அதிக மழை; அதீத உறைபனி; கடும் வறட்சி:பருவநிலை மாற்றத்தால் தவிக்கும் நீலகிரி விவசாயிகள்!
சமீபத்திய காலங்களில் நீலகிரியில் பருவநிலை மாற்றம் காரணமாக
அதிக அளவில் மழையும் அதீத உறைபனியும், அத்துடன் கோடை
காலங்களில் கடும் வறட்சியும் ஏற்படுவதை கண்கூடாகப் பார்க்க
முடிகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயம் பாதிக்கப்பட்டு,
விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள தவிக்க
வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பசுமைக்காடுகளுடன் அவலாஞ்சி, அப்பர்
பவானி, பைக்காரா, மூக்குருத்தி போன்ற நீர்நிலைகள் சூழ்ந்த பகுதி
நீலகிரி. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்த மலைகளின் அரசி
சந்திக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பொதுவெளியில் பரவலாக
அறியப்படாமல் உள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் சோலைக்காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத்
தோட்டங்கள் உருவாக்கப்பட்டதுடன், புல்வெளிகள் அழிக்கப்பட்டு
தோட்டப் பணிகள் பெருகத் தொடங்கிவிட்டன. பிற்காலத்தில்
மலைப்பகுதிகளில் விதிகளை மீறி காடுகளை அழித்துக் கட்டப்படும்
கட்டடங்களும் ஓய்வு விடுதிகளும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை
ஏற்படுத்தி பருவநிலை மாற்றத்துக்குக் காரணமாகிவிடுகின்றன. இதன்
தாக்கத்தால் இந்தப் பகுதிகளில் மழைப் பொழிவு சீரற்றதாகவும் கணிக்க
முடியாததாகவும் மாறி வருகிறது. சில நேரங்களில் ஏற்படும் அதீத
கனமழை திடீர் வெள்ளத்துடன் நிலச்சரிவையும் ஏற்படுத்துகிறது.
இதேபோல உறைபனியும், வறட்சியும் ஏற்படுத்தும் பாதிப்புகள் சொல்லி
மாளாது.
இதனால், இப்பகுதியின் பூர்வக்குடிகளான பெட்டக் குரும்பர்,
ஆலுக்குறும்பர், முல்லக்குறும்பர், பணியர், காட்டு நாயக்கர், தோடர்,
கோத்தர், இருளர் ஆகிய பழங்குடியின சமுதாய மக்களுடன் படுகர்
உள்ளிட்ட இதர இன மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நீலகிரிப் பகுதியில் ஜூலை தொடங்கி செப்டம்பர் வரையிலான
தென்மேற்கு பருவமழை காலத்தில் 800 மில்லி மீட்டர் மழையும்
அக்டோபர் – நவம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழை காலத்தில்
400 மில்லி மீட்டர் மழையும் பெய்யும். அதாவது சுமார் 120 நாட்கள் இந்த
மழை பரவலாக இருக்கும். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் மழை
பெய்யும் நாட்கள் குறைவாகவும் அதேசமயம் மழைப் பொழிவு
அதிகமாகவும் உள்ளது.
2019இல் அவலாஞ்சியில் ஒரே நாளில் 24 மணி நேரத்தில் 900 மில்லி
மீட்டருக்கும் அதிகமான மழை பெய்தது. 2022இல் கடந்த 40
ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 124 நாட்களில் அதிகபட்சமாக 1859.6
மில்லி மீட்டர் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
வடக்கிழக்குப் பருவமழை காலத்தில் கனமழை காரணமாக 1998, 2001,
2006, 2009 ஆண்டுகளில் நீலகிரியில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபரிலும், இந்த ஆண்டு ஜனவரியிலும் ஏற்பட்ட
கனமழை காரணமாக குன்னூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது என்பதை
இப்பகுதியில் உள்ள மக்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
“2022ஆம் ஆண்டில் உதகையில் பாலடா என்ற இடத்தில் ஒரே நாளில்
அதிகமான மழை பெய்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த
வெள்ளப்பெருக்கால் விவசாய நிலங்களில் அடித்து வரப்பட்ட மண்
கலந்தது. அதனால் மண்ணின் வீரியத்தை விவசாய நிலங்கள் இழந்தன
வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட கல் குப்பை போன்ற பொருட்கள்
விவசாய நிலங்களில் மேவிவிட்டன. இதனால், விவசாய நிலங்கள்
பாதிக்கப்பட்டு பயிர் விளைச்சல் குறைந்து வருகிறது’’ என்கிறார்
பாலடாவில் விவசாயம் செய்து வரும் விவசாயி பரத்.
