மங்கி வரும் மின்மினிகளின் ஒளி
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை, இந்தியாவின் மிக முக்கியமான வனவிலங்குச் சரணாலயங்களில் ஒன்றாகும். இது ஈரப்பதம் நிறைந்த வெப்பமண்டல இலையுதிர் காடுகள், அலை அலையான புல்வெளிகள் மற்றும் முள் புதர்க்காடுகளைக் கொண்ட பல்லுயிர்ச் சுற்றுச்சூழல் பரப்பாகும். இந்த பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்புப் பகுதியின் ஒரு பகுதியாக விளங்கும் இக்காடு, யானைகள், புலிகள், கரடிகள் மற்றும் ஏராளமான பறவைகள், பூச்சியினங்களின் தாயகமாகத் திகழ்கிறது.
இந்த உயிரினங்களுக்கு இடையே, நாட்டுப்புறக் கதைகளில் முக்கிய இடம்பிடித்த, தன் உடலிலிருந்தே ஒளிரும் மின்மினிகள் வாழ்கின்றன. விண்மீன்கள் இரவு வானை அழகாக்குவது போல, கோடைக் காலத்தில் முதுமலைக் காடுகளில் ஒளிரும் இந்த மின்மினிகளின் பச்சை மற்றும் மஞ்சள் நிற ஒளி, காண்பவர்களை மனங்கவரச் செய்யும் ஒன்றாகும். குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒருசேர மகிழ்விப்பது மட்டுமின்றி, ‘க்ளோ வோர்ம்ஸ்’ (glow worms) என அழைக்கப்படும் இந்த மின்மினிகள், மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. பூச்சிகளைக் கட்டுப்படுத்தி இயற்கையின் நுட்பமான சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஆனால், அண்மைக்காலமாக, நீலகிரிப் பகுதியில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றங்களால் மின்மினிகளின் எண்ணிக்கை மெதுவாகக் குறைந்து வருகிறது. இப்பகுதியில் வாழும் கிராம மக்கள், இன்று இவை முக்கியமாகத் தேயிலைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள் மற்றும் அடர்ந்த சோலைக் காடுகளில் மட்டுமே காணப்படுவதாகக் கூறுகின்றனர். பழங்குடியினக் கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளைச் சுற்றி இவை மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றன.

ஒரு காலத்தில், பொக்காபுரம் மற்றும் அல்லூர் போன்ற கிராமங்களில் இரவில் ஆயிரக்கணக்கான மின்மினிகள் இருளில் அலையும் விண்மீன்களைப் போலக் காட்சியளித்தன. பாரம்பரியமாக, குழந்தைகளுக்கு உணவூட்டும் போது அவர்களின் கவனத்தைத் திருப்புவதற்காக இந்த மின்மினிகளைக் காட்டும் இடங்களாக இருந்தன.
நீலகிரி மாவட்டத்தில் இது குறித்து முறையான ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றாலும், அங்குள்ளவர்களின் அனுபவப் பூர்வமான தகவல்கள் மின்மினிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையே சுட்டிக்காட்டுகின்றன. நான் மின்மினிகள் குறித்துப் பதிவு செய்வதற்காக கூடலூர் அருகிலுள்ள செம்பகொல்லிப் பகுதியில் சில நாட்கள் தங்கியிருந்தேன். ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கில் மின்மினிகள் நிறைந்திருந்த அந்தப் பகுதியில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அவை காணப்பட்டன.

