A Unique Multilingual Media Platform

The AIDEM

Articles National Politics

ஒரு பிரதமர் பேசும் பேச்சா இது! மோடியின் தரக்குறைவான பேச்சுகளின் பட்டியல்

  • February 22, 2023
  • 1 min read
ஒரு பிரதமர் பேசும் பேச்சா இது!  மோடியின் தரக்குறைவான பேச்சுகளின் பட்டியல்

(தமிழில்: ராஜசங்கீதன்)

ஆகச்சிறைந்த பேச்சாளராக ஆதரவாளர்களாலும் டெலிப்ராம்படர் உதவியுடனான நீண்ட உரைகளையாற்றுபவர் என விமர்சகர்களாலும் குறிப்பிடப்படும் நரேந்திர மோடி, தன் உரைகளின் தரத்தை பல தருணங்களில் கீழிறக்கியவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.


பாரதீய ஜனதா கட்சியின் சமீபத்திய கூட்டம் ஒன்றில், தன் அரசாங்கத்தின் கடின உழைப்பை இருட்டடிப்பு செய்யும் வகையிலான விரும்பத்தகாத கருத்துகளை தலைவர்கள் சொல்லக் கூடாதென நரேந்திர மோடி எச்சரித்தார். இந்த எச்சரிக்கையை விடுத்த சில நாட்களுக்குள்ளேயே நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சுகள் அவர் சொன்னதை அவரே கேட்க மாட்டாரென்று புரிய வைத்திருக்கின்றன. 2014ம் ஆண்டு தொடங்கி கெளதம் அதானி அடைந்த அபரிமிதமான வளர்ச்சியில் பிரதமரின் பங்கு இருப்பதைக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல், மோடி நடந்து கொண்டது தார்மீகமற்றதும், பிரதமர் பொறுப்புக்கு பொருந்தாதும் இருந்ததாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய மோடி, எதிர்க்கட்சிகளை ஒன்று படுத்தியது அமலாக்கப் பிரிவுதான்  என்றும் அப்பிரிவுக்குத்தான் அவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார். ’மோடி -மோடி’ ’அதானி – அதானி’ என்ற எதிர்க்கட்சியினரின் முழக்கங்களுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சியை தாக்கும் பொருட்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்றை கையிலெடுத்தார் மோடி. கடந்த காலத்தில் மோடியால் எள்ளி நகையாடப்பட்ட பல்கலைக்கழகம் அது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்’ என்பதுதான் ஆய்வின் தலைப்பு. பாஜக தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாயிக்கு ஜவஹர்லால் நேருவை எவ்வளவு பிடிக்கும் என்பதையும் நேரு இறந்தபோது அவரை ராமருக்கு நிகராக வாஜ்பாயி ஒப்பிட்டதையும் குறிப்பிடும் ஆய்வு, உண்மையில் காங்கிரஸை விட பாஜகவுக்குதான் அதிக பாடங்களை கொண்டிருந்தது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய ஐந்து எளிமையான நேரடி கேள்விகளுக்கு மக்களவையில் பதிலளிக்காமல், மாநிலங்களவையில் பின்னர் காந்தி குடும்பத்தை தாக்கிப் பேசினார் மோடி. “நேருவின் பெயரை பயன்படுத்துவதில் (காந்தி குடும்பத்துக்கு) என்ன அவமானம்?” என எள்ளி நகையாடினார். இங்கும் ’மோடி-மோடி, அதானி-அதானி’ என்கிற முழக்கங்களைப் பொருட்படுத்தாமல்  நீண்ட அவரது உரையில், “அனைவரையும் எதிர்த்து நிற்கும் ஒரு நபரை தேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது,” எனத் பெருமையடித்துக் கொண்டார். அவர் குறிப்பிட்டது வேறு யாரையுமல்ல, அவரையேதான். 90 நிமிடங்களுக்கு நீண்ட அவரது பேச்சில், பாதிக்கப்பட்டவராக தன்னை காண்பித்துக் கொண்ட மோடி, “வசைகளையும், பொய்களையும்” எதிர்கட்சிகள் தன் மீது பொழிவதாக குற்றஞ்சாட்டினார். 