இதேபோல, வெப்பநிலை அதிகரிப்பும் தொடர்ந்து வருகிறது. நீலகிரியில்
ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை வழக்கமாக 15லிருந்து 25 டிகிரி செல்சியஸ்
வரை இருக்கும். 2024ஆம் ஆண்டு ஏப்ரலில் பகலில் 29டிகிரி செல்சியஸ்
வரை இருந்தது; இரவு நேரத்தில் 11 டிகிரி முதல் 13 டிகிரி வரை இருந்தது.
2025இல் பகலில் 23 டிகிரியிலிருந்து 25 டிகிரி வரை இருந்தது; இரவு
நேரத்தில் 11 டிகிரியிலிருந்து 13 டிகிரி வரை இருந்தது. 2026இல் 18
டிகிரியிலிருந்து 25 டிகிரி வரை இருந்தது;இரவு நேரங்களில் 11
டிகிரியிலிருந்து 16 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.
பகலில் எந்த அளவுக்கு வெப்பம் அதிகரிக்கிறதோ அதே அளவிற்கு
இரவில் பனிப்பொழிவின் தாக்கமும் அதிகரித்து வருவதையும் பார்க்க
முடிகிறது என்கிறார்கள் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

பொழியும். இந்த வருடம் அதிகமாகவே பொழிகிறது. எங்கள் தகரவீடுகளில் இரவு நேரங்களில் கம்பளி ஆடைகளை உடுத்தி மற்றும் 2
கம்பளிகள் வரை போர்த்திக்கொண்டு உறங்குவதே, கடும் குளிரிலிருந்து எங்களுக்கு பாதுகாப்பு
2023-24 டிசம்பர் ஜனவரியில் பகல் நேரத்தில் 16 டிகிரியிலிருந்து 23
டிகிரி வரையும் இரவு நேரத்தில் 5 டிகிரியிலிருந்து 10 டிகிரி வரையும்
வெப்பநிலை இருந்தது. 1924-25இல் இதே காலகட்டத்தில் பகலில் 20-22
டிகிரியும் இரவில் 9லிருந்து 11 டிகிரியும் இருந்தது. 2025-26இல் பகலில்
20-22 டிகிரியும் இரவில் -3 டிகிரி செல்ஸியஸும் இருந்தது” என்பதைப்
புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நீலகிரியையும் அதைச் சுற்றியுள்ள
பகுதிகளிலும் பொழிந்த உறைப் பனியால் விவசாயம்
பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகிறார்கள். இந்த
மலைப் பகுதியில் முக்கியமான தொழில் விவசாயம்.. கேரட், பீட்ரூட் ,
முட்டைகோஸ், பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை முக்கிய
விவசாயப் பயிர்கள். உறைபனி காரணமாக இந்த ஆண்டு
உருளைக்கிழங்கு. முட்டைகோஸ் உற்பத்தி பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளது. மலைப் பள்ளத்தாக்கில் சூரிய ஒளி எளிதில் படாத
தாழ்வான பகுதிகளில் பயிர் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு,
முட்டைகோஸ் போன்ற பயிர்கள் உறை பனி காரணமாக சேதமடைந்து
விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளன. மலையில்
உயர்வான பகுதியில் பெரும்பாலும் இந்த அளவுக்குப் பாதிப்பு
ஏற்படவில்லை. இந்த வருஷம் பெய்த பனி எங்க விவசாயத்தை கருக்கிருச்சு" என்கிறார்
பிங்கர் போஸ்ட் என்ற இடத்தில் விவசாயம் செய்து வரும் கண்ணன் (48).
அவரது நிலத்திலும் முட்டை கோஸின் இலைகள் உறைபனியால் கருகிக்
கிடந்ததைக் காட்டி வருத்தப்பட்டார்.
