்புதத்துக்கான சான்று. மம்முட்டி தமிழராக நடித்திருக்கும் சுந்தரம் பாத்திரமும் ஜேம்ஸ் பாத்திரமும் சினிமா வரலாற்றில் நிலைத்திருக்கும். இரு பாத்திரங்களின் ஊடாக இப்படம் அண்டை மாநிலத்தவர்களாகிய தமிழர்கள் மற்றும் மலையாளிகள் இடையே சக திராவிடர்களாக, ஒரே நாட்டவராக, நண்பர்களாக, எதிரிகளாக இருக்கும் உறவை ஆராய்கிறது. பல படிமங்களிலான இந்த உறவு, மலையாளிகளுக்கு தமிழர்களிடம் இருக்கும் பாரபட்சமான பார்வையினூடாக ஆராயப்படுகிறது. கேரளா மற்றும் தமிழ்நாடு என்ற வார்த்தைகளுக்கான பாடப்புத்தக விளக்கங்களைக் காட்டி படம் தொடங்கப்படுவது நம்மை கவர்கிறது.

 

மொத்தப் படமும் அசைவற்ற காட்சிகளாக காட்டப்படுகிறது. அநேகமாக படத்தின் முக்கியமான ஒரு தருணத்தில் மட்டும்தான் கொஞ்சமாக கேமரா நகர்கிறது. அதைத் தவிர்த்து ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் காட்சிகள் அனைத்தும் அசைவற்று எடுக்கப்பட்டிருக்கின்றன. லிஜோ, நாடகத்துறை பின்னணி கொண்டவர் என்பதாலும் பேருந்தில் யாத்திரை முடிந்து திரும்பி வருபவர்கள் அனைவரும் நாடகக் குழுவை சேர்ந்தவர்கள் என்பதாலும் இப்படம் ஒருவகையில் நாடகக்கலைக்கும் மேடை நாடகக் கலாசாரத்துக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பாரம்பரிய மேடை நாடகத்துக்கு அஞ்சலி செலுத்தும் தன்மை படம் முழுக்க காட்சி அமைப்புகளாகவும் வசனங்களாகவும் பாத்திரங்களின் நடிப்பில் இடம்பெறும் சில நகைச்சுவை அம்சங்களாகவும் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கின்றன. படம் மொத்தமும் கடந்த காலத்தை பின்னோக்கிப் பார்க்கும் உணர்வைத் தருகிறது. காட்சிகளில் நிரவியிருக்கும் மஞ்சள் நிறமும் அந்த உணர்வுக்குச் சரியாக பொருந்தி வருகிறது. படத்தில் வரும் இசை பிரதானமாக கடந்த கால உணர்வுக்கு நம்மை இட்டுச்செல்கிறது. சுவாரஸ்யம் என்னவென்றால் இப்படத்துக்கென பிரத்தியேக இசை எதுவும் கிடையாது. படம் நெடுக பழைய தமிழ்ப்படப் பாடல்களும் வசனங்களும்தான் நம்மை வரவேற்கின்றன. நாம் கேட்கும் பல வார்த்தைகள் திரையில் நடக்கும் சம்பவங்களுக்கு ஒருவித தத்துவார்த்த வர்ணனையைப் போல் தொனிக்கிறது. இதனால் நம் அனுபவம் செறிவு கொண்டு நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் தனித்துவத்தை கூட்டுகிறது. பழைய பாடல்களின் சுவையில் களிப்பதும் லிஜோ அளிக்கும் கடந்த கால அழகைச் சுவைப்பதும் தவிர பார்வையாளருக்கு வேறு வழி இல்லை.

லிஜோவின் கதைதான் என்றாலும் திரைக்கதையை எஸ். ஹரீஷ் எழுதியிருக்கிறார். இருவரும் சேர்ந்துதான் அற்புதமான படைப்பான ஜல்லிக்கட்டு படத்தையும் பிரமிப்பு நிறைந்த சுருளி படத்தையும் உருவாக்கியிருந்தனர். இப்படத்தின் மேதைமையை திரைக்கதை வடிவம்தான் தாங்கியிருக்கிறது. பரபரப்பான முடிவு ஏதுமில்லாத ஓர் எளிய கதையைக் கையிலெடுத்து மெதுவாக நகர்த்தி சிறந்த படமாக ஆக்கி, ஒரு பரபரப்பான முடிவு தரும் தாக்கத்தை எப்படி ஒருவரால் உருவாக்க முடிகிறது? ஹரீஷ் அசாதாரணமான நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். பேருந்தில் செல்லும் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கலால் விளையும் விரக்தியை கட்டியெழுப்பிக் கொண்டே வந்து, தீர்வே கிடையாது என்கிற நிலை உருவாகுகையில் சட்டென ஓர் எளிய முடிவைத் தந்து பார்வையாளர்களை அவர் ஆச்சரியப்படுத்துவது அற்புதமான கதை சொல்லல் ஆகும். 

 

பல வருடங்களுக்கு நண்பகல் நேரத்து மயக்கம் நினைவில் இருத்தி பாதுகாக்கத்தக்க படமாக இருக்கும். பிரமாதமான இப்படத்தை உருவாக்கியிருக்கும் திரைக்கலைஞர்கள் மனம் நிறையும் வகையிலான புதுமை நிறைந்த ஒரு படைப்பை தைரியமாக உருவாக்கியளித்து நமக்கு பேருதவி செய்திருக்கின்றனர். லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மீண்டும் செய்ய முடியாததை செய்திருக்கிறார். உண்மையான பாராட்டுக்குரிய கலையை படைத்தளித்திருக்கிறார். அப்படைப்பு திரையரங்குகளிலும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.  

 


Subscribe to our channels on YouTube & WhatsApp


 

About Author

Nirmal Madhukumar

Nirmal Madhukumar is an aspiring writer and filmmaker. An undergraduate in Journalism, Psychology and English literature, Nirmal has an Advanced Diploma in Filmmaking (specialisation in Editing) too from Whistling Woods International, Mumbai.