அருவருப்பான கருத்துகளைச் சொல்லி கடுமையான விமர்சனத்தை மோடி எதிர்கொள்வது இது முதன்முறை அல்ல. அவருடைய நண்பரும் சர்ச்சைக்குரிய தொழிலதிபருமான கெளதம் அதானிக்கு சொந்தமான விமானத்தில் தில்லிக்கு வந்து சேர்வதற்கும் முன்பே, குஜராத்தின் முதல்வராக இருந்த காலத்தில் நாகரிகமற்ற கருத்துகளைப் பேசியதற்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த பெருமைக்குரியவர் மோடி. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை “ஜெர்ஸி பசு” என அவர் குறிப்பிட்டிருக்கிறார். ராகுல் காந்தியை “மரபணு மாற்றப்பட்ட கன்றுக்குட்டி” எனக் குறிப்பிட்டிருக்கிறார். சசி தரூரின் இணையரை “50 லட்ச ரூபாய் தோழி” என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பிரதமர் பொறுப்பை ஏற்ற பிறகும் கூட அந்த பொறுப்புக்கான தகுதியை அவர் வளர்த்துக் கொள்ளவில்லை. எல்லா தேர்தல் பிரசாரங்களிலும் எதிர்கட்சிகள் தம்மை மோசமாக பேசுவதாக மோடி சொன்னாலும், அவரின் வரலாறு என்னவோ நல்ல விதத்தில் அவரை காண்பிப்பதாக இல்லை. பிரதமர் பொறுப்புக்கு பொருந்தாத வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய விஷயங்களை இங்கு பட்டியலிடுகிறோம்: 

 

  • 2021ம் ஆண்டில் நடந்த மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்துக்கு முன்பு, முடிவெட்ட மோடி செல்லவில்லை போல. மேற்கு வங்கத்துக்கு வந்து அவர் இறங்கியபோது பலரும் தாகூரின் சாயலை அவரிடம் பார்த்தனர். ஆனால் மாநில முதல்வர் மமதா பேனர்ஜியை அவர் “தீதி ஓ தீதி” என நக்கலாக குறிப்பிட்டபோது ஒரு கீழ்த்தரமான பேச்சாளராகவே தென்பட்டார். ஆனால் மமதா பேனர்ஜி மோடியின் பேச்சை சாதாரணமாக் கடந்து சென்றார். “ஒவ்வொரு முறையும் இப்படித்தான் அவர் நடந்து கொள்வார். நான் பொருட்படுத்துவதில்லை!” என்றார் மமதா

 

  • 2017ம் ஆண்டின் பணமதிப்புநீக்க நடவடிக்கையின்போது, கண்ணீர் ததும்ப நாட்டு மக்களிடம் மோடி பேசினார்: “50 நாட்கள் கொடுங்கள். நான் சொன்னது தவறென நிரூபிக்கப்பட்டால், உயிருடன் என்னை எரித்து விடுங்கள்.” பணமதிப்புநீக்கம் பேரழிவை ஏற்படுத்தியது என்கிற உண்மை நிரூபிக்கப்பட்டதும் அவர் அமைதியானார்.  பணமதிப்புநீக்கத்துக்கான புது விளக்கமாக “ஊழலுக்கு எதிரான போர்” எனக் கொடுத்தார். பினாமி சொத்துகளின் மீதான துல்லிய தாக்குதல் என்றார்.

 

  • நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரும் ஹார்வர்ட் பல்கலைக் கழகப் பேராசியருமான அமர்த்யா சென், “நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட பொருளாதாரத்தின் வேரில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்தான் பணமதிப்புநீக்க நடவடிக்கை” என சொன்ன கருத்துக்கு பதிலளிக்கும் சாக்கில் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தையே அவர் மட்டம் தட்ட நினைத்தார். “ஹார்வர்டை விட கடின உழைப்பு (ஆங்கிலத்தில் Hard Work) சக்தி வாய்ந்தது,” எனக் கூறினார்.

 

  • ஜூன் 2015-ல் பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்கா நகருக்கு சென்றபோது, “வங்க தேச பிரதமர் பெண்ணாக இருந்தபோதும் தீவிரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாதென அறிவித்ததில் நான் சந்தோஷமடைகிறேன்,” எனப் பேசினார். வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா குறித்த, பாலின பாரபட்சம் நிறைந்த இந்த பேச்சால் இந்தியாவின் தரம் சர்வதேச அளவில் குறைந்துவிட்டதாக கடும் கண்டனங்களை எதிர்கட்சிகளிடமிருந்து மோடி சம்பாதித்துக் கொண்டார்.  