Image 2506 (பிங்கர்போஸ்ட் பகுதியில் முட்டை கோஸ் பயிரிட்டிருந்தபோது
உறைபனி விழுந்து கருகிப்போனது).
கேரட் விவசாயம் செய்யும் விவசாயிகள் பொதுவாக நள்ளிரவு 2 மணி
முதல் காலை 5 மணி வரை பயிரெடுப்பார்கள். அப்போதுதான் அதன்
தன்மையும் குறையாமல் சந்தையில் நல்ல விலைக்கும் விற்கும். இந்த
பனிப்பொழிவின் காரணமாக, உறைபனி அதிக அளவில் இருந்ததால்,
யாராலும் சரியான நேரத்தில் கேரட்டை பயிரெடுக்க முடியவில்லை
“நீலகிரியையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பனிப்பொழிவினால்
உறைபனி அதிகமாகும் சூழ்நிலையில் இங்குள்ள நிலவளம் பெரிதும்
பாதிக்கப்படுவதால், விவசாயமும் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம்
உள்ளது” என்கிறார் இந்துஸ்தான் போட்டோ பிலிம் பேக்டரி பகுதியைச்
சேர்ந்த நந்தகிஷோர்(28) .
2016-17 ஆண்டுகளில் கடும் வறட்சி நிலவிய கால கட்டத்தில்
வெப்பநிலை உயர்வு காரணமாக பனிப்பொழிவும் தாமதமாகியது
என்பதையும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
உறைபனிப்பொழிவின் பாதிப்பை தொடர்ந்து நீலகிரி மாவட்டம்
சந்திக்கும் மிகப்பெரிய பாதிப்பு வறட்சி. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம்
முதல் மே மாதம் வரை இதுவரை இல்லாத அளவுக்கு 29 டிகிரி
செல்சியஸ் வெப்பம் தாக்கியது. மசினகுடியில் 31.3° செல்சியஸ் வெப்பம்
பதிவாகியுள்ளது. அதன் தாக்கத்தால் நீர்நிலைகள் வறண்டு போயின.
காடுகளாலும் வனவிலங்குகளாலும் அழகு சேர்த்த முதுமலையும்
மசினகுடியும் மஞ்சள் மற்றும் காப்பி வண்ண போர்வை போர்த்தியது
போல காட்சியளித்தது.

விவசாயம் செய்வதற்காக நிலங்களை உழுதுவிட்டு விதைப்புக்காக
மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தார்கள். 2024 ஆம் ஆண்டு
ஏற்பட்ட வறட்சியின் போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான
அணைகளான குந்தா அணையிலும் போர்த்தியாடா அணையிலும்
நீர்வரத்து குறைந்து போனதையும் அதனால் அணையைச் சுற்றியுள்ள
விவசாய நிலங்களில் பயிர்களுக்கு பதிலாக வெறும் செம்மண் காடாகக்
கிடந்ததையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
“அணையின் கரையிலேயே விவசாய நிலம் இருந்தாலும்கூட,
விவசாயத்துக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. மோட்டார் வைத்து
தண்ணீர் எடுத்து நிலத்துக்குப் பாய்ச்சுவது அதிக செலவு பிடிக்கும் விஷயம்.
இதனால் சில விவசாயிகள் கடன் வாங்கி அதனை அடைக்க முடியாமல் திணறுகின்றனர். அதனால், பலர் விவசாயம் செய்வதையே விட்டுவிட்டனர்” என்கிறார் அப்பகுதியில் விவசாயம் செய்யும் தனுஷ். வறட்சியின் போது காடுகளில் உள்ள ஏரிகளில் நீர் குறைந்து போனதால்
மக்களின் குடியிருப்பு பகுதிகளில் சேமித்து வைத்திருக்கக்கூடிய நீரை குடிக்கவும், குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் உணவுகளுக்காகவும் வனவிலங்குகள் காட்டிலிருந்து கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து, ஊர் பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு அருகில் சுற்றித் திரிந்தன. 100 மீட்டர் தொலைவில் ஆட்களைப் பார்த்ததும் ஓடிவிடும் புள்ளி மான்கள், வறட்சியினால் தண்ணீர் தேடி மக்கள் இருக்கும் பகுதிகளுக்கு வருவதைப்
பார்க்க முடியும்.
யானைகள் இரவு நேரங்களில் ஊர்களில் உள்ள நியாய விலை கடைகளை உடைத்து அரிசிப் போன்ற பொருட்களை சாப்பிட தொடங்கிவிட்டன.
இரவு நேரங்களில் உணவுதேடி ஊருக்குள் நுழையும் யானைகளால் அந்தப் பகுதி மக்கள் இரவு நேரங்களிலும் பயந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக 10 மாடுகள் வரை இறந்து போனததாக பொக்காபுரம் மக்கள் கூறுகிறார்கள். மசினகுடியிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மாடுகளின் இறப்பு எண்ணிக்கை அதிகம். உடல்நிலை மோசமான ஒரு சில கால்நடைகள் குறைவான விலைகளுக்கு ஊர் மக்கள் விற்ற வேண்டிய அவலநிலைக்கு ஆளாகியுள்ளனர். வறட்சி காலத்தில் இது அடிக்கடி நிகழும் சம்பவமாகிவிட்டது.

குடிப்பதற்குக் குழாய்களில் தண்ணீர் வராத சமயங்களில் மசினகுடி ஆற்றிலிருந்து பணம் கொடுத்துத் தண்ணீர் கொண்டு வர வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கிறோம்” என்கிறார்கள் பொக்காபுரம் கிராமவாசிகள்.

நீலகிரிப் பகுதியில் ஆண்டுதோறும் வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எமரால்டு மற்றும் அவலாஞ்சி போன்ற முக்கிய அணைகளிலே தண்ணீர் குறைந்து வருகிறது. தற்போது நீலகிரியைச் சுற்றிலும் குடிநீர் வசதிக்காக `போர்’ போடுவதற்கு எங்கும் அனுமதி இல்லை. பழைய `போர்’ வைத்திருப்பவர்களுக்கும் நிலத்தடி நீர் தேவையான அளவிற்கு வருவதில்லை” என்கிறார் பாலடாவைச் சேர்ந்த பரத்.

வறட்சி காரணமாக மார்ச் முதல் மே மாதம் முதல் இரண்டு வாரங்கள் வரை விவசாயமும் மேய்ச்சல் தொழிலும் பாதிக்கப்படுவதால், பலர் தங்களது வாழ்வாதாரத்துக்காக நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலைக்குப்போக வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் சோலை காடுகளால் சூழ்ந்து காணப்படும் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. ஆங்கிலேயர் காலத்தில் சோலைக்காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. அத்துடன் தோட்டங்களில் நடப்பட்ட அயலின மரங்களால் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது. இதனால் சோலை காடுகளில் இருந்து நீர் வரத்து குறைந்து வருகிறது. மேலும் அந்த சோலை காடுகளை நம்பி உள்ள பகுதிகளை வறட்சி பாதிக்க தொடங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து புவி வெப்பமயமாதலால் உறைபனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரும் அறம் திணை அமைப்பின் நிறுவனருமான கார்த்திக் குணசேகரன்.
இந்த ஒழுங்கற்ற அதீத மழைப்பொழிவு, அதீத உறைபனி, கடும் வறட்சி போன்றவை விவசாயத்தைப் பாதிப்பதோடு, நீலகிரியின் தனித்துவமான சூழலியலையும் பாதிக்கிறது. இதனால், விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருவதைப் பார்க்க முடிகிறது.
மட்டுமீறிய நுகர்வுப் போக்கு வாழ்க்கை முறையாக பரிணமித்து விட்டதும், வளங்களை வரம்பின்றி சூறையாடும் அபத்தமும்தான் சுற்றுச்சூழலின் முக்கிய எதிரிகளாகத் திகழ்கின்றன” என்கிறார் ஃபிடல் காஸ்த்ரோ. இந்த எதிரிகளின் தாக்கம் உலக வெப்பமயமாதலுக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் காரணமாகி நீலகிரியையும் பாதிக்கத் தொடங்கிவிட்டது நிகழ்கால அவலம். நீலகிரி உயிர் கோளத்தைப் பாதுகாக்க இப்போதே செயல்பட வேண்டிய நேரம் இது.





