A Unique Multilingual Media Platform

The AIDEM

Articles Cinema National

கேரளா ஸ்டோரி: ஓர் அரசியல் திட்டமும் தணிக்கைக் குழுவின் திருட்டுத்தனமும்

  • May 3, 2023
  • 1 min read
கேரளா ஸ்டோரி: ஓர் அரசியல் திட்டமும் தணிக்கைக் குழுவின் திருட்டுத்தனமும்

(The AIDEM குழுமத்தின் சிறப்புக் கட்டுரை.  தமிழில்:ராஜசங்கீதன்)


பொய்கள் தெருவில் சுற்றும்போது, கலையும் இலக்கியமும் கூட தப்பாது. கதைகள் இயல்பாக நேர்வதில்லை. அவை பெரும்பாலும் இட்டுக்கட்டப்படவே செய்கின்றன. தி கேரளா ஸ்டோரி (The Kerala Story) படத்தின் ட்ரெயிலர் கடந்த நவம்பர் மாதம் வெளியானபோது, பல விஷயங்கள் அதில் இட்டுக் கட்டப்பட்டிருப்பது சுட்டிக் காட்டப்பட்டது. கேரள சமூகத்தின்மீது பல பொய்களையும் அவதூறுகளையும் கட்டவிழ்த்திருந்த அந்த ட்ரெயிலர் வெளியானபோது அதிகாரப்பூர்வமாக தணிக்கை செய்யப்பட்டிருக்கவில்லை. இத்தகவலை ஒன்றிய திரைப்பட தணிக்கைக் குழுவே  (CBFC) வெளியிட்டிருந்தது. சென்னையை சேர்ந்த தொலைக்காட்சி நெறியாளர் பி.ஆர்.அரவிந்தாக்‌ஷன், ஒன்றிய திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பியிருந்த தகவல் அறியும் உரிமை மனுவுக்கு கிடைத்த பதிலில்தான் இந்த தகவல் கிடைத்தது. பிப்ரவரி 23, 2023 அன்று அவர், ட்ரெயிலரை பார்த்து தணிக்கைக் குழு சான்றிதழ் அளித்திருந்ததா எனக் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அனுப்பியிருந்தார். தணிக்கைக் குழு அனுப்பியிருந்த பதிலில் தெள்ளத்தெளிவாக, ட்ரெயிலர் தணிக்கை செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் புகாரளிப்பவர் இப்பிரச்சினையில் மேலதிக நடவடிக்கைகள் விரும்பினால் மேல்முறையீடும் செய்யலாம் என யோசனை சொல்லப்பட்டிருந்தது.

Response received for RTI Application

தற்போது அப்படத்தின் போஸ்டர்கள் மே 5ம் தேதி படம் வெளியாகும் என்கிற அறிவிப்புடன் வெளியாகி இருக்கின்றன. படத்தை சன்ஷைன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கியிருக்கிறார். படத்துக்கான அடுத்த ட்ரெயிலரும் வெளியாகி இருக்கிறது. அதில் கேரளா, இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு தஞ்சம் தரும் இடமாக காண்பிக்கப்பட்டிருக்கிறது.

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் அப்படம் கேரளாவை பற்றியும் அச்சமூகம் பற்றியும் தவறான கருத்துகளை பிரசாரம் செய்கிறது. இக்கருத்து, அப்படம் எடுக்கப்படும்போதே கூட முன்வைக்கப்பட்டது. படத்தின் கதை நான்கு பெண்களை பற்றியது. அவர்களுள் ஒருவர் ஷாலினி உன்னிகிருஷ்ணன். மக்களுக்கான சேவையை வாழ்க்கையாக தேர்ந்தெடுத்திருப்பவர். இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வலைக்குள் அவர் சிக்குகிறார். இஸ்லாம் மதத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்படுகிறார். அவரின் பெயர் ஃபாத்திமா பா என மாற்றப்படுகிறது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவில் சேர்ந்த பிறகு, ஆஃப்கனில் அவர் சிறை வைக்கப்படுகிறார். அடா ஷர்மா, ஷாலினி பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மற்ற மூன்று பெண் பாத்திரங்களில் யோகிதா பிகானி, சோனியா பலானி மற்றும் சித்தி இதானி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