 

  • 2015ம் ஆண்டின் மே மாதம், தென் கொரியத் தலைநகரான சியோலில் வாழும் புலம்பெயர் இந்தியர்களிடையே ஆற்றிய உரையில், ”கடந்த காலத்தில் (காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்) மக்கள் இந்தியாவில் பிறந்ததற்கு என்ன பாவம் செய்தோமென வருத்தப்பட்டார்கள் எனக் கூறினார். அவரது கருத்து எதிர்கட்சிகளிடம் பெரும் கோபத்தை கிளப்பியது. சமூக வலைத் தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

 

  • 2015ம் ஆண்டின் மே மாதத்தில் டொரண்டோ நகரின் ரிகோ கொலிசியத்தில் புலம்பெயர் இந்தியர்களிடையே பேசுகையில் முந்தைய இந்திய அரசாங்கங்களை மோடி கேலி பேசி, “முன்பெல்லாம் இந்தியாவின் அடையாளம் என்பது ஊழலாக இருந்தது. நாங்கள் அந்த அடையாளத்தை திறன் கொண்ட இந்தியா என மாற்றியிருக்கிறோம்,” என்றார்.

 

  • ஆகஸ்ட் 2016-ல் தலித்துளுக்கு பாதுகாப்பு வேண்டும்,  போலி பசுக் காவலர்களை தண்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளுக்காக ஹைதராபாத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் மோடி பேசுகையில், “என்னைத் தாக்குங்கள், என்னைச் சுடுங்கள். என் தலித் சகோதரர்களை விட்டுவிடுங்கள்,” என்றார். அவரது வேண்டுகோள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தி சட்ட ஒழுங்கை நாட்டில் நிலைநிறுத்துவதை விட்டுவிட்டு, நாடகத்தனமான வசனங்கள் பேசுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

 

  • மே மாதம் 2016-ன் தேர்தல் பிரசாரத்தில் கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டதற்காக மோடி கேலி செய்யப்பட்டார். குழந்தைகளுக்கான சத்து குறைபாடு மற்றும் குழந்தை இறப்பு விகிதம் உலகிலேயே சோமாலியாவில்தான் அதிகமாக இருக்கிறது என்பதும் இந்தியாவிலேயே குழந்தை இறப்பு விகிதம் குறைவாக இருக்கும் இடம் கேரளா என்பதும் மோடிக்கு நினைவூட்டப்பட்டது.

 

  • 2016ம் ஆண்டில் கொல்கத்தா மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தை முன் வைத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜியை தாக்கும் வகையில், “மேற்கு வங்கத்தை திரிணமூல் காங்கிரஸிடமிருந்து காப்பாற்ற கடவுள் அனுப்பிய செய்தி” என அச்சம்பவத்தை வர்ணித்தார் மோடி. “அவர்கள் அச்சம்பவத்தை கடவுளின் செயல் என்கின்றனர். உண்மையில் அது மோசடிக்காரரின் செயல்,” என்றார் அவர். சொந்த மாநிலமான குஜராத்தில் மோர்பி மேம்பாலம் 2022ம் ஆண்டில் இடிந்து விழுந்தபோது மோடியின் அப்பட்டமான மெளனத்தைக் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் அவர் கொல்கத்தா சம்பவத்தின் போது பேசியதை நினைவு படுத்தினர.

 

  • 2021ம் ஆண்டில் நாட்டின் மேம்பாட்டுக்கு தனியார் துறை அளித்த பங்களிப்பை பாராட்டி பேசுகையில் மோடி அதிகாரவர்க்கத்தின் பங்கு குறித்து கேள்வி எழுப்பினார். அவரது கருத்துகள் இந்திய ஆட்சிப் பணியில் இருப்போரை பகிரங்கமாக இழிவு படுத்தின என்கிற குற்றச்சாட்டு அதிகாரிகளின் மத்தியில் எழுந்தது. அதற்கு முன்பு 2019-ல் நடந்த ஒரு கூட்டத்தில் தன்னுடைய முதல் ஐந்து வருட ஆட்சிக்காலத்தை நாசம் செய்து விட்டதாக உச்ச அதிகாரிகளிடம் மோடி கோபப்பட்டதாகவும் அடுத்த ஐந்து ஆண்டு காலக்கட்டத்தை அப்படியாக்க விடப் போவதில்லை என மோடி சொன்னதாகவும் ஒரு தகவல் வெளியானது. 

 

  • ஏப்ரல் 2019-ல் ராஜஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அணு ஆயுத அபாயத்தை மலினப் படுத்திப்  பேசியதாக மோடி மீது விமர்சனம் வைக்கப்பட்டது. பாகிஸ்தானின் மிரட்டல்களை குறிப்பிட்டு பேசுகையில் அவர், “ஒவ்வொரு நாளும் அவர்கள் “எங்களிடம் அணு ஆயுத பொத்தான் இருக்கிறது, எங்களிடம் அணு ஆயுத பொத்தான் இருக்கிறது,’ எனக் கூறுகின்றனர். நம்மிடம் மட்டும் என்ன இருக்கிறது? தீபாவளிக்காகவா அவற்றை (அணு ஆயுதங்களை) வைத்திருக்கிறோம்?” என்றார்.