இதற்கு முக்கியக் காரணம், இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையும், வழக்கத்திற்கு மாறாகப் பகல் நேரத்தில் நிலவும் மிகக் குறைந்த வெப்பநிலையும் ஆகும். இதனால், இரவில் மிகக் குறைவான மின்மினிகளே வெளியில் வந்தன.
இந்தியாவில் காலநிலை மாற்றத்திற்கும் மின்மினிகள் குறைவதற்கும் இடையே உள்ள நேரடித் தொடர்பைக் காட்டும் நீண்ட கால ஆய்வுகள் இல்லையென்றாலும், சர்வதேச அளவில் வெளியாகும் புதிய ஆராய்ச்சிகள் இதற்கான வலுவான கவலைக்குரிய காரணங்களை முன்வைக்கின்றன. வட அமெரிக்கா முழுவதும் 24,000-க்கும் மேற்பட்ட மின்மினிகளின் பதிவுகளை ஆய்வு செய்து, பென் ஸ்டேட் பல்கலைக்கழக (Penn State University) ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான 2024 ஆம் ஆண்டு ஆய்வு, மின்மினிகள் வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு மாற்றங்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன என்பதைக் கண்டறிந்துள்ளது.
கடுமையான குளிர்காலம், சீரற்ற மழைப்பொழிவு மற்றும் தீவிர வானிலை மாற்றங்கள் ஆகியவை மின்மினிகளின் இனப்பெருக்கச் சுழற்சியைப் பாதிக்கலாம், அவற்றின் புழுக்கள் வாழும் வாழ்விடங்களை வெள்ளத்தில் மூழ்கடிக்கலாம் அல்லது இளம் மின்மினிகள் வளரும் ஈரப்பதமான மண்ணை வறண்டு போகச் செய்யலாம்.

ஆனைமலைப் புலிகள் காப்பகத்தின் காடுகளை, லட்சக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் ஒரே நேரத்தில் ஒளிர்ந்து பிரகாசமாக்குகின்றன. 16 நிமிடங்களில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. (புகைப்படம்: ஸ்ரீராம் முரளி)
இங்கும் மற்றும் பல நாடுகளிலும் மின்மினிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு, அதிகரித்து வரும் மழைப்பொழிவு, நீர் மாசுபாடு மற்றும் வெப்பநிலை மாறுபாடுகள் உள்ளிட்ட காலநிலை மாற்றமே முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது. நீலகிரியில் பல ஆண்டுகளாக மின்மினிகளைப் பற்றி ஆய்வு செய்து வரும் பூச்சியியல் வல்லுநரும், இயற்கை ஆர்வலரும், திரைப்பட இயக்குநரும், வனவிலங்கு ஒளிப்பதிவாளருமான ஸ்ரீராம் முரளி, ’செயற்கை ஒளி (ஒளி மாசுபாடு) மற்றும் காலநிலை மாற்றத்தின் பிற அம்சங்களே மின்மினிகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கியக் காரணங்களாகும்’, என்கிறார். மின்சாரம் மூலம் ஒளிரும் அருகிலுள்ள நகரங்கள், புலிகள் காப்பகத்திற்குள் அதிகப்படியான ஒளியைச் சிதறடிப்பதைக் கண்டறிந்த முரளி, இதுவே மின்மினிகளின் (Glow worms) வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
துணி ஒன்றின் மீது அமர்ந்தபடி தனது தனித்துவமான உயிரொளியை வெளிப்படுத்தும் ஒரு மின்மினிப்பூச்சி.
ஒரு பயண வலைப்பதிவில் (travel blog) பேசிய முரளி, மின்மினிகள் முக்கியமாகத் தங்கள் இணையைத் தேடவும், ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளவும் ஒளிர்கின்றன என்றும், செயற்கை ஒளியுடன் அவை போட்டியிடும் போது அவற்றின் உடலொளி சமிக்ஞைகள் (bioluminescent signals) செயலற்றுப் போகின்றன என்றும் விளக்கினார். “ஆண் மின்மினிகள் மரங்களில் அமர்ந்திருக்கும். அவை ஒரே இனத்தைச் சேர்ந்த பெண் மின்மினிகளைக் கவர்வதற்காக ஒன்றாக இணைந்து ஒளிர்கின்றன… சுற்றுப்புற வெளிச்சம் நிலவொளி அளவுக்குப் பிரகாசமாக மாறினால், அவை ஒளிர்வதில்லை. இதனால் இணைச்சேர்க்கை நடப்பதில்லை. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அவற்றின் இனமே அழிந்துவிடுகிறது.”