Promotional Poster for the film

பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆளெடுக்கும் இடமாக கேரளா இருப்பதாக காண்பிக்கும் படம், 32,000 கேரளப் பெண்களை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்களுக்குள் இணைத்திருக்கின்றனர் என்ற ஆபத்தான குற்றச்சாட்டையும் எழுப்புகிறது. உமன் சாண்டி (காங்கிரஸ்) மற்றும் வி.எஸ்.அச்சுதானந்தன் (சிபிஐஎம்) ஆகிய இரு முன்னாள் முதல்வர்களும் குறிப்பிட்ட சில விஷயங்களை கடுமையாக திரித்து இம்முடிவுக்கு பட இயக்குநரான சுதிப்தோ சென் வந்திருக்கிறார். 2021ம் ஆண்டில் சிட்டி மீடியாவுக்கு அளித்த நேர்காணலில், 2010ம் ஆண்டு கேரள சட்டசபையில் பேசிய உமன் சாண்டியின் உரையிலிருந்து, 32,000 என்கிற எண்ணிக்கையை எடுத்ததாக சுதிப்தோ சென் சொல்லியிருக்கிறார். 

அதில் உண்மை இல்லை. ஜூன் 25, 2021 அன்று கேரள சட்டசபையில் பேசும்போது 2006ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு வரை 2667 பேர் இஸ்லாம் மதத்துக்கு மாறியிருக்கும் தகவலை உமன் சாண்டி கூறினார். இந்த பதிலில் ஐஎஸ்ஐஎஸ் பற்றி எதுவும் இல்லை. சமீபத்தில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்டை பற்றி வி.எஸ்.அச்சுதானந்தன் சொன்ன விஷயத்தை படத்தின் டீசர் திரித்து பயன்படுத்தியிருக்கிறது. டீசரில் வி.எஸ்.அச்சுதானந்தன் சொல்கிற விஷயம் ஒன்றாக இருக்கிறது. சப் டைட்டிலில் வரும் மொழிபெயர்ப்பு வேறொன்றாக இருக்கிறது. சொன்ன வார்த்தைகளுக்கும் அவற்றுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அச்சமயத்தில் செய்திகளின் உண்மைத் தன்மையை பரிசோதிக்கும் தளமாக இருக்கும் ஆல்ட் நியூஸ், அந்தத் தவறை சரி செய்யும்படி சுதிப்தோ சென்னிடம் கேட்டுக் கொண்டும், அவர் பொருட்படுத்தவில்லை. 

2018ம் ஆண்டு சுதிப்தோ சென்னின் இயக்கத்தில் வெளியான ‘இன் தெ நேம் ஆஃப் லவ்’ என்கிற ஆவணப்படமும் இதே விஷயத்தைதான் கையாண்டிருந்தது. ஆவணப்படத்தின் பிரதான கதையோட்டம், இந்து மற்றும் கிறித்துவ பெண்கள் தவறான முறையில் இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாதிகள் இருக்கும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதாக கூறியது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆவணப்படம் திரையிடப்பட்டபோது கொந்தளிப்பு ஏற்பட்டு, அப்படம் ‘லவ் ஜிகாத்’ பற்றியல்ல என மன்னிப்புடன் கூடிய விளக்கத்தை இயக்குநர் இறுதியில் தர நேர்ந்தது. 

கம்யூனிசம் குறித்த தன் வெறுப்பை பல இடங்களில் சுதிப்தோ சென் வெளிப்படையாக பேசியிருக்கிறார். 2022ம் ஆண்டு நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், இஸ்ரேல் பட இயக்குநரும் தேர்வுக்குழுவின் தலைவருமான நதவ் லேபிட், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை விமர்சித்தபோது, அவரை எதிர்த்த ஒரே தேர்வுக்குழு உறுப்பினர் சுதிப்தோ சென் மட்டும்தான். 