 

  • குஜராத்தின் காந்தி நகரில் பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022-ஐ துவக்கி வைத்தபோது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை மோடி வசை பாடினார். “இதே நாட்டில்தான் ஒரு காலத்தில் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. ஆனால் இப்போது சிறுத்தைகளை திறந்து விடும் நிலையை நாடு எட்டியிருக்கிறது,” என்றார். சில நாட்களுக்கு முன்தான் தன் பிறந்தநாள் அன்று காட்டுக்குள் சிறுத்தைகளை மோடி திறந்திவிட்டார். நேருவோ தன் பிறந்தநாளுக்கு புறாக்களைப் பறக்க விட்டவர்.

 

  • 2019 டிசம்பரில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு, போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்க்கப்பட்டிருந்தபோது, பிரதமர் சொன்னார்: “(சொத்துகளுக்கு) தீ வைக்கும் மக்களை தொலைக்காட்சியில் பார்க்க முடியும்…. அணிந்திருக்கும் உடைகளை கொண்டு அவர்களை அடையாளம் காண முடியும்.” ஒன்றிய அரசின் அமைச்சர்களும் பாஜக தலைவர்களும் வெறுப்பூட்டும் பேச்சுகளை பேசி வந்த நிலையில் மோடியின் உரை இஸ்லாமியர்களை அடையாளப் படுத்திப் பேசப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.

 

  • பிப்ரவரி 2017-ல் உத்தரப்பிரதேசத்தின் அகிலேஷ் யாதவ் அரசாங்கம் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பதாக மோடி குற்றஞ்சாட்டினார். “ஒரு இடுகாட்டை ஒரு ஊரில் உருவாக்கினால், ஒரு சுடுகாட்டையும் உருவாக்க வேண்டும். ரம்ஜான் நேரத்தில் தொடர் மின்சாரம் வழங்கப்பட்டால், தீபாவளிக்கும் அது தடையின்றி கொடுக்கப்பட வேண்டும். பாரபட்சம் இருக்கக் கூடாது,” எனப் பேசினார். ஆச்சரியம் என்னவென்றால் அந்த பேச்சு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கும் ஆச்சரியம் அளித்தது. அவர் சொல்கையில், “இடுகாடு, சுடுகாடு, காவி பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகள் யாவும் மக்களின் நலனுக்காக அல்லாமல் அதிகாரத்துக்காக அரசியல் செய்யப்படும்போதுதான் எழுகிறது,” என்றார் பகவத்.

 

  • மே மாதம் 2019-ல் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வாத்ரா பாம்பாட்டிகளுடன் உரையாடிய போது  எடுக்கப்பட்ட புகைப்படத்தை முன் வைத்து மோடி அவரைத் தாக்கிப் பேசினார்.  இந்தியாவின் யதார்த்தத்துக்கு பொருந்தாத ஒரு கண்ணோட்டத்தை உருவாக்க முயலுவதாக அவரை மோடி குற்றஞ்சாட்டினார். “இது ‘பாம்பாட்டிகளின்’ காலம் அல்ல, இது ‘எலியாட்டிகளின்’ (கணிணியை இயக்கப் பயன்படும் Mouse) காலம்,” என ஐடி துறையை குறித்து மோடி பேசினார்.

 

  • பிப்ரவரி 2017-ல் முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கை தாக்கிப் பேசினார் மோடி. டாக்டர் சிங் அப்பழுக்கற்ற ஆட்சிக்காலத்தை தந்தவர் என முன்வைக்கப்படும் பிம்பத்தை குறித்து ஆச்சரியத்தை தெரிவித்தார். அவரைப் பொறுத்தவரை பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட அரசாங்கத்தை நடத்தியவர் மன்மோகன் சிங். “ஊழல் நிறைந்த அரசாங்கத்தில் ஒரு ஊழல் புகார் கூட மன்மோகன் சிங் மீது இல்லை. ரெயின்கோட் போட்டுக் கொண்டு குளிக்கும் கலையை மன்மோகன் சிங்கிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.”