விவசாய விரிவாக்கம், வாழ்விட இழப்பு மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றங்கள் ஆகியவையும் இதற்குக் காரணங்களாக இருக்கின்றன என்பதை முரளியின் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. மின்மினிகள் ஒரு ஆரோக்கியமான காட்டு சுற்றுச்சூழல் அமைப்பின் குறிகாட்டிகள் (indicators) ஆகும். அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவது, நமது காடுகள் தங்களின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை இழந்து வருகின்றன என்பதற்கான ஒரு எச்சரிக்கையாகும்
அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முரளியின் வார்த்தைகளை உறுதிப்படுத்துகின்றன. இருபது வருடங்களுக்கு முன்பு, 1996 ஆம் ஆண்டில், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பர்ரங்குலா என்ற தொலைதூரக் கிராமத்தில் ‘அப்ஸ்காண்டிடா சைனென்சிஸ்’ (Abscondita chinensis) என்ற மின்மினி இனத்தின் எண்ணிக்கை “பல நூறுகளாக” பதிவாகியிருந்தது. நெல் வயல்களால் சூழப்பட்ட, பர்ரங்குலா கால்வாயை ஒட்டிய 10 மீட்டர் பரப்பளவில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
எஸ். வெங்கட்ராமன், சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர் மற்றும் மேக்ரோ புகைப்படக் கலைஞர்.
இருப்பினும், அதே இடத்தில் 2019 ஜனவரியில் வெறும் 10 முதல் 20 மின்மினிகள் மட்டுமே கொண்ட மிகக் குறைந்த எண்ணிக்கையே காணப்பட்டது. தன் உடலிலிருந்து ஒளியை உமிழும் வண்டுகள் (bioluminescent beetles) குறித்த ஆராய்ச்சிக்காக பிரத்யேகமாக வெளிவரும் ‘தி லம்பிரிட் ஜர்னல்’ (The Lampyrid Journal) என்ற சர்வதேச இதழ் (தொகுதி 8), மின்மினிகளின் எண்ணிக்கை குறைவது சுற்றுச்சூழல் அமைப்புகளில் குறிப்பிடத்தக்கப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறுகிறது. இந்த வீழ்ச்சியானது மகரந்தச் சேர்க்கை குறைய வழிவகுக்கும், இது தாவரங்களின் எண்ணிக்கையையும், உணவிற்காக அவற்றைச் சார்ந்திருக்கும் விலங்குகளையும் எதிர்மறையாகப் பாதிக்கக்கூடும்.

மின்மினிகள், மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கக்கூடிய சாத்தியமான பங்களிப்புகளுக்காகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதை இந்த இதழ் சுட்டிக்காட்டுகிறது. “மின்மினிகளின் உடலொளிக்குக் காரணமான ‘லூசிஃபெரின்’ (luciferin) என்ற வேதிப்பொருள், மருத்துவ இமேஜிங் (medical imaging) மற்றும் பிற நோய் கண்டறியும் கருவிகளில் அதன் சாத்தியமான பயன்பாடுகளுக்காக விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு நோய்கள் மற்றும் பாதிப்புகளைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க உதவும் புதிய மருத்துவச் சிகிச்சை முறைகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. உதாரணமாக, புற்றுநோய் செல்களைக் கண்டறியவும், அல்சைமர் (Alzheimer’s) போன்ற நோய்களின் தீவிரத்தைக் கண்காணிக்கவும் மற்றும் புதிய மருந்துகளை உருவாக்கவும் உதவக்கூடிய இமேஜிங் தொழில்நுட்பங்களை உருவாக்க இந்த லூசிஃபெரின் பயன்படுத்தப்பட்டுள்ளது.”
மின்மினிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றின் வாழ்விடங்களையும் எண்ணிக்கையையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது இன்றியமையாதது என்று அந்த இதழ் வலியுறுத்துகிறது. சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற வனவிலங்கு ஒளிப்பதிவாளரான எஸ். வெங்கடராமன் போன்ற இயற்கை ஆர்வலர்களும் இதையே வழிமொழிகிறார்கள். இவர் மக்களால் அன்போடு “பூச்சி வெங்கட்” என்று அழைக்கப்படுகிறார். அவர் தனது உறுதியான கருத்தை இவ்வாறு கூறி முடிக்கிறார், “நமது இயற்கை உலகில் உள்ள மிகவும் நுட்பமான மற்றும் முக்கியமான உயிரினங்களில் மின்மினிகளும் ஒன்றாகும். இந்த பூமியில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு இனமாக, மனிதர்களின் இடையூறுகள் ஏதுமின்றி, அவை இயற்கையோடு இணைந்து தொடர்ந்து வாழ்வதை உறுதி செய்வது நமது பொறுப்பாகும்.”