Sudipto Sen, Director

ஆர்எஸ்எஸ் இயக்கும் பாஜக, இரண்டு பொது தேர்தல்களில் வெற்றி பெற்று மத்தியில் வீற்றிருந்தும் ஒரு தீவாக, மதச்சார்பின்மை உறுதியுடன் இருக்கும் கேரளாவின் மீது சுதிப்தோ சென் கொண்டிருக்கும் வெறுப்பே

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சம்பவத்துக்குக் காரணமென பலரும் அவதானிக்கின்றனர். கேரளாவின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்துவிட்டு, இஸ்லாமிய மதவாதத்தை தூக்கிப் பிடிப்பதாக அம்மாநிலத்தை சித்தரிக்க சுதிப்தோ முயலுகிறார் எனவும் சொல்லப்படுகிறது. 

சுதிப்தோ முன்னெடுக்கும் பொய்ப்பிரசாரத்தின் ஒரு பகுதியாகத்தான் தி கேரளா ஸ்டோரி படத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. பெரும்பான்மை மதவாதத்துக்கு ஆதரவாக பொய்ப்புரட்டுகள் மட்டுமே இருப்பதை  தெள்ளத்தெளிவாக படத்தின் டீசர் வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் படம் வெளியாகவிருப்பதாக போஸ்டர்கள் தெரிவிக்கின்றன. எல்லா விளம்பரங்களிலும் படத்துக்கான தணிக்கை விவரம் (A, U, AU) இருக்க வேண்டியது கட்டாயம் என்கிற நிலையில், இப்படத்துக்கான போஸ்டர்கள் எதிலும் அத்தகவல் இடம்பெறவில்லை. இதனாலேயே அப்படம் முறையாக தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டதா என்கிற சந்தேகமும் எழுகிறது. முக்கியமாக, கேரள சமூகம் பற்றிய ஆபத்தான அவதூறுகளை கொண்டு மதரீதியிலான மோதல்களை தூண்டக்கூடிய இப்படம், எந்த அடிப்படையில் பொதுவெளிக்கு வர அனுமதிக்கப்படுகிறது என கேட்கப்பட வேண்டும். 

Promotional Poster

திரைப்பட விளம்பரத்துக்கான குழுவை தணிக்கைக் குழு 1990ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் உருவாக்கியது. திரைப்படங்களின் விளம்பரங்களை பார்த்து அவற்றில் ஆபாசம், வெளிப்படையான வன்முறை, பெண்களுக்கு எதிரான பிரசாரம் போன்ற பல விஷயங்கள் இருக்கின்றனவா என ஆராய வேண்டியதே அக்குழுவுக்கான பணி. அக்குழுவின் தலைமையிடம் மும்பையிலும் பிராந்திய அலுவலகங்கள் ஹைதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் இருக்கின்றன. அரவிந்தாக்‌ஷனுக்கு கிடைத்த பதிலின் மூலமாக, கடந்த நவம்பர் மாதம் வெளியான The Kerala Story பட ட்ரெயிலரை இக்குழு பார்க்கவே இல்லை என்பது தெரிகிறது. 

முதல் ட்ரெயிலர் வெளியானபிறகு, அதற்கு எதிராக புகார்களை தணிக்கைக் குழுவுக்கு கேரள முதல்வருக்கும் அரவிந்தாஷன் அனுப்பியிருக்கிறார். அவரின் புகாரை அடிப்படையாக கொண்டு ஒரு வழக்கும் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. படம் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், புகார் மீதான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரவிந்தாஷன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.


Read this article in English, Malayalam.

About Author

The AIDEM

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
பீட்டர்துரைராஜ்
பீட்டர்துரைராஜ்
10 months ago

நல்ல கட்டுரை