 

  • 2019ம் ஆண்டு நடந்த தேர்தலுக்காக மகாராஷ்டிராவின் லாட்டூர், கர்நாடகாவின் சித்ரதுர்கா மற்றும் தமிழ்நாட்டின் கோவை ஆகிய இடங்களில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் பேசுகையில், புல்வாமாவில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களையும் பாலகோட்டில் இந்திய ராணுவம் திருப்பித் தாக்கியதையும் முன் வைத்து வாக்கு சேகரித்தார் மோடி. “முதன்முறை வாக்களிப்பவர்களிடம் நான் கேட்கிறேன். உங்களின் முதல் ஓட்டு பாலக்கோட் விமானத் தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்படுமா?” பிறகு லாட்டூர் பிரசாரத்தில், “உங்களின் முதல் ஓட்டை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்காக போடுவீர்களா?” எனக் கேட்டார். முரண்நகையாக பிப்ரவரி 2014-ல் ராணுவ வீரர்களைக் காட்டிலும் அதிக ஆபத்து நிறைந்த வேலையை வணிகர்கள்தான் செய்கிறார்கள் என்றவர் மோடி. 

 

  • முன்னாள் பிரதமரான ராஜிவ் காந்தி போஃபர்ஸ் வழக்கின் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டபிறகும் மோடி அவரை “ஊழல்வாதி நம்பர் 1” என உத்தரப்பிரதேச பிரதாப்கர் தொகுதியில் பேசுகையில் குறிப்பிட்டார். அது ரஃபேல் ஊழலில் மோடிக்கு எதிராக கேள்விகள் எழுப்பப்பட்டிருந்த நேரம். “உங்களின் தந்தை இந்தியாவின் ஊழல் நிறைந்த மனிதனாக உயிரை விட்டார்,” என மோடி ராகுல் காந்தியை சுட்டும் வகையில் பிரசாரத்தில் பேசினார்.

கடந்த வருட நவம்பர் மாதத்தில் தெலெங்கானா நிகழ்ச்சி ஒன்றில் மோடி பேசும்போது, “இரண்டு – மூன்று கிலோ வசவுகளை நான் தினமும் பெறுவதால்தான் என்னுடைய வேலைப்பளு என்னை சோர்வுக்குள்ளாக்குவதில்லை,” என்றார். மோடி பற்றிய கண்ணியக் குறைவான கருத்துகள் தெரிவித்த பல நபர்கள் மீது காவல்துறை வழக்குகள் பதிவு செய்யும் நிலையில், சமீபத்திய பரிக்‌ஷா பே சர்ச்சா 2023 நிகழ்ச்சியில் மாணவர்களிடம் மோடி இவ்வாறு பேசினார்: “விமர்சனங்கள்தான் ஜனநாயகத்தை சுத்தப்படுத்தும்”. ஆனால் தில்லி மற்றும் மும்பை பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரி ரெய்டுகள் விமர்சனத்தை அவர் எதிர்கொள்ள முடியாததையே காட்டுகிறது. ‘India: The Modi Question’ என்கிற பிபிசியின் இரு பாக ஆவணப் படம், குஜராத் கலவரத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதை தடுக்காமல் இருந்ததாக மோடியை நேரடியாக குற்றஞ்சாட்டுகிறது. “இனப்படுகொலைக்கான எல்லா அடையாளங்களையும்” குஜராத் படுகொலைகள் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறது. ஆவணப்படத்துக்கான எதிர்வினையாக மோடி அரசாங்கம் அப்படத்துக்கு தடை விதித்திருக்கிறது. மோடி இவ்வாறுதான் ஜனநாயகத்தை சுத்தப் படுத்துகிறார் போலும்!


Read the Article in English and Hindi 


Subscribe to our channels on YouTube & WhatsApp

About Author

அபூர்வா ராய் சாட்டர்ஜி

அபூர்வா ராய் சாட்டர்ஜி ஓர் ஆய்வாளர். தில்லியைச் சேர்ந்த சுயாதீன எழுத்தாளர்.

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ravichandran
Ravichandran
1 year ago

அருமையான தொகுப்பு! ஆனால், இதுவே அவருடைய பிறவி குணம் என்பதால் அவரோ, அவரது ஜால்ராக்களோ இதைப்பற்றியெல்ஆம் வெட்கப்பட மாட்டார்கள்! என்றாலும் நாம் தொடர்ந்து விமர்சனம் செய்வோம்!

கே.கந்தசாமி
கே.கந்தசாமி
1 year ago

அருமை பலவிபரங்கள் பேசுவதற்க்கு கிடைத்துள்ளது நன்றி.கே.கந்தசாமி பழனி நகர் மன்ற துணைத் தலைவர் பழனி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